15.08.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒவ்வொரு அடியிலும் நடப்பவை அனைத்தும் நன்மை பயப்பதாகும். இந்த நாடகத்தில், தந்தையின் நினைவில் நிலைத்திருப்பவர்களே அதிகபட்ச நன்மையை அனுபவம் செய்கின்றார்கள்.கேள்வி:
நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட எந்த இரகசியத்தை அறிந்திருப்பதன் மூலம் குழந்தைகளால் முடிவற்ற சந்தோஷத்தைப் பேண முடியும்?பதில்:
நாடகத்திற்கு ஏற்ப, இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை அறிந்தவர்களால் முடிவற்ற சந்தோஷத்தைப் பேண முடியும். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். எவ்வாறாயினும், உங்களுடைய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட உள்ளது. அதனைத் தடுக்க எவராலுமே முடியாது. குழந்தைகளாகிய உங்கள் ஸ்திதி, தளம்பல் அடைகின்றது. சிலவேளைகளில், நீங்கள் அதிகளவு உற்சாகமாக இருக்கின்றீர்கள், சிலவேளைகளில் மிகவும் சாந்தமாகிவிடுகின்றீர்கள் (உழழட). எவ்வாறாயினும், அதனையிட்டு நீங்கள் குழப்பமடையக்கூடாது. சகல ஆத்மாக்களினதும் தந்தையாகிய கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தைப் பேணுங்கள்.
பாடல்:
விட்டில் பூச்சிகளின் சந்தோஷமான ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.....ஓம் சாந்தி.
உங்கள் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக உள்ள, இனிமையிலும் இனிமையான உயிருள்ள விட்டில் பூச்சிகளாகிய உங்களுக்கு பாபா அன்பையும் நினைவையும் தெரிவிக்கின்றார். நீங்கள் அனைவரும் உயிருள்ள விட்டில் பூச்சிகள். தந்தை சுவாலை என அழைக்கப்படுகின்றார், ஆனால் அவரை எவருக்குமே தெரியாது. சுவாலை பெரியதல்ல, அவர் ஒரு புள்ளியே ஆவார். ஆத்மா ஒரு புள்ளி என்பதும், அந்த ஆத்மாவில் முழுப் பாகமும் பதிந்துள்ளது என்பதும் எவரது புத்தியிலும் பதிவதில்லை. ஆத்மாவினதும் பரமாத்மாவினதும் ஞானம் வேறு எவரது புத்தியிலும் இல்லை. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர், நீங்கள் ஓர் ஆத்மா என்ற புரிந்துணர்வை உங்களுக்கு ஏற்படுத்துகின்றார். முன்னர், உங்களுக்கு ஆத்மாவென்றால் என்னவென்றோ, பரமாத்மா என்றால் என்னவென்றோ தெரி;யாது. ஆகையால் சரீர உணர்வு இருப்பதால், குழந்தைகள் அதிகளவு பற்றையும் பல விகாரங்களையும் கொண்டிருக்கின்றார்கள். பாரதம் மிகவும் மேன்மையானதாக இருந்தது. விகாரங்களின் பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அது விகாரமற்ற பாரதமாகும். இப்பொழுது இது விகாரம் நிறைந்த பாரதமாகும். தந்தை விளங்கப்படுத்துவதைப் போன்று வேறு எந்த மனிதராலும் உங்களுக்குக் கூற முடியாது. நான் இத்தேசத்தை 5000 வருடங்களுக்கு முன்னரும் சிவாலயமாக மாற்றினேன். நானே சிவாலயத்தை ஸ்தாபித்தேன். எவ்வாறு? இப்பொழுது நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஒவ்வொரு அடியிலும் நடப்பவை அனைத்தும் நன்மைக்கேயாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தையை மிக நன்றாக நினைவு செய்து, தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் மென்மேலும் நன்மை பயப்பதாக இருக்கும். இது நீங்கள் மிகவும் மேன்மையான மனிதர்களாகுகின்ற நன்மை பயக்கும் யுகமாகும். தந்தைக்கு அதிக புகழ் உள்ளது. உண்மையான பகவதம் இப்பொழுது நடிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். துவாபரயுகத்தில் முதன்முதலில் பக்தி ஆரம்பமாகிய பொழுது, நீங்களே முதலில் வைரத்தினாலான நீள்கோள உருவத்தைச் செய்து அதனை வழிபட்டீர்கள். நீங்கள் வழிபடுபவர்களாக இருந்தபோது, ஆலயங்களைக் கட்டினீர்கள் என்பதை இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் அவற்றை வைரங்களாலும், இரத்தினங்களாலும் கட்டினீர்கள். இப்பொழுது அந்த உருவங்களைப் பெறமுடியாது. அதே உருவங்களை இப்பொழுது மக்கள் வெள்ளியில் செய்து வழிபடுகின்றார்கள். அவ்வாறு வழிபடுபவர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுகின்றது என்று பாருங்கள். அனைவரும் சிவனை வழிபடுகின்றபோதிலும், அது கலப்படமற்ற வழிபாடு அல்ல. விநாசம் நிச்சயமாக இடம்பெறப் போகின்றது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அதற்கான ஆயத்தங்கள் இப்பொழுது இடம்பெறுகின்றன. இயற்கை அனர்த்தங்களும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து ஒருவர் எவ்வளவுதான் பாடுபட்டாலும், உங்கள் இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட உள்ளது. அதனையி;ட்டு எதைச் செய்வதற்கும் எவரிடமும் சக்தி இல்லை. எவ்வாறாயினும், ஆத்மாக்களாகிய உங்கள்; ஸ்திதி தளம்பலடைகின்றது. இது மிகப்பெரிய வருமானம் ஆகும். சிலவேளைகளில் நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, மிக நல்ல சிந்தனைகளைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ஏனைய நேரங்களில் நீங்கள் மிகவும் சாந்தமாக(உழழட) இருக்கின்றீர்கள். யாத்திரை செல்லும்போதும் குழப்பம் உள்ளது. இதுவும் அவ்வாறானதேயாகும். அதிகாலையில் நீங்கள் விழித்தெழும்போது சிலவேளைகளில் தந்தையின் நினைவில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள்: ஆஹா, பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார்! அது மிகவும் அற்புதமாகும்! ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாகிய கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! கிருஷ்ணரே கடவுள் என அவர்கள் நம்புகின்றார்கள். கீதையில் ‘கடவுள் பேசுகின்றார்’ என்று கூறப்படுவதால் முழு உலகத்தினரும் அதற்கு மரியாதை கொடுக்கின்றனர். எவ்வாறாயினும், யார் கடவுள் என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். கல்விமான்களும், பண்டிதர்களும், எவ்வளவு பெரிய பதவி;களை வகிப்பவர்களாயினும், அவர்கள் தாம் தந்தையான கடவுளை நினைவு செய்கின்றோம் என்று கூறுகின்றபோதிலும், கடவுள் எப்பொழுது வருகின்றார் என்பதையோ, அல்லது அவர் வந்து என்ன செய்கின்றார் என்பதையோ அவர்கள் மறந்து விட்டார்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். இவை யாவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இந்த இராவண இராச்சியம் மீண்டும் ஒருமுறை இருக்கும். அதற்குள், நாங்களும் மீண்டும் ஒருமுறை பிரவேசிக்க வேண்டும். இராவணனே அறியாமை என்ற காரிருளினுள் உங்களை உறங்கச் செய்கின்றான். ஞானக்கடலான ஒருவர் மாத்திரமே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலமே நீங்கள் சற்கதி அடைகின்றீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்குச் சற்கதியை அருள முடியாது. அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரேயொருவரே ஆவார். தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கீதையின் ஞானம் மறைந்துவிட்டது. இந்த ஞானம் தொன்றுதொட்ட காலம் முதல் தொடர்ந்துள்ளது என்றில்லை. குர்ஆன், பைபிள் போன்றன தொடர்ந்தும் உள்ளன (அச்சமயங்களின் ஆரம்பம் முதல்). அவை அழிக்கப்படவில்லை. நான் உங்களுக்குக் கொடுக்கும் ஞான நூல் அநாதியாக என்றுமே தொடர்ந்திருப்பதற்காக உருவாக்கப்படவில்லை. நீங்கள் இதனைக் குறித்துக்கொள்கின்றீர்கள் பின்னர் அது அழிந்துவிடுகின்றது. இவை அனைத்தும் எரிந்து இயல்பாகவே அற்றுப்போய்விடும். தந்தை ஒரு கல்பத்தின் முன்னரும் உங்களுக்கு இதனைக் கூறினார், இப்பொழுது மீண்டும் இதனை உங்களுக்குக் கூறுகின்றார். இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர், வெகுமதியைப் பெறுவீர்கள். ஆகையால், அங்கே இந்த ஞானத்திற்கான தேவை இருக்கமாட்டாது. பக்தி மார்க்கத்தில் சமயநூல்கள் அனைத்தும் உள்ளன. பாபா, கீதையை வாசிப்பதன் மூலம் இந்த ஞானத்தை உங்களுக்குக் கூறுவதில்லை. உங்களுக்கு இராஜயோக கற்பித்தல்களையே அவர் கொடுக்கின்றார். பக்தி மார்க்கத்தில் அவர்கள் இதிலிருந்து சமய நூல்களை உருவாக்கி அனைத்தையும் குழப்பிவிட்டனர். ஆகையால், நீங்கள் பிரதானமாக விளங்கப்படுத்த வேண்டிய விடயம்: கீதையின் ஞானத்தைக் கொடுத்தவர் யார்? அவர்கள், சிவபாபாவின் பெயரிற்குப் பதிலாக வேறு பெயரைக் கொடுத்துள்ளார்கள். வேறு எவரது பெயரிற்கும் பதிலாக இன்னொருவரின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஏனைய சமயங்கள் அனைத்திற்கும் அவற்றிற்கெனப் பிரதான சமயநூல் உள்ளது. தேவதர்மம், இஸ்லாம், பௌத்தம் என்பனவே பிரதான சமயங்கள் ஆகும். முதலில் பௌத்த சமயமும் பின்னர் இஸ்லாமும் இருந்தது எனச் சிலர் கூறுகின்றார்கள். அவை கீதையுடன் தொடர்புள்ளவை அல்ல என்று அவர்களிடம் கூறுங்கள். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதில் மாத்திரமே நாங்கள் அக்கறை கொண்டிருக்கின்றோம். இது மிகப் பெரிய விருட்சம் எனத் தந்தை மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். அது மிகவும் சிறந்தது, ஒரு பூச்சாடியைப் போன்றது. அதிலிருந்து மூன்று சிறு கிளைகள் தோன்றுகின்றன. மிகத் தெளிவான புரிந்துணர்வோடு விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. தாம் எச்சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அச்சமயத்தை ஸ்தாபித்தவர் யார் என்பதையும் எவராலும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தயானந்தர், அரவிந்த கோஷ் ஆகியோர் சில காலத்தின் முன்னர் வாழ்ந்து சென்றவர்கள். அவர்களும் யோகம் போன்றவற்றைக் கற்பித்தனர், ஆனால் அவை யாவும் பக்தியாகும். அதில் ஞானத்தின் சுவடோ பெயரோ இருப்பதில்லை. அவர்களுக்குப் பெரிய பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன! அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. அது 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் இடம்பெறும். சக்கரம் ஆரம்பத்திலிருந்து எவ்வாறு சுற்றுகின்றது என்பதையும், மீண்டும் அது எவ்வாறு சுழலும் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். நிகழ்காலம் பின்னர் கடந்த காலமாகவும் அதன் பின்னர் அது எதிர்காலமாகவும் ஆகும். ‘கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்தகாலம், எதிர்காலம் ஆகுகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அதன் பின்னர் உங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த இராச்சியங்களும் இருக்கவில்லை. இவை அனைத்தையும் அவர்களுக்கு ஒரு கதை வடிவில் கூறுங்கள். அது மிகவும் அழகிய கதையாகும். முன்னொரு காலத்தில், 5000 வருடங்களின் முன்னர், பாரதம் சத்தியயுகமாக இருந்தது. அந்த நேரத்தில் தேவ இராச்சியத்தைத் தவிர வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அது சூரிய வம்சம் என்று அழைக்கப்பட்டது. 1250 வருடங்களாக அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அதன் பின்னர் அவர்கள் அதனைத் தமது சகோதரர்களான சத்திரியர்களிடம் ஒப்படைத்தார்கள். அதன் பின்னர் அவர்களின் இராச்சியம் தொடர்ந்தது. தந்தை வந்தே உங்களுக்குக் கற்பித்தார் என நீங்கள் விளங்கப்படுத்தலாம். நன்றாகக் கற்றவர்கள் சூரிய வம்சத்தினர் ஆகினார்கள். சித்தியெய்தாதவர்கள் சத்திரியர்கள் எனப் பெயரிடப்பட்டார்கள். எவ்வாறாயினும், யுத்தம் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்தால் உங்கள் பாவங்கள் அழியும். நீங்கள் விகாரங்களை வெற்றிகொள்ள வேண்டும். தந்தையால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை: காமத்தை வென்றவர்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள். பின்பு, அரைக் கல்பத்தி;ன் பின்னர், அவர்கள் பாவப் பாதையில் வீழ்கின்றார்கள். அவர்களின் விக்கிரகங்கள் உள்ளன. அதில் தேவர்களின் முகச்சாயல் உள்ளது. இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் அரைக்கு அரைவாசி;யாகும். இதைப் பற்றி ஒரு கதையை உருவாக்கி, அடுத்ததாக என்ன நடந்தது, அதன் பின்னர் என்ன நடந்தது என்று விளங்கப்படுத்துங்கள். இதுவே சத்திய நாராயணனின் கதையாகும். ஒரேயொரு தந்தையே சத்தியம் ஆவார். அவர் உங்களுக்கு இப்பொழுது ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கின்றார். இந்த ஞானத்தை உங்களுக்கு வேறு எவராலும் கொடுக்க முடியாது. மனிதர்களுக்குத் தந்தையைத் தெரியாது. தாம் நடிக்கும் நாடகத்தைப் படைப்பவரையும், அதன் இயக்குநரையும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாவிட்டால், வேறு எவருக்குத் தெரியும்? இவை அனைத்தும் நாடகத்திற்கு ஏற்ப, அதேபோன்று நிகழும் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை வந்து மீண்டும் உங்களுக்குக் கற்பிப்பார். வேறு எவராலும் இங்கே வரமுடியாது. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றேன். புதியவர்கள் எவராலும் இங்கே அமர முடியாது. இந்திரப்பிரசாத்தைப் பற்றிய ஒரு கதையுண்டு. நீல மாணிக்கம், புஷ்பராகம் போன்ற பல்வேறு தேவதைகளின் பெயர்களும் உள்ளன. உங்களில் சிலர் வைரங்களைப் போன்றவர்கள் உள்ளார்கள். ரமேஷினால் உருவாக்கப்பட்ட கண்காட்சியைப் பாருங்கள், அதன் மூலமாக அனைவரும் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர். அதனால், அவர் வைரத்;தின் பெறுமதியுடைய ஒன்றைச் செய்தார். சிலர் புஷ்பராகங்களும், ஏனையோர் வேறு வகையான இரத்தினங்களும் ஆவார்கள். சிலருக்கு எதுவுமே தெரி;யாது! இராச்சியம் ஒன்று ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் அரசர்கள், அரசிகள் அனைவருமே தேவைப்படுகின்றனர். பிராமணர்களாகிய நீங்கள் ஸ்ரீமத்;தைப் பின்பற்றுவதன் மூலம் கற்கின்றீர்கள், அதன் பின்னர், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்தளவுக்கு அதிக சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும்! இந்த மரண உலகம் இப்பொழுது அழிய உள்ளது. தான் சென்று ஒரு குழந்தையாகுவார் என்பதை இந்நேரத்தில், இந்த பாபா புரிந்து கொண்டுள்ளார். அக்குழந்தைப் பருவ விடயங்கள் அனைத்தும் இப்பொழுது அவரின் முன்னால் தோன்றுகின்றன. அப்பொழுது அவரின் முழு நடத்தையும் மாற்றமடைகின்றது. அதுபோன்றே, அங்கிருக்கும்போது எவரும் முதுமை அடையும்போது, தாம் அப்பழைய சரீரங்களை நீக்கி, தமது குழந்தைப் பருவத்திற்குச் செல்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். குழந்தைப் பருவம், சதோபிரதான் ஸ்திதியுடையதாகும். இலக்ஷ்மி நாராயணன் நடுவயது நிலையில் உள்ளனர். அவர்கள் திருமணம் செய்த பின்னர் அவர்களை பால்யப் பருவத்தினர் என அழைக்க முடியாது. நடுவயது ஸ்திதி, ரஜோ ஸ்திதி என அழைக்கப்படுகின்றது. வயதான ஸ்திதி, தமோ ஸ்திதி எனப்படுகின்றது. ஆகையாலேயே கிருஷ்ணரின் மீது அதிகளவு அன்புள்ளது. இலக்ஷ்மியும் நாராயணனும் அவர்களே (ராதை கிருஷ்ணர்) ஆயினும், மக்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. கிருஷ்ணர் துவாபர யுகத்திலும் இலக்ஷ்மி, நாராயணன் சத்திய யுகத்திலும் காட்டப்பட்டுள்ளனர். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: குமாரிகள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் ஆகவேண்டும். குமாரிகளுக்கும், அரைக் குமாரிகளுக்கும் ஆலயங்கள் உள்ளன. தில்வாலா ஆலயம் போன்ற அனைத்து ஆலயங்களும் உங்களுடைய மிகச்சரியான ஞாபகார்த்தங்களே ஆகும். அவை உயிரற்றவை, இதுவோ உயிருள்ளதாகும். நாங்கள் இ;ங்கே உயிருள்ள ரூபத்தில் அமர்ந்திருக்கின்றோம். நாங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றோம். சுவர்க்கம் இங்கேயே இருக்கும். அசரீரி உலகம் எங்குள்ளது, சூட்;சும உலகம் எங்குள்ளது போன்ற அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு முழு நாடகமும் தெரியும். கடந்தது அனைத்தும் பின்னர் எதிர்காலம் ஆகுகின்றது. அதன் பின்னர், மீண்டும் கடந்தது ஆகுகின்றது. உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! நீங்கள் மிகவும் சாந்தமானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் ஆகி, சந்தோஷமாக இருக்கவேண்டும். தந்தையின் நினைவில் இருப்பதனால் உங்களுடைய சகல குழப்பங்களும் முடிவடைகின்றன. பாபா எங்கள் தந்தையாவார். அவர் எங்களுக்குக் கற்பித்து, பின்னர் தன்னுடன் எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பரமாத்மாவான தந்தையுடன் இவ்வாறு உரையாடுங்கள்: பாபா, நான் இப்போது புரிந்து கொள்கின்றேன். நான் பிரம்மாவையும், விஷ்ணுவையும் புரிந்து கொள்கின்றேன். பிரம்மா விஷ்ணுவின் தொப்புளில் தோன்றினார். விஷ்ணு பாற்கடலில் காட்டப்பட்டுள்ளார். பிரம்மா சூட்சும உலகில் காட்டப்பட்டுள்ளார். உண்மையில், அவர் இங்கேயே இருக்கின்றார். விஷ்ணுவோ ஆட்சி செய்பவர். பிரம்மா விஷ்ணுவிலிருந்து உருவாகியிருந்தால், அவரும் நிச்சயமாக ஆட்சி செய்வார். அவர் விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியிருந்தால், அது அவர் மீண்டும் குழந்தையாகுவதைப் போன்றதாகும். தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பிரம்மா தனது 84 பிறவிகளை நிறைவு செய்த பின்னர், விஷ்ணு பூமியின் அதிபதி ஆகுகின்றார். சிலருக்கு இவ்விடயங்கள் நன்றாகப் புரியாததால், அவர்களின் சந்தோஷப் பாதரசம் அதிகரிப்பதில்லை. நீங்கள் கோபியரும், கோபிகைகள் ஆவீர்கள். அவர்கள் சத்தியயுகத்தில் இருப்பவர்கள் அல்ல. அங்கே, நீங்கள் இளவரசர்களும், இளவரசிகளும் ஆவீர்கள். கோபிவல்லபர் கோபியரதும், கோபிகைகளினதும் தந்தையாவார். பிரஜாபிதா பிரம்மா அனைவரதும் தந்தையாவார். ஆனால் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை அசரீரியான சிவன் ஆவார். நீங்கள் அனைவரும் வாய்வழித் தோன்றல்கள் ஆவீர்கள். பிரம்மகுமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். எவ்விதமான தீய பார்வையும் இருக்கக்கூடாது. இதிலேயே மாயை உங்களைத் தோற்கடிக்கின்றாள். தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியிலிருந்து இதுவரை நீங்கள் கற்ற அனைத்தையும் அகற்றிவிடுங்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைக் கற்றிடுங்கள். ஏணிப்படம் முதற்தரமானது. அனைத்தும் ஒரு விடயத்தில் தங்கியுள்ளன: கீதையின் கடவுள் யார்? கிருஷ்ணரைக் கீதையின் கடவுள் என அழைக்க முடியாது. அவர் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்த தேவர் ஆவார். அவரின் பெயர் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கருநீல நிறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இலக்ஷ்மி, நாராயணனும் கருநீல நிறத்திலேயே சித்தரிக்கப்பட்டுள்ளார். இது ஏன் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இராமச்சந்திரனையும் கருநீல நிறத்திலேயே சித்தரித்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: அவர் காமச்சிதையில் அமர்ந்ததால் இவ்வாறு ஆகினார். ஒருவரின் பெயரே குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது அனைவரையும் குறிக்கின்றது. நீங்கள் அனைவரும் பிராமணர்கள் ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானச்சிதையில் அமர்ந்துள்ளீர்கள். சூத்திரர்கள் காமச்சிதையில் அமர்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஞானக்கடலைக் கடைந்து பிறரை விழித்தெழச் செய்யும் வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். அவர்கள் நாடகத்திற்கு ஏற்ப நிச்சயமாக விழித்தெழுவார்கள். நாடகம் மிக, மிக மெதுவாகவே நகர்கின்றது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கோபிவல்லபருக்குச் சொந்தமான கோபியரும், கோபிகைகளும் என்ற விழிப்புணர்வுடன் எப்பொழுதும் இருங்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதால், உங்கள் சந்தோஷப் பாதரசம் எப்பொழுதும் உயர்வாகவே இருக்கும்.
2. இன்றுவரை நீங்கள் கற்ற அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றி, இப்பொழுது தந்தை உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைக் கற்றிடுங்கள். சகோதர, சகோதரிகள் என்ற விழிப்புணர்வினால் தீய பார்வையை முடித்துவிடுங்கள். மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள்.ஆசீர்வாதம்:
உங்கள் உண்மையினுடாக நடைமுறை இராஜரீக வடிவத்தின் காட்சியை அருள்கின்ற சொரூபம் ஆகுவீர்களாக.ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய உண்மையினூடாக உங்கள் இராஜரீகத்தின் காட்சியை நடைமுறையில் அருள்கின்ற, அத்தகைய நேரம் இப்பொழுது வரவுள்ளது. வெளிப்பாட்டிற்கான நேரத்தில், மாலையின் மணிகளின் வரிசையின் எண்களும், எதிர்கால இராச்சிய வடிவமும் வெளிப்படும். இப்பொழுது, நீங்கள் விரைந்தோடும் பொழுது ஏற்படும் போட்;டி என்ற சிறிதளவு தூசியின் திரை, பிரகாசிக்கும் வைரங்களை மறைக்கின்றன. இறுதியில், எவ்வாறாயினும், இத் திரை அகற்றப்பட்டு, மறைந்திருக்கும் வைரங்கள் தமது முழுமையான, சம்பூர்ணமான வடிவத்தை வெளிப்படுத்துவார்கள். இராஜ குடும்பத்தினர் இப்பொழுதிலிருந்து தமது இராஜரீக வடிவத்தை காட்டுவார்கள், அதாவது, தமது எதிர்கால அந்தஸ்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். எனவே, உங்கள் உண்மையினூடாக, இராஜரீக வடிவத்தின் காட்சியை அருளுங்கள்.
சுலோகம்:
ஏதாவது ஒரு வழிமுறையினால் சகல வீணானவையும் முடிக்கப்பட்டு, சக்திசாலி வெளிப்படட்டும்.