27.12.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.12.86     Om Shanti     Madhuban


உங்களின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையாக்குவதற்கான வழிமுறை.


இன்று, முப்பாட்டனாரான பிரம்மாவும், தந்தையான கடவுளான சிவனும் தமது இனிமையான, அதிகபட்ச அன்பான குழந்தைகளுக்குத் தமது இதயபூர்வமான ஆசீர்வாதங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு நீண்ட காலம் தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தையும் எத்தனை மேன்மையானவரும் மகத்தானவரும் என்பதை பாப்தாதா அறிவார். ஒவ்வொரு குழந்தையின் மகத்துவமும் தூய்மையும் தொடர்ந்து வரிசைக்கிரமமாகத் தந்தையை வந்தடைகின்றன. இன்று, நீங்கள் அனைவரும் குறிப்பாகப் புது வருடத்தை ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள். உலகிலுள்ள மக்கள் கொண்டாடுவதற்காகப் புது தீபங்களை அல்லது மெழுகுதிரிகளை ஏற்றுவார்கள். அவற்றில் ஒளியேற்றுவதன் மூலம் அவர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், பாப்தாதாவோ ஏற்கனவே ஒளியேற்றப்பட்ட எண்ணற்ற தீபங்களுடன் புதுவருடத்தைக் கொண்டாடுகிறார். அவர் அணைந்த தீபங்களை ஒளியேற்றவில்லை. அல்லது ஒளிர்விடும் தீபங்களை அணைக்கவில்லை. வேறு எவரும் அன்றி, தந்தையும் குழந்தைகளான உங்களாலுமே புதுவருடத்தை இந்த முறையில் நூறாயிரக்கணக்கான ஒளியேற்றப்பட்ட, ஆன்மீக விளக்குகளின் ஒன்றுகூடலில் கொண்டாட முடியும். இது, ஜொலிக்கும் தீபங்களின் ஆன்மீக ஒன்றுகூடலின் அழகானதொரு காட்சியாகும். ஒவ்வொருவரின் ஆன்மீக தீபமும் எப்போதும் நிலையாகவும் ஒளிர்விடுகின்றன. ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள ‘ஒரேயொரு பாபா’ என்பது ஆன்மீக தீபங்களான உங்களைப் பிரகாசிக்கச் செய்கிறது. உங்களிடம் ஓர் உலகம் உள்ளது. உங்களிடம் ஓர் எண்ணம் உள்ளது. அத்துடன் உங்களிடம் நிலையான, ஸ்திரமான ஸ்திதி உள்ளது. இதுவே கொண்டாடுதல் எனப்படுகிறது. இதுவே அவ்வாறு ஆகுவதுடன், மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குதல் என்பதன் அர்த்தம். இந்த வேளையில், இது விடைபெறுவதனதும் (விடாய்) வாழ்த்துக்களினதும் (பதாய்) சங்கமம் ஆகும். பழையவற்றுக்கு விடைகொடுத்தல். புதியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் இந்த சங்கமத்தில் வந்துள்ளீர்கள். ஆகவே, உங்களின் பழைய எண்ணங்களுக்கும் சம்ஸ்காரங்களுக்கும் விடை கொடுப்பதற்குப் பாராட்டுக்கள். அத்துடன் புதிய ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பறப்பதற்கு வாழ்த்துக்கள்.

குறுகிய காலத்தின் பின்னர், நிகழ்கால இந்தக்கணம் கடந்தகாலமாகிவிடும். இப்போது கடந்து செல்லும் இந்த வருடம், நள்ளிரவின் பின்னர் கடந்தகாலம் ஆகிவிடும். இப்போது என்ற கணம் (இன்று) நிகழ்காலம் என்று அழைக்கப்படுகிறது. நாளை என்பது எதிர்காலம் ஆகும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்திற்கான நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மூன்று வார்த்தைகளையும் இந்தப் புது வருடத்தில் புது முறையில் பயன்படுத்துங்கள். எவ்வாறு? திறமைச்சித்தியுடன் எப்போதும் சித்தி எய்துவதன் மூலம் கடந்தகாலம் கடந்து செல்லட்டும். ஆமாம், அது ‘கடந்தது கடந்து சென்று விட்டது’ என்றே உள்ளது. ஆனால், நீங்கள் அதை எவ்வாறு கடந்து செல்லப் போகின்றீர்கள்? காலம் கடந்து சென்றது, இந்தக் காட்சி கடந்து சென்றது என நீங்கள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், திறமைச் சித்தி எய்தியவண்ணம் நீங்கள் அதைக் கடந்து சென்றீர்களா? கடந்ததை நீங்கள் கடந்ததாக ஆக்கினீர்கள். ஆனால், கடந்தகாலத்தை நினைத்ததுமே, உங்களின் இதயத்தில் இருந்து ‘ஆஹா, ஆஹா!’ என்ற வார்த்தைகள் வெளிவரும் வகையில் நீங்கள் கடந்த காலத்தை மேன்மையான முறையில் கடந்து வந்தீர்களா? மற்றவர்கள் உங்களின் கடந்தகாலக் கதையில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நீங்கள் கடந்த காலத்தைக் கடந்ததாக ஆக்கினீர்களா? உங்களின் கடந்தகாலம் ஒரு ஞாபகார்த்தம் ஆகவேண்டும். அது ஒரு பக்திப் பாடலாக (கீர்த்தனை) ஆகவேண்டும். அதாவது, பக்தி மார்க்கத்தில் பக்தர்கள் உங்களின் செயல்களைப் பற்றிய பக்திப் பாடல்களைத் தொடர்ந்து பாடுவதைப் போல், அது புகழ்ந்து பாடுவதற்குத் தகுதியாக இருக்க வேண்டும். உங்களின் செயல்களின் புகழ்ச்சிப் பாடல்கள் இப்போதும் ஆத்மாக்கள் பலரின் வாழ்வாதாரங்களை உருவாக்குகின்றன. இந்தப் புது வருடத்தில், ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு கணமும் இந்த முறையில் கடந்த காலமாக ஆகவேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா?

இப்போது, நிகழ்காலத்திற்கு வாருங்கள். விசேட ஆத்மாக்களான உங்களிடமிருந்து அனைவரும் ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஏதாவதொரு பரிசைப் பெறும் வகையில் இந்த நிகழ்காலத்தை நடைமுறையானது ஆக்குங்கள். மனிதர்கள் அதிக சந்தோஷத்தை எப்போது அனுபவம் செய்கிறார்கள்? அவர்கள் யாராவது ஒருவரிடமிருந்து ஒரு பரிசைப் பெறும்போதே. அவர்கள் எவ்வளவுதான் அமைதியற்றவர்களாகவும் துன்பம் நிறைந்தவர்களாகவும் அல்லது மன அழுத்தத்துடனும் இருந்தாலும், அவர்களுக்கு அன்புடன் ஒரு பரிசை வழங்கியதும், அந்தக் கணத்தில் ஒரு சந்தோஷ அலை ஏற்படுகிறது. அது மேலோட்டமான பரிசு அல்ல. ஆனால், இதயபூர்வமாகக் கொடுக்கப்படும் பரிசாக இருக்க வேண்டும். அனைவரும் ஒரு பரிசை அன்பின் சின்னமாகவே கருதுகிறார்கள். ஒரு பரிசாகக் கொடுக்கப்பட்ட எதனுடைய பெறுமதியும் அந்தப் பொருளினால் அன்றி, எவ்வளவு அன்புடன் அது கொடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்தே உள்ளது. ஆகவே, பரிசுகளைக் கொடுக்கும் வழிமுறையால் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இது இலகுவானதா அல்லது கஷ்டமானதா? உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் நிறைந்துள்ளது, இல்லையா? அல்லது, பரிசுகளைக் கொடுப்பதன் மூலம், உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் குறைந்துவிடுமா? நீங்கள் சிறிதளவு களஞ்சியத்தைச் சேமித்துள்ளீர்கள், இல்லையா? அன்புடன் ஒரு விநாடி திருஷ்டி, அன்புடன் ஒத்துழைப்பு, அன்பான உணர்வுகள், இனிமையான வார்த்தைகள், உங்களின் இதயபூர்வமான மேன்மையான எண்ணங்கள் என்ற பரிசுகளை வழங்குங்கள். இந்தப் பரிசுகள் போதுமானவை. தற்காலத்தில், பிராமண ஆத்மாக்களான உங்களின் பக்தர்கள், உங்களுடன் தொடர்பிலும் உறவுமுறையிலும் இருப்பவர்கள், மனவிரக்தியுடன் இருக்கும் ஆத்மாக்கள் அனைவருக்கும் இந்தப் பரிசுகளே தேவைப்படுகின்றன. ஏனைய பரிசுகள் அல்ல. உங்களிடம் இவற்றின் களஞ்சியம் இருக்கிறதல்லவா? எனவே, ஒவ்வொரு நிகழ்காலக் கணமும் கடந்தகாலமாக மாறிக் கொண்டிருக்கும்போது, அருள்பவர்கள் ஆகுங்கள். சகல வகையான ஆத்மாக்களும் தொடர்ந்து உங்களின் புகழைத் தமது இதயபூர்வமாகப் பாடுவார்கள். அச்சா.

எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனைவரும் உங்களைக் கேட்கிறார்கள்: இறுதியில், எதிர்காலம் என்னவாக இருக்கும்? உங்களின் முகச்சாயல்களின் மூலம் எதிர்காலத்தை வெளிப்படுத்துங்கள். உங்களின் முகச்சாயல்கள் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும்? எதிர்காலத்தில் மக்களின் கண்கள் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் புன்னகை எவ்வாறிருக்கும்? எதிர்காலத்தில் உறவுமுறைகள் எவ்வாறு இருக்கும்? வாழ்க்கை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? உங்களின் முகச்சாயல்கள் இவை அனைத்தின் காட்சியையும் அருள வேண்டும். உங்களின் திருஷ்டி, எதிர்கால உலகைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். ‘என்ன நிகழும்?’ என்ற கேள்வி முடிவிற்கு வந்து, ‘இது இவ்வாறே இருக்கும்’ என்று மாற வேண்டும். ‘எவ்வாறு?’ என்ற வார்த்தை மாறி, ‘இவ்வாறே’ என்று ஆக வேண்டும். எதிர்காலத்தில் தேவர்கள் இருப்பார்கள். தேவரின் சம்ஸ்காரங்கள் என்றால், அருள்பவரின் சம்ஸ்காரங்கள் என்று அர்த்தம். அருள்பவரின் சம்ஸ்காரங்கள் என்றால் கிரீடம் தரித்து, சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரின் சம்ஸ்காரங்கள் என்று அர்த்தம். உங்களைப் பார்க்கும் எவரும் உங்களின் கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். எந்தக் கிரீடம்? உங்களை சதா இலேசாக வைத்திருக்கச் செய்யும் ஒளிக்கிரீடம். உங்களின் செயல்களிலும் வார்த்தைகளிலும் எப்போதும் ஆன்மீக போதையினதும் கவலையற்ற ஸ்திதியினதும் அடையாளங்கள் புலப்பட வேண்டும். சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதன் அடையாளம், கவலையற்றவராக இருப்பதுடன் போதையையும் கொண்டிருப்பதாகும். வெற்றிக்கு உத்தரவாதம் இருக்கும் போதையும், கவலையற்ற ஸ்திதியுமே, தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாவின் அடையாளமாகும். வருகின்ற எவரும், நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதையும், கிரீடம் அணிந்த உங்களின் ஸ்திதியையும் அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் முகச்சாயல்களினூடாக எதிர்காலத்தை வெளிப்படுத்துதல் என்பதன் அர்த்தம் இதுவே ஆகும். இந்த முறையில் புது வருடத்தைக் கொண்டாடுங்கள். அதாவது, இவ்வாறு ஆகி, மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குங்கள். புதிய வருடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? மூன்று வார்த்தைகளில் மாஸ்ரர் திரிமூர்த்தி, மாஸ்ரர் திரிகாலதரிசி, திரிலோகிநாத் ஆகுங்கள். இப்போது, நாம் என்ன செய்யப் போகிறோம்? என அனைவரும் எண்ணுகிறார்கள். உங்களின் ஒவ்வோர் அடியினூடாகவும், அது நினைவினூடாகவோ அல்லது சேவையினூடாகவோ, தொடர்ந்து மூன்று வழிமுறைகளிலும் வெற்றி பெறுங்கள்.

புது வருடத்திற்காக உங்களுக்குள் அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் இருக்கிறதல்லவா? இரட்டை வெளிநாட்டவர்களுக்கு இரட்டை உற்சாகம் உள்ளது. புது வருடத்தைக் கொண்டாடுவதற்கு நீங்கள் எத்தனை வசதிகளைப் பயன்படுத்துவீர்கள்? அந்த மக்கள் அழியக்கூடிய வசதிகளைப் பயன்படுத்தி, தற்காலிகக் களிப்பை அனுபவம் செய்கிறார்கள். ஒரு கணம், அவர்கள் மெழுகுதிரியை ஏற்றுவார்கள். அடுத்தகணம், அவர்கள் அதை ஊதி அணைப்பார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா அநாதியான வெற்றியைப் பெறும் குழந்தைகளான உங்களுடன் அநாதியாகக் கொண்டாடுகிறார். நீங்கள் அனைவரும் என்ன செய்வீர்கள்? கேக் வெட்டுவீர்கள். மெழுகுதிரிகளை ஏற்றுவீர்கள். பாடல்கள் பாடுவீர்கள். கைதட்டுவீர்கள். இதையும் அதிகளவில் செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்யலாம். எவ்வாறாயினும், பாப்தாதா எப்போதும் அநாதியான குழந்தைகளுக்கு அழியாத வாழ்த்துக்களைத் தெரிவித்து, உங்களை அழியாதவர்கள் ஆக்குவதற்கான ஒரு வழிமுறையையும் காட்டுகிறார். பௌதீக உலகில் பௌதீக வைபவங்களை நீங்கள் கொண்டாடுவதைப் பார்த்து பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஏனென்றால், கல்பம் முழுவதிலும் ஒரேயொரு தடவையே உங்களுக்கு இத்தகையதொரு அழகான குடும்பம் கிடைத்துள்ளது. நூறாயிரக்கணக்கானவர்களைக் கொண்டுள்ள இந்த முழுக் குடும்பத்திலும் அனைவருமே ஒரு கிரீடத்தை அணிந்திருப்பதுடன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் விரும்பிய அளவிற்கு ஆடிப் பாடுங்கள். தோளியை உண்ணுங்கள். தந்தை குழந்தைகளைப் பார்ப்பதிலும் அவை அனைத்தின் நறுமணத்தை எடுத்துக் கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொருவரின் மனதிலும் என்ன பாடல்கள் ஒலிக்கின்றன? சந்தோஷப் பாடல்கள் ஒலிக்கின்றன. எப்போதும், ‘ஆஹா, ஆஹா! ஆஹா பாபா! ஆஹா எனது பாக்கியமே! ஆஹா எனது இனிமையான குடும்பமே! ஆஹா, மேன்மையான சங்கமயுகத்தின் அழகான நேரமே!’ என்ற பாடல்களைப் பாடுங்கள். ஒவ்வொரு செயலும் ‘ஆஹா, ஆஹா!’ தொடர்ந்து, ‘ஆஹா, ஆஹா!’ என்ற பாடலைப் பாடுங்கள். இன்று, சில குழந்தைகள் ‘ஆஹா, ஆஹா’ என்ற பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, ஏனைய பாடல்களைப் பாடுகிறார்கள் என்பதைப் பார்த்து பாப்தாதா புன்னகைத்தார். அவை இரண்டு வார்த்தைகளுக்கான பாடல்கள். அவை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வருடம், அந்த இரண்டு வார்த்தைகளின் பாடல்களைப் பாடாதீர்கள். அந்த இரண்டு வார்த்தைகளும், ‘ஏன்?’ மற்றும் ‘நான்’ என்பவையே. பொதுவாக, பாப்தாதா குழந்தைகளின் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் ‘ஆஹா, ஆஹா’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘ஏன்? ஏன்?’ என்றே சொல்கிறார்கள். எனவே, ‘ஏன்?’ என்பதற்குப் பதிலாக, ‘ஆஹா, ஆஹா’ என்று சொல்லுங்கள். ‘நான்’ என்பதற்குப் பதிலாக, ‘பாபா, பாபா’ என்று சொல்லுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் யாராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், பாப்தாதா உங்களை நேசிக்கிறார். இதனாலேயே, நீங்கள் அனைவரும் அன்புடன் பாபாவைச் சந்திப்பதற்காக ஓடோடி வந்துள்ளீர்கள். அமிர்த வேளையில், குழந்தைகள் அனைவரும், ‘அன்பான பாபா, இனிமையான பாபா’ என்ற பாடலைப் பாடுகிறார்கள். அதற்குப் பதிலாக, பாப்தாதாவும், ‘அன்பான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே’ என்ற பாடலைப் பாடுகிறார். அச்சா. உண்மையில், இந்த வருடம் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆகும் பாடத்தைக் கற்பதற்கான வருடமாகும். எவ்வாறாயினும், குழந்தைகள் அன்புடன் தந்தையை அழைப்பது, அவரை நியாரி (பற்றற்ற, தனித்துவ) உலகில் இருந்து பியாரி (அன்பான) உலகிற்கு அழைத்து வருகிறது. இவை அனைத்தையும் சூட்சும ரூபத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூட்சும ரூபத்தில் சந்திக்கும்போது, பாபா எல்லையற்ற குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே வேளையில் எல்லையற்ற சந்திப்பின் உணர்வைக் கொடுக்கிறார். பௌதீக முறையில், இன்னமும் எல்லைகள் உள்ளன. குழந்தைகளுக்கு என்னதான் தேவைப்படுகிறது? முரளியும் திருஷ்டியும். பாபா முரளியைப் பேசும்போது, அதுவும் ஒரு சந்திப்பே. பாபா தனிப்பட்டவர்களுடன் பேசும்போதோ அல்லது அனைவருடனும் பேசும்போதோ, பாபா ஒரே விடயத்தையே கூறப் போகிறார். பாபா ஓர் ஒன்றுகூடலுக்கு என்ன கூறுகிறாரோ, அதையே அவர் தனிப்பட்ட நபர்களுக்கும் கூறுவார். எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அச்சா. குழந்தைகள் 35 அல்லது 36 நாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். இதுவும் 36 வகையான போக் ஆகும். 36 என்ற இலக்கத்தி;ன் ஞாபகார்த்தம் உள்ளது. எனவே, குறைந்தபட்சம் 36 வகைகள் உள்ளன.

குழந்தைகளான உங்களிடம் சேவைக்காக உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கண்டு பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அனைவருமே அன்புடனும் தைரியமாகவும் உங்களின் சரீரம், மனம், செல்வம், நேரத்தைச் சேவைக்காகப் பயன்படுத்தினீர்கள். ஆகவே, அதற்காக பாப்தாதா உங்களுக்குப் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் பௌதீகமாக பாப்தாதாவின் முன்னால் இருந்தாலென்ன அல்லது சூட்சும ரூபத்தில் இருந்தாலென்ன, மிகுந்த அன்புடன் சேவையில் மூழ்கியிருந்ததற்காக பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் பாராட்டுகிறார். நீங்கள் ஒத்துழைப்பவர்கள் ஆகி, மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்தீர்கள். ஆகவே, ஒத்துழைப்பதுடன் மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்ததற்கு இரட்டைப் பாராட்டுக்கள். குழந்தைகளின் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த சேவைச் செய்தியின் மாலையும், ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த அவர்களின் புது வருட வாழ்த்து மடல்களும் பாப்தாதாவின் கழுத்தில் போடப்பட்டுள்ளன. யாரெல்லாம் வாழ்த்து மடல்களை அனுப்பி இருக்கிறீர்களோ, அந்த வாழ்த்து மடல்களுக்குப் பதிலாக, பாப்தாதா மரியாதை மற்றும் அன்பு என்ற இரண்டையும் வழங்குகிறார். செய்திகள் அனைத்தையும் கேட்கும்போது பாபா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் மறைமுகமாகவோ அல்லது புலப்படும் முறையிலோ சேவை செய்திருந்தாலும், எப்போதும் தந்தையை வெளிப்படுத்தும் சேவையில் வெற்றி இருக்கும். அன்புடன் சேவை செய்வதன் பெறுபேறு - ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் ஆகித் தந்தையின் பணியில் நெருக்கமாகுதல் - வெற்றியின் அடையாளமாகும். ஒத்துழைப்பவர்கள், இன்று ஒத்துழைப்பார்கள். நாளை, அவர்கள் யோகிகள் ஆகுவார்கள். எனவே, எங்கும் உள்ள ஆத்மாக்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்கும் விசேட சேவையைச் செய்தவர்களுக்கு பாப்தாதா, ‘நீங்கள் அநாதியாக வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். அச்சா.

உங்களின் பிரஜைகளின் - உங்களுடன் ஒத்துழைப்பவர்களும் ஓர் உறவுமுறையில் இருப்பவர்களும் - எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அது அதிகரிப்பதற்கேற்ப, வழிமுறையும் மாறவேண்டியுள்ளதல்லவா? நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? அது அதிகரிக்கட்டும்! அச்சா.

சதா அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பதுடன், மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்பவர்களுக்கும், எப்போதும் வாழ்த்துக்களைப் பெறுபவர்களுக்கும், ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் அனைத்திலும் அதிமேன்மையானதாகவும் புகழத்தகுதியானதாகவும் ஆக்குபவர்களுக்கும், சதா அருள்பவர்களாகி, மற்றவர்களுக்கும் அன்பையும் ஒத்துழைப்பையும் வழங்குபவர்களுக்கும், இத்தகைய மேன்மையான, மகத்தான, பாக்கியசாலி ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் இந்த சங்கமத்தில் இரவு வணக்கமும் காலை வணக்கமும் உரித்தாகட்டும்.

வெளிநாட்டு சேவையில் இருக்கும் ஆசிரியர்களுடன் அவ்யக்த பாப்தாதா பேசுகிறார்:
பாப்தாதா எப்போதும் கருவி சேவையாளர் ஆசிரியர்களை, ‘நீங்கள் சமமானவர் ஆகுவீர்களாக!’ என்ற ஆசீர்வாதத்துடன் முன்னேறச் செய்கிறார். சகல பாண்டவர்களும் சக்திகளும், அவர்கள் எந்தச் சேவைக்குக் கருவிகளாக இருந்தாலும், அவர்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலி, மேன்மையான ஆத்மாக்கள் என்றே பாப்தாதா எப்போதும் நினைக்கிறார். நீங்கள் நிச்சயமாகக் குறிப்பாக சேவையின் புலப்படும் பலனை சந்தோஷம் மற்றும் சக்தியின் ரூபத்தில் அனுபவம் செய்வீர்கள். இப்போது, எந்தளவிற்கு நீங்கள் சக்திவாய்ந்த வெளிச்சவீடுகளாகவும் சக்திவீடுகளாகவும் ஆகிச் சேவை செய்கிறீர்களோ, அதற்கேற்ப வெளிப்படுத்துகைக்கான கொடி எங்கும் ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு கருவி சேவையாளரும் சேவைக்கான வெற்றிக்காக இரண்டு விடயங்களில் விசேட கவனம் செலுத்த வேண்டும். 1) எப்போதும் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் ஒற்றுமையைக் கொண்டிருங்கள். ஏனென்றால் இந்தச் சிறப்பியல்பு ஒவ்வோர் இடத்திலும் புலப்பட வேண்டும். 2) அனைத்திற்கும் முதலில், கருவி சேவையாளர்களான நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு சான்றிதழ்களையும் உங்களுக்கே கொடுக்க வேண்டும். 1. ஒற்றுமை. 2. திருப்தி. சம்ஸ்காரங்கள் எப்போதும் வேறுபட்டவை. அவை எப்போதும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனால், சம்ஸ்காரங்களில் முரண்பாடு இருக்க வேண்டுமா அல்லது நீங்கள் அப்பால் நகர்ந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது உங்களைப் பொறுத்தவிடயம். ஏதாவது நிகழும்போது, ஒரு நபரின் சம்ஸ்காரங்கள் அவ்வாறிருந்தால், அடுத்த நபர் கைதட்டக்கூடாது (அதற்குப் பதில் அளிக்கக்கூடாது). மற்ற நபர் மாறுகிறாரோ இல்லையோ, உங்களால் மாற முடியும், இல்லையா? நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களே மாறி, ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கிரகித்தால், அந்த நபரின் சம்ஸ்காரங்கள் நிச்சயமாகக் குளிர்ந்து விடும். எனவே, எப்போதும் ஒருவருக்கொருவர் அன்பும் மகத்துவமும் என்ற உணர்வுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால், கருவி சேவையாளர்களே தந்தையின் ரூபத்தின் கண்ணாடிகள் ஆவார்கள். எனவே, உங்களின் நடைமுறை வாழ்க்கை, தந்தையின் ரூபத்தின் கண்ணாடி ஆகுகிறது. எனவே, எப்போதும் தந்தையை அவர் எத்தகையவரோ, என்ன செய்கிறாரோ அதைப் புலப்படுத்தும் வாழ்க்கையின் கண்ணாடியாக இருங்கள். இல்லாவிட்டால், நீங்கள் அனைவரும் மிக நல்ல முயற்சியையே செய்கிறீர்கள். உங்களுக்கு நல்ல தைரியமும் உள்ளது. சேவையின் விரிவாக்கத்திற்கான நல்ல உற்சாகம் உங்களிடம் உள்ளது. அதனால் விரிவாக்கமும் இடம்பெறுகிறது. சேவை நன்றாக உள்ளது. ஆனால், இப்போது தந்தையை வெளிப்படுத்துவதற்காக, எப்போது உங்களின் நடைமுறை வாழ்க்கையின் அத்தாட்சியைக் காட்டுங்கள். அப்போது அனைவரும் ஒரே விடயத்தையே கூறுவார்கள்: ஞானத்தைத் தாரணை செய்தல் என்று வரும்போது, நீங்கள் அனைவரும் ஒன்றே. அத்துடன் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பதிலும் நீங்கள் முதலாம் இலக்கத்தில் உள்ளீர்கள். இந்தியாவிலுள்ள ஆசிரியர்கள், வெளிநாடுகளிலுள்ள ஆசிரியர்களைவிட வேறுபட்டவர்கள் என்பதல்ல. அனைவரும் ஒன்றே. நீங்கள் அனைவரும் சேவைக்கான கருவிகள். ஸ்தாபனைக்கான பணியில் ஒத்துழைக்கிறீர்கள். நீங்கள் இப்போது உங்களின் ஒத்துழைப்பையும் கொடுக்கிறீர்கள். எனவே, நீங்கள் இயல்பாகவே அனைத்திலும் ஒரு விசேடமான பாகத்தை நடிக்க வேண்டும். உண்மையில், பாப்தாதாவும் கருவி ஆத்மாக்களும் வெளிநாட்டில் இருப்பவர்களிடமும் அல்லது இங்கிருப்பவர்களிடமும் எந்தவிதமான வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. ஒருவரின் சிறப்பியல்பிற்கான தேவை எங்கு உள்ளதோ, அவர் யாராக இருந்தாலும், அவரின் சிறப்பியல்பால் அங்கு நன்மை ஏற்படும். ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தல், பிராமண குலத்தின் ஒழுக்கக் கோட்பாடாகும். அன்பைப் பெற்று மரியாதையைக் கொடுங்கள். ஒரு நபரிற்குப் பதிலாக, அவரின் சிறப்பியல்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் பெறுமதி மிக்க முறையில் பயன்படுத்தும் விலைமதிப்பற்றதோர் இரத்தினம் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடிக்கும் மகத்தான பெறுமதி உள்ளது. ஒன்றிக்குப் பதிலாக, நீங்கள் நூறாயிரத்தைப் பெறுவதைப் போல், ஒரு விநாடியையேனும் வீணாக்கினால், நூறாயிரம் வீணாகிப் போகிறது. எனவே, இந்தளவு கவனம் செலுத்தி, கவனக்குறைவாக இருப்பதை முடித்துவிடுங்கள். தற்சமயம், எதற்கும் கணக்கு வைப்பதற்கு எவருமில்லை. ஆனால், சிறிது காலத்தின் பின்னர், வருந்துகை ஏற்படும். ஏனென்றால், இந்த நேரத்திற்கு அதிக பெறுமதி உள்ளது. தமது ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் விலைமதிப்பற்ற முறையில் பயன்படுத்துபவர்கள், விலைமதிப்பற்ற இரத்தினங்கள் ஆகுகிறார்கள்.

சுலோகம்:
எப்போதும் யோகியுக்தாக இருப்பவர்கள் ஒத்துழைப்பைப் பெறுவதுடன் வெற்றி இரத்தினங்களாகவும் ஆகுவார்கள்.