29.11.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    23.01.87     Om Shanti     Madhuban


வெற்றி நட்சத்திரங்களின் சிறப்பியல்புகள்.


இன்று, ஞான சூரியனும் ஞானச் சந்திரனும் தமது பிரகாசிக்கும் அண்ட வெளியைப் பார்க்கிறார்கள். அவை ஆகாயத்தின் நட்சத்திரங்கள். இவையோ பூமியின் நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் இயற்கையின் ஒரு பாகம். இவர்களோ இறை நட்சத்திரங்கள், ஆன்மீக நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் இரவிலேயே தோன்றும். இந்த ஆன்மீக நட்சத்திரங்கள், ஞான நட்;சத்திரங்கள், பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் பிரம்மாவின் இரவில் தோன்றுகிறார்கள். அந்த நட்சத்திரங்களால் இரவைப் பகலாக்க முடியாது. சூரியனால் மட்டுமே இரவைப் பகலாக மாற்ற முடியும். எவ்வாறாயினும், நட்சத்திரங்களான நீங்கள் ஞான சூரியனினதும் ஞானச் சந்திரனினதும் சகபாடிகளாகி, இரவைப் பகலாக மாற்றுகிறீர்கள். பௌதீகமான அண்ட வெளியில் உங்களால் பிரகாசிக்கும் பல வகையான நட்சத்திரங்களைப் பார்க்கக்கூடியதாக இருப்பதைப் போல், இறை அண்டவெளியிலும் பிரகாசிக்கும் பல வகையான நட்சத்திரங்களைக் காணக்கூடியதாக உள்ளது. சிலர் நெருக்கமான நட்சத்திரங்கள். ஏனையோர் வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள். சிலர் வெற்றி நட்சத்திரங்கள். ஏனையோர் நம்பிக்கை நட்சத்திரங்கள். சிலர் ஒரு ஸ்திதியைப் பேணுகிறார்கள். ஏனையோரின் ஸ்திதி மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த நட்சத்திரங்கள் தமது நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும். ஆனால், இங்கோ இவர்கள் தமது ஸ்திதியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். பௌதீகமான பால்வெளியில், வால் நட்சத்திரங்கள் காணப்படும். அதேபோல், இங்கும், ஒவ்வொரு பணியிலும், ‘இது ஏன்? இது என்ன?’ என்ற கேள்விகளின் வாலைக் கொண்டுள்ள நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். வால் நட்சத்திரங்கள் பூமியின் மீது ‘கனமான’ (பலமான) ஆதிக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், சதா ஒரே கேள்விகளைக் கேட்பவர்களும் பிராமணக் குடும்பத்தின் சூழலைக் கனமானதாக மாற்றுகிறார்கள். நீங்கள் அனைவரும் அதில் அனுபவம் வாய்ந்தவர்கள். உங்களின் எண்ணங்களில் உங்களைப் பற்றி, ‘ஏன்?’ அல்லது ‘என்ன?’ என்ற வால் ஏற்பட்டால், சுயத்தின் ஸ்திதி, உங்களின் மனதினதும் புத்தியினதும் ஸ்திதி என்பவை பாரமாகிவிடும். அத்துடன், ஒன்றுகூடலில் அல்லது எந்தவொரு சேவைப் பணியிலும் ‘ஏன்? என்ன? அப்படி இல்லை, ஆனால் இப்படி’ என்ற கேள்விகளின் வால் இருக்குமாயின், ஒன்றுகூடலின் அல்லது சேவைக்களத்தின் சூழல் உடனடியாகப் பாரமானதாக ஆகிவிடும். எனவே, அது உடனடியாக உங்களையும் ஒன்றுகூடலையும் சேவையையும் பாதிக்கும். வானத்திலுள்ள சில நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து கீழே விழுகின்றன. அவை அதன்பின்னர் என்னவாகின்றன? கற்கள். இறை நட்சத்திரங்களும், அவர்கள் தமது நம்பிக்கை, உறவுமுறைகள், தனிப்பட்ட தாரணை என்பவற்றின் மேன்மையான ஸ்திதியில் இருந்து கீழே வந்ததும், அவர்கள் கல்புத்தி உடையவர்கள் ஆகிவிடுகிறார்கள். எவ்வாறு அவர்கள் கல்புத்தி உடையவர்கள் ஆகுகிறார்கள்? ஒரு கல்லில் எவ்வளவுதான் நீங்கள் தண்ணீரை ஊற்றினாலும், அந்தக் கல் கரையாது. அது அதன் உருவத்தை மாற்றுமே தவிர, கரையாது. கல்லால் எதையும் உறிஞ்சவும் முடியாது. அதேபோல், அவர்களும் கல் புத்தியுடையவர்கள் ஆகியதும், ஏதாவது நல்லதை உணரச் செய்வதற்கு நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்தாலும், அவர்களால் அதை உணர முடியாமல் இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் ஞான நீரை அவர்களின் மீது ஊற்றினாலும், அவர்கள் மாற மாட்டார்கள். சூழல் மாறிக் கொண்டிருக்கும். ஆனால், அவர்கள் மாற மாட்டார்கள். இதுவே கல் புத்தி உடையவர் ஆகுதல் எனப்படுகிறது. எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: இந்த இறை அண்டவெளியில் நான் என்ன வகையான நட்சத்திரம்?

ஒரு வெற்றி நட்சத்திரமே, அதிமேன்மையான நட்சத்திரம் ஆவார். வெற்றி நட்சத்திரம் என்றால் சுய முன்னேற்றத்தில் சதா வெற்றியை அனுபவம் செய்பவர் என்று அர்த்தம். அதாவது, முயற்சி செய்யும் தனது வழிமுறையால் எப்போதும் இலகுவாக வெற்றியை அனுபவம் செய்பவர் என்று அர்த்தம். வெற்றி நட்சத்திரங்களாக இருப்பவர்களுக்கு தமது சொந்த முயற்சிகளை இட்டு ஒருபோதும், ‘இது நிகழுமா இல்லையா என எனக்குத் தெரியாது’, ‘என்னால் இதைச் செய்ய முடியுமா இல்லையா’ என்ற எண்ணங்கள் ஏற்பட மாட்டாது. அவர்கள் சிறிதளவேனும் வெற்றி குறைவாக இருப்பதை அனுபவம் செய்ய மாட்டார்கள். ‘வெற்றி உங்களின் பிறப்புரிமை’ என்ற சுலோகம் இருப்பதைப் போல், அவர்கள் எப்போதும் வெற்றியைத் தமக்கான உரிமையாகவே அனுபவம் செய்வார்கள். உரிமை இருப்பதன் வரைவிலக்கணம், நீங்கள் சிரமப்படாமல் அதை அடைவீர்கள். அது கேட்காமலேயே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதையாவது இலகுவாகவும் இயல்பாகவும் பெற்றால், அது உரிமை உடையவராக இருத்தல் எனப்படுகிறது. அதேபோல், ஒன்று சுயத்திற்கான வெற்றி. மற்றையது, மற்றவர்களுடன் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் வரும்போது ஏற்படும் வெற்றி. அவர்கள் பிராமண ஆத்மாக்களோ அல்லது உங்களின் லௌகீகக் குடும்பத்தினரோ அல்லது உங்களின் லௌகீகப் பணியினூடான உங்களின் தொடர்புகளோ, யாராக இருந்தாலும், உங்களின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகள் அனைத்திலும், வெற்றிக்கான உரிமையைக் கொண்டிருப்பதன் அடிப்படையில், ஏதாவதொன்று எவ்வளவு சிரமமாக இருந்தாலும், நீங்கள் அதை இலகுவானதாகவே அனுபவம் செய்வீர்கள். அதாவது, நீங்கள் தொடர்ந்து முன்னேறி வெற்றி பெறுவீர்கள். ஆமாம், அதற்கு நேரம் எடுக்கலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக வெற்றிக்கான உரிமையைப் பெறுவீர்கள். அதேபோல், பௌதீகமான பணிகளிலோ அல்லது அலௌகீக சேவையின் பணிகளிலோ, இரண்டிலும் தமது செயல்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவர்களின் புத்திகளில் இருக்கும். சிலவேளைகளில் அவர்கள் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் மனிதர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அந்தச் சகிப்புத்தன்மையும் அவர்கள் முன்னேறுவதற்கான ஒரு வழிமுறை ஆகிவிடும். சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதன் மூலம், அவர்களின் ஸ்திதியானது, பறக்கும் ஸ்திதிக்குச் செல்வதற்கு அந்தச் சூழ்நிலை ஒரு வழிமுறை ஆகிவிடும். அதாவது, அவர்கள் நிச்சயமாக அனைத்திலும் இலகுவாகவும் இயல்பாகவும் வெற்றி பெறுவார்கள்.

வெற்றி நட்சத்திரங்களின் விசேடமான அடையாளம், அவர்கள் தமது சொந்த வெற்றியை இட்டு ஒருபோதும் அகங்காரத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். அவர்கள் தமது சொந்தப் புகழைப் பாட மாட்டார்கள். ஆனால், எந்தளவிற்கு அவர்களிடம் வெற்றி உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் பணிவாகவும், ஆக்கத் திறமையுடனும் இருப்பதுடன், தூய, மென்மையான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். ஏனையோர் அவர்களின் புகழைப் பாடுவார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் தந்தையின் புகழையே பாடுவார்கள். வெற்றி நட்சத்திரங்களுக்கு ஒருபோதும் எந்தவிதமான கேள்விகளும் இருக்காது. அவர்கள் எப்போதும் புள்ளி என்ற ரூபத்தில் ஸ்திரமாக இருப்பார்கள். அத்துடன் ஒவ்வொரு பணியிலும் மற்றவர்களுக்கு நாடகத்தின் புள்ளியை நினைவூட்டுவார்கள். அவர்கள் மற்றவர்களைத் தடைகளை அழிப்பவர்கள் ஆக்கி, அவர்களுக்குச் சக்தியை வழங்கி, தொடர்ந்து அவர்களின் வெற்றியின் இலக்கிற்கு நெருக்கமாக அவர்களை அழைத்துச் செல்வார்கள். எல்லைக்குட்பட்ட வெற்றிக்கான பேற்றினைப் பார்க்கும்போது, வெற்றி நட்சத்திரங்கள் பேறு இருக்கும்போது மிகவும் சந்தோஷப்படுவதும் இல்லை. ஏதாவது சூழ்நிலை ஏற்படும்போது அல்லது பேறுகள் குறைவடையும்போது அவர்களின் சந்தோஷம் குறைவதும் இல்லை. அவர்களிடம் மாறிக் கொண்டிருக்கும் ஸ்திதி இருக்காது. அவர்கள் எப்போதும் எல்லையற்ற முறையில் வெற்றி ரூபங்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒரேயொரு மேன்மையான ஸ்திதியில் எப்போதும் ஸ்திரமாகவும் இருப்பார்கள். புறச் சூழ்நிலைகளில் அல்லது பணிகளில், ஏனையோர் புறத்தே தோல்வியை அனுபவம் செய்யக்கூடும். ஆனால், வெற்றி நட்சத்திரங்கள் தோல்வியின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவதில்லை. அவர்கள் வெற்றிநிறைந்தவராக இருக்கும் தமது ஆதி ஸ்திதியால் தோல்வியையும் வெற்றியாக மாற்றுவார்கள். இவையே வெற்றி நட்சத்திரங்களின் சிறப்பியல்பாகும். இப்போது, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் யார்? நான் வெறுமனே ஒரு நம்பிக்கை நட்சத்திரமா? அல்லது, நான் வெற்றி சொரூபமா? நம்பிக்கையைக் கொண்டிருப்பது நல்லதே. ஆனால், நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் வெற்றியை அனுபவம் செய்யாமல் இருந்தால், அது உங்களைச் சிலவேளைகளில் சக்திசாலியாக ஆக்கும். சிலவேளைகளில் உங்களை மனச்சோர்வடையச் செய்யும். நீங்கள் அதிகளவில் இந்தத் தளம்பலை அனுபவம் செய்வீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கு அதிகளவு தளம்பல் உள்ளதோ, அங்கு களைப்பு ஏற்படும். எனவே, இங்கும், நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும், களைப்பின் அனுபவம் உங்களை மனச்சோர்வடையச் செய்யும். எனவே, எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக, நம்பிக்கை உடையவராக இருப்பது நல்லது. ஆனால், வெற்றி சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்யும் ஒருவர் எப்போதும் மேன்மையாக இருப்பார். அச்சா. அண்ட வெளியின் கதையை நீங்கள் கேட்டீர்களா? மதுவனத்தின் மண்டபம் மட்டும் அண்டவெளியாக இல்லை. ஆனால், எல்லையற்ற பிராமண உலகமே அண்டவெளியாக உள்ளது. அச்சா.

வந்திருக்கும் அனைவரும் புதிய குழந்தைகள். நீங்கள் புதியவர்கள். அதேவேளை மிகவும் பழையவர்கள். ஏனென்றால், நீங்கள் பல கல்பங்களிலும் வாழ்ந்தவர்கள். எனவே, நீங்கள் மிகவும் பழையவர்கள். எனவே, நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்த, சந்திக்க வேண்டும் என்ற புதிய குழந்தைகளின் புதிய ஊக்கமும் உற்சாகமும் இப்போது நிறைவேறியுள்ளது. உங்களுக்கு அதிகளவு உற்சாகம் இருந்தது. நான் செல்ல வேண்டும், நான் செல்ல வேண்டும்..... உங்களுக்கு அதிகளவு உற்சாகம் இருந்தது. அதனால் நீங்கள் வழிகாட்டல்களைக் கூடக் கேட்கவில்லை. நீங்கள் முற்றாக சந்திப்பதற்கான போதையில் உங்களை மறந்துவிட்டீர்கள். உங்களுக்கு அடிக்கடி, சிலரே வரவேண்டும், சிலர் மட்டுமே வரவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் யாராவது இதைக் கேட்டீர்களா? நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது, பல குழந்தைகள் வரவேண்டும் என்றிருக்கும்போது அதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இதனாலேயே, அவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் எல்லோரும் அனைத்தையும் இலகுவாகப் பெற்றுள்ளீர்கள், இல்லையா? இது சிரமமாக இல்லையல்லவா? இதுவும் நாடகத்தின்படி இடம்பெறும் ஓர் ஒத்திகையே. நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் சிரமமான எதையும் இலகுவாக ஆக்குபவர்கள், இல்லையா? ஒவ்வொரு பணியிலும் ஒத்துழைப்புக் கொடுப்பதும், உங்களுக்குக் கொடுத்த எந்தவொரு வழிகாட்டலிலும் ஒத்துழைப்பதும் என்றால் அதை இலகுவாக்குதல் என்று அர்த்தம். நீங்கள் ஒத்துழைப்பவர் ஆகினால், இந்த மண்டபத்தில் 5000 பேரையும் உள்ளடக்க முடியும். ஆனால், நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், அதாவது, நீங்கள் நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால், 500 பேரைக்கூட உள்ளடக்குவது சிரமமாக இருக்கும். ஆகவே, நீங்கள் செல்வதற்கு முன்னர் உங்களின் பதிவேட்டை தாதிகளிடம் காட்டுங்கள். அப்போது, 5000 பேர் இருந்தாலும், வெறுமனே 500 பேர் மட்டுமே இருந்ததைப் போல் இருந்தது என்பது அனைவரின் இதயங்களில் இருந்தும் வெளிப்படும். இதுவே கஷ்டமான எதையும் இலகுவாக ஆக்குதல் எனப்படுகிறது. எனவே, நீங்கள் அனைவரும் உங்களைப் பற்றிய நல்லதொரு பதிவேட்டை நீங்கள் செய்துள்ளீர்கள், இல்லையா? நீங்கள் நல்ல சான்றிதழைப் பெறுகிறீர்கள். இந்த முறையில் எப்போதும் சந்தோஷமாக இருப்பதுடன், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள். நீங்கள் சதா தொடர்ந்து பாராட்டப்படுவீர்கள். உங்களின் பதிவேடு நல்லது. ஆகவே, பாருங்கள், நாடகத்தின்படி, நீங்கள் இரு தடவைகள் சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். இது நாடகத்தின்படி, புதியவர்களுக்கான விருந்துபசாரம் ஆகும். அச்சா.

நிலையான, ஆன்மீக, மேன்மையான வெற்றி நட்சத்திரங்களுக்கும், தமது நிலையான, ஸ்திரமான ஸ்திதியால் உலகையே பிரகாசிக்கச் செய்பவர்களுக்கும், சதா ஞான சூரியனுடனும் ஞானச் சந்திரனுடனும் இருப்பவர்களுக்கும், எப்போதும் நம்பிக்கையின் போதையைக் கொண்டிருப்பதுடன் பணிவாக இருப்பவர்களுக்கும், இத்தகைய இறை அண்டவெளியின் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கும், ஞான சூரியனும் ஞானச் சந்திரனுமான பாப்தாதாவிடமிருந்து ஆன்மீக அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1)நீங்கள் எப்போதும் உங்களைத் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் வெற்றி இரத்தினங்களாகக் கருதுகிறீர்களா? தடைகள் வருவது நல்லதே. ஆனால், தடைகள் உங்களைத் தோற்கடிக்க அனுமதிக்காதீர்கள். தடைகள் எல்லா வேளையும் உங்களைப் பலசாலிகள் ஆக்குவதற்கான வழிகள் ஆகுகின்றன. தடைகளைச் சுவாரசியமான விளையாட்டாகக் கருதி அவற்றை வெற்றி கொள்ளுங்கள். இது தடைகளில் இருந்து விடுபட்டு, வெற்றியாளர் ஆகுதல் எனப்படுகிறது. எனவே, நீங்கள் தடைகளை இட்டுப் பயப்படுவது இல்லையல்லவா? உங்களுக்குத் தந்தையின் சகவாசம் இருக்கும்போது, பயப்படுதல் என்ற கேள்வியே இல்லை. ஒருவர் தனியாக இருக்கும்போதே, அவர் பயப்படுவார். எவ்வாறாயினும், யாராவது உங்களுடன் இருக்கும்போது, நீங்கள் பயப்படமாட்டீர்கள். அந்த வேளையில் உங்களுக்குத் துணிச்சல் ஏற்படும். எனவே, உங்களுக்குத் தந்தையின் சகவாசம் இருக்கும்போது, தடை பயப்படுமா அல்லது நீங்கள் பயப்படுவீர்களா? சர்வசக்திவானின் முன்னால் தடைகள் எம்மாத்திரம்? எதுவுமே இல்லை! இதனாலேயே, தடைகள் ஒரு விளையாட்டைப் போல் உள்ளன. அவை எந்த விதத்திலும் கஷ்டம் இல்லை. தடைகள் உங்களை அனுபவசாலிகளாகவும் சக்திசாலிகளாகவும் ஆக்குகின்றன. சதா தந்தையின் நினைவிலும் சேவை செய்வதிலும் ஈடுபட்டிருப்பவர்கள், தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதில் மும்முரமாக இருப்பார்கள். உங்களின் புத்தியானது மும்முரமாக இல்லாவிட்டால், தடைகளும் மாயையும் வரும். நீங்கள் மும்முரமாக இருந்தால், மாயை விலகிவிடுவாள். அவள் வரமாட்டாள். அவள் சென்றுவிடுவாள். மாயையும் இப்போது நீங்கள் அவளின் சகபாடி இல்லை என்பதையும், இப்போது நீங்கள் கடவுளின் சகபாடி என்பதையும் அறிந்து கொள்வாள். எனவே, அவள் விலகிவிடுவாள். நீங்கள் எண்ணற்ற தடவைகள் வெற்றியாளர் ஆகியுள்ளீர்கள். அதனால், நீங்கள் வெற்றி பெறுவதென்பது பெரிய விடயம் இல்லை. நீங்கள் எந்தவொரு பணியையும் பல தடவைகள் செய்தால், அது உங்களுக்கு இலகுவாக இருக்கும். எனவே, நீங்கள் பல தடவைகள் வெற்றிபெற்றுள்ளீர்கள். நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பவர்கள்தானே? தாய்மார்களே, நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது அழுகின்றீர்களா? ஏதாவது சூழ்நிலைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க வேண்டிவரும்போது, நீங்கள் அழுகிறீர்களா? நீங்கள் தைரியசாலிகள். பாண்டவர்களே, உங்களின் மனதில் நீங்கள் அழுவதில்லை, அல்லவா? ‘இது ஏன் நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது?’ இந்த முறையில் நீங்கள் அழுவதில்லை, அல்லவா? தந்தைக்குச் சொந்தமாகிய பின்னர், நீங்கள் சதா சந்தோஷமாக இல்லாவிட்டால், எப்போதுதான் நீங்கள் சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள்? தந்தைக்குச் சொந்தமாக இருத்தல் என்றால் சதா சந்தோஷமாக இருத்தல் என்று அர்த்தம். உங்களுக்குத் துன்பமும் இல்லை. நீங்கள் துன்பத்தில் அழுவதும் இல்லை. உங்களின் துன்பம் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, எப்போதும் உங்களின் இந்த ஆசீர்வாதத்தை நினைவில் வைத்திருங்கள். அச்சா.

2)நீங்கள் உங்களை இந்த ஆன்மீகத் தோட்டத்தில் உள்ள ஆன்மீக ரோஜாக்களாகக் கருதுகிறீர்களா? பூக்கள் அனைத்திலும், ரோஜாக்களே அவற்றின் நறுமணத்தின் காரணத்தால் அதிகமாக விரும்பப்படுகின்றன. எனவே, அவை ரோஜாக்கள். நீங்கள் எல்லோரும் ஆன்மீக ரோஜாக்கள். ஆன்மீக ரோஜா என்றால் எப்போதும் ஆன்மீக நறுமணத்தைக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். ஆன்மீக ரோஜாக்களான நீங்கள் எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், நீங்கள் ஆத்மாவை மட்டுமே பார்ப்பீர்கள். நீங்கள் சரீரத்தைப் பார்ப்பதில்லை. நீங்களும் எப்போதும் ஓர் ஆன்மீக ஸ்திதியில் இருப்பதுடன், நீங்கள் எப்போதும் மற்றவர்களின் ஆத்மாக்களையே பார்ப்பீர்கள். இதுவே ஓர் ஆன்மீக ரோஜாவாக இருத்தல் எனப்படுகிறது. இதுவே தந்தையின் பூந்தோட்டம். தந்தை எவ்வாறு அதிமேலானவரோ, அதேபோல் இந்தத் தோட்டமும் அதிமேலானது. இந்தத் தோட்டத்தின் விசேடமான அலங்காரம், ஆன்மீக ரோஜாக்களான நீங்கள் அனைவருமே. இந்த ஆன்மீக நறுமணம் ஆத்மாக்கள் பலருக்கும் நன்மை அளிக்கும்.

இன்றைய உலகில் உள்ள கஷ்டங்கள் அனைத்திற்கும் காரணம், அவர்கள் ஒருவரையொருவர் ஆத்மாக்களாகப் பார்க்காததே ஆகும். சரீர உணர்வினாலேயே சகல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அவர்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகினால், சகல பிரச்சனைகளும் முடிந்துவிடும். ஆன்மீக ரோஜாக்களான நீங்கள் உலகில் ஆன்மீக நறுமணத்தைப் பரப்புவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். உங்களுக்கு எப்போதும் இந்தப் போதை உள்ளதா? ஒரு கணம் ஒன்றாகவும், மறுகணம் வேறொன்றாகவும் இருப்பதல்ல. சதா ஸ்திரமான ஸ்திதியில் இருக்கும்போது சக்தி ஏற்படும். உங்களின் ஸ்திதி மாறிக் கொண்டே இருந்தால், உங்களின் சக்தியும் குறைவடையும். சதா தந்தையின் நினைவில் இருங்கள். சேவை செய்வதற்கான வழிமுறை ஏற்படும் போதெல்லாம், அந்த வாய்ப்பைப் பெற்று, தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களைக் கடவுளின் தோட்டத்திலுள்ள ஆன்மீக ரோஜாக்களாகக் கருதி, தொடர்ந்து ஆன்மீக நறுமணத்தைப் பரப்புங்கள். இது அனைவராலும் விரும்பப்படும் இனிமையான ஆன்மீக நறுமணம் ஆகும். இந்த ஆன்மீக நறுமணம், ஆத்மாக்கள் பலருக்கும் அத்துடன் உங்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும். நீங்கள் இந்த ஆன்மீக நறுமணத்தைத் தொடர்ந்து எந்தளவிற்கு, எவ்வளவு தொலைவிற்குப் பரவச் செய்கிறீர்கள் என்பதை பாப்தாதா தொடர்ந்து பார்க்கிறார். அதில் சிறிதளவு சரீர உணர்வேனும் கலந்துவிட்டால், அந்த ஆதியான, ஆன்மீக நறுமணம் இருக்காது. இந்த ஆன்மீக நறுமணத்தால், எப்போதும் தொடர்ந்து மற்றவர்களையும் நறுமணமானவர்கள் ஆக்குங்கள். நீங்கள் எப்போதும் அசைக்க முடியாதவரா? எந்தவொரு குழப்பமும் உங்களை அசைக்கவில்லை, அல்லவா? ஏதாவது நிகழ்ந்தால், அல்லது எதையாவது நீங்கள் கேட்டால் அல்லது பார்த்தால், அதனால் நீங்கள் குழப்பத்திற்கு உள்ளாகுவதில்லை, அல்லவா? எதுவுமே புதியதல்ல என்றிருக்கும்போது, நீங்கள் ஏன் தளம்பல் அடைகிறீர்கள்? ஏதாவது புதியதாக இருக்கும்போதே, தளம்பல் ஏற்படும். ‘ஏன்? என்ன?’ என்ற இவை அனைத்தும் பல கல்பங்களாக இடம்பெற்று வந்துள்ளன. இதுவே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட, நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. நீங்கள் சர்வசக்திவானின் சகபாடிகள். அதனால் நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். நீங்கள் உங்களின் கவலைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளீர்கள். நீங்களும் எல்லா வேளைக்கும் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். எப்போதும் ஆன்மீக நறுமணத்தைப் பரப்புங்கள். தடைகள் அனைத்தும் முடிந்துவிடும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவருக்கும் நலம்விரும்பியாகி, உங்களுக்கும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதனால், வெளிப்படுத்துகைக்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டுவருவீர்களாக.

சேவையில் வெற்றி பெறுவதற்கான அடிப்படை, நல்லாசிகளின் மனோபாவத்தைக் கொண்டிருப்பதாகும். ஏனென்றால், உங்களின் இந்த மனோபாவம், மற்றவர்களின் கிரகிக்கும் மற்றும் மேலும் அதிகமானவற்றைக் கண்டு கொள்வதற்குமான சக்தியை அதிகரிக்கும். இதனூடாக, வார்த்தைகளால் செய்யும் சேவை இலகுவாக வெற்றியடையும். சுயத்திற்காக சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா, எப்போதும் மாயையால் பாதிக்கப்படாதவராக இருப்பார். அத்துடன் எவரின் பலவீனங்களையும் கிரகிக்காதவராக இருப்பதுடன், எந்தவொரு நபரினாலோ அல்லது உடமைகளாலோ கவரப்படாதவராகவும் இருப்பார். இந்த இரண்டு ஆசீர்வாதங்களையும் நீங்கள் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுத்தினால், வெளிப்படுத்துகைக்கான நேரம் வந்துவிடும்.

சுலோகம்:
உங்களின் எண்ணங்களையும் அர்ப்பணியுங்கள். பலவீனங்கள் அனைத்தும் இயல்பாகவே சென்றுவிடும்.