17-04-2021 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையிடமுள்ளவை அனைத்தையும் பெற்றுள்ளீர்கள். இவற்றைக் கிரகித்து, மற்றவர்களும் அதேபோன்று செய்வதற்குத் தூண்டுங்கள். கேள்வி: திரிகாலதரிசியான தந்தை நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துள்ள போதிலும் ஏன் நாளைய விடயங்கள் எதையும் உங்களுக்கு இன்றே கூறுவதில்லை? பதில்: பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நான் முற்கூட்டியே அனைத்தையும் உங்களுக்குக் கூறினால் நாடகத்தில் களிப்பு இருக்காது. இது நியதியாகாது. நான் அனைத்தையும் அறிந்திருந்தாலும், இன்னமும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். என்னால் எதையும் முன்கூட்டியே உங்களுக்குக் கூறமுடியாது. இதனாலேயே என்ன நிகழும் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது. பாடல்: உங்கள் பாதையிலேயே வாழ்ந்து, உங்கள் பாதையிலேயே மடிவேன். ஓம் சாந்தி. அவர் சகல ஆத்மாக்களினதும் பரலோகத் தந்தையாவார். அவர் ஆத்மாக்களுடனேயே பேசுகின்றார். அவர் "குழந்தாய், குழந்தாய்!” எனக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். சரீரம் ஒரு புதல்வியினுடையதாக இருந்தாலும், சகல ஆத்மாக்களும் புதல்வர்களேயாவர். ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு வாரிசு ஆவார். அதாவது, ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஓர் ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை உள்ளது. தந்தை வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆஸ்தியைக் கோருவதற்கான உரிமை உள்ளது. எல்லையற்ற தந்தையை அதிகளவில் நினைவு செய்யுங்கள். இதற்கே முயற்சி தேவை. பாபா எங்களுக்குக் கற்பிப்பதற்காக பரந்தாமத்திலிருந்து வந்திருக்கின்றார். சாதுக்களும், புனிதர்களும் தங்களின் சொந்த வீடுகளிலிருந்தே வருகின்றார்கள், அவர்களில் சிலர் கிராமங்களிலிருந்து வருகின்றனர். தந்தை எங்களுக்குக் கற்பிப்பதற்காகப் பரந்தாமத்திலிருந்து வந்திருக்கின்றார். எவருமே இது பற்றி அறியமாட்டார்கள். எல்லையற்ற தந்தையே தூய்மையாக்குபவரும், தந்தையாகிய கடவுளும் ஆவார். அவர் ஞானக்கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். அத்துடன் அதிகாரி என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். அவரிடம் என்ன ஞானம் உள்ளது? அவரிடம் ஆன்மீக ஞானம் உள்ளது. தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே சத்தியமானவரும், உணர்வுள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். அவருக்குப் பெரும் புகழ் உள்ளது. அவரிடம் இவையெல்லாம் உள்ளன. ஒரு கடைக்காரர் தன்னிடம் இத்தனை வகைகள் உள்ளன எனக் கூறுவார். தந்தையும் கூறுகின்றார்: நான் ஞானக்கடலும், அமைதிக் கடலும், பேரானந்தக் கடலும் ஆவேன். என்னிடம் இவையனைத்தும் இருப்பில் உள்ளன. நான் அவற்றை விநியோகிப்பதற்காக சங்கம யுகத்தில் வருகின்றேன். நான் என்னிடமுள்ள அனைத்தையும் உங்களுக்கு விநியோகிக்கின்றேன். எவ்வாறாயினும், நீங்கள் எந்தளவிற்குக் கிரகிக்கின்றீர்கள் என்பதும், எந்தளவு முயற்சி செய்கின்றீர்கள் என்பதும் உங்கள் ஒவ்வொருவரிலுமே தங்கியுள்ளது. தந்தையிடம் என்ன உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இதை மிகச் சரியாகப் புரிந்துகொள்கின்றீர்கள். இந்நாட்களில், எவருமே தன்னிடமுள்ளதை மிகச்சரியாக ஒத்துக்கொள்வதில்லை. சிலரின் செல்வம் நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருக்கும்… என நினைவுகூரப்படுகின்றது. அவையனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. நெருப்பு வெளிப்படும்போது அனைத்துமே அழிக்கப்படும். அரசர்கள் தங்களின் அரண்மனைகளில் பலமான அறைகளைக் கொண்டுள்ளனர். பூகம்பங்கள் அல்லது உக்கிரமான தீ பரவினாலும்கூட அவர்களால் அனைவரையும் காப்பாற்ற முடியும். இங்குள்ள எதுவுமே அங்கு பயன்படாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சுரங்கங்கள் அனைத்தும்கூட மீண்டும் நிரம்பும். விஞ்ஞானமும்கூட சீர்திருத்தப்பட்டு, உங்களுக்குப் பயனுள்ளதாகும். குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் முழு ஞானமும் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவீர்கள். இறுதியில் சிறிதளவு மாத்திரமே எஞ்சும். எங்களுக்கும் அது தெரியவரும். எவ்வாறு பாபா முற்கூட்டியே அனைத்தையும் உங்களுக்குக் கூறமுடியும்? தந்தை கூறுகின்றார்: நானும் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நீங்கள் இதுவரைக்கும் பெற்றுள்ள ஞானம் முழுவதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்துசெல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகமாகவே கருதப்படவேண்டும். நாளைக்கு நிகழவேண்டியதை நாளைக்குப் பார்ப்போம். நாளைக்கு என்ன நிகழும் என்பதை பாபா இன்று உங்களுக்குக் கூறமாட்டார். மக்கள் இந்நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை மிகவும் அதிகரித்துவிட்டார்கள்! இந்நாடகத்தைப் புரிந்துகொள்வதற்கு தைரியம் தேவை. உங்களின் தாய் மரணித்தாலும் அல்வா சாப்பிடுங்கள்! அவர் மரணித்து வேறொரு பிறவி எடுத்துள்ளார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். நாங்கள் ஏன் அழவேண்டும்? பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: இக்கண்காட்சி இதே திகதியில் இதே இடத்தில், 5000 வருடங்களுக்கு முன்னர் இதேவிதமாக இடம்பெற்றது என நீங்கள் பத்திரிகைகளில் அச்சிடலாம். உலகின் வரலாறும், புவியியலும் இப்பொழுது மீண்டும் நிகழ்கின்றது என நீங்கள் எழுதலாம். இவ்வுலகம் இன்னமும் சில நாட்களுக்கே எஞ்சியிருக்கும் என்பதையும், அனைத்தும் அழிக்கப்படும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் முயற்சி செய்து, பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவோம். பாவச் செயல்கள் செய்யும் காலம் துவாபர யுகத்தில் ஆரம்பமாகின்றது. அக்காலப் பகுதியிலேயே பாவச் செயல்கள் செய்யப்படுகின்றன. இந்நேரத்தில் நீங்கள் பாவச் செயல்களை வெற்றிகொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் பாவச் செயல்களை வெற்றிகொள்கின்றீர்கள். பின்னர் நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாக இருப்பீர்கள். அங்கு நீங்கள் ஆத்ம உணர்வில் இருப்பீர்கள். அங்கு சரீர உணர்வு இருக்காது. கலியுகத்திலேயே சரீர உணர்வு உள்ளது. சங்கம யுகத்தில், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பரமதந்தை, பரமாத்மாவையும் அறிவீர்கள். இது தூய பெருமையாகும். பிராமணர்களாகிய நீங்களே அதி மேன்மையானவர்கள். நீங்களே பிராமண குலத்தின் அதி மேன்மையான அலங்காரங்கள். நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். வேறு எவரும் இதைப் பெறுவதில்லை. இதுவே உங்களின் அதி மேன்மையான குலம் ஆகும். "அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோபி வல்லபரின் குழந்தைகளிடம் கேளுங்கள்.” என நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது ஓர் அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்கின்றீர்கள். நீங்கள் எதையாவது பெற்ற பின்னர் அந்தளவு சந்தோஷம் இருக்காது. ஒருவர் ஏழையிலிருந்து செல்வந்தர் ஆகும்போது, பெருமளவு சந்தோஷம் உள்ளது. நீங்கள் எந்தளவிற்கு அதிக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு இராச்சியம் என்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்பவே பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்ற பிரதான விடயம்: உங்களின் அதியன்பிற்கினிய தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் அனைவரதும் அன்பிற்கினிய தந்தையாவார். அவர் மாத்திரமே வந்து அனைவருக்கும் சந்தோஷத்தையும், அமைதியையும் கொடுக்கின்றார். தேவர்களின் இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு அரசர்களோ, அரசிகளோ இல்லை. அங்கு, நீங்கள் அவர்களை சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் என்றே அழைப்பீர்கள். அவர்கள் இறைவன், இறைவி என அழைக்கப்படுவார்களாயின், அரசர்கள், அரசிகள், பிரஜைகள் அனைவருக்கும் அது பொருந்தும். ஏனெனில் அவர்கள் அனைவருமே இறைவன், இறைவி ஆகியிருப்பார்கள். இதனாலேயே அவர்களை இறைவன், இறைவி என அழைக்க முடியாது. கடவுள் ஒருவரே. மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. சூட்சுமலோக வாசிகளான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் கூட தேவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். எவ்வாறு பௌதீக உலக வாசிகள் இறைவன், இறைவி என அழைக்கப்பட முடியும்? அனைத்திலும் அதியுயர்ந்தது அசரீரி உலகமாகும், பின்னர் சூட்சுமலோகம் உள்ளது, அதன்பின்னர் இது மூன்றாம் இலக்கமாகும். இது உங்கள் புத்தியில் இருக்கவேண்டும். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரதும் தந்தை சிவபாபா ஆவார். அவரே ஆசிரியரும், குருவும் ஆவார். அத்துடன் அவர் பொற்கொல்லர், சட்ட நிபுணர் போன்றோரும் ஆவார். அவர் அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவித்துள்ளார். சிவபாபா அத்தகைய மகத்தான சட்ட நிபுணர் ஆவார்! அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? "பாபா, நான் உங்களை மறந்துவிடுகின்றேன்” என நீங்கள் ஏன் கூறுகின்றீர்கள்? மாயையின் புயல்கள் பல உள்ளன. பாபா கூறுகின்றார்: இவ்வாறு நிகழும். நீங்கள் ஏதாவது முயற்சி செய்யவேண்டும். இது மாயையுடனான யுத்தமாகும். பாண்டவர்களான நீங்கள் கௌரவர்களுடன் யுத்தம் புரிவதில்லை. பாண்டவர்கள் எவ்வாறு யுத்தம் செய்திருக்க முடியும்? அவ்வாறாயின், அவர்கள் வன்முறையாளர்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும். தந்தை வன்முறைகளைக் கற்பிப்பதில்லை. அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், நாங்கள் யுத்தம் செய்வதில்லை. தந்தை தன்னை நினைவு செய்வதற்கான ஒரு வழிமுறையைக் காண்பிக்கின்றார். அதனால் மாயையிடமிருந்து எவ்வித தாக்குதலும் வரமாட்டாது. சந்தோஷமா, துன்பமா முதலில் வேண்டும் என ஒருவரிடம் கேட்கப்பட்ட கதையொன்று உள்ளது. தனக்கு முதலில் சந்தோஷமே வேண்டும் என அவர் கூறினார். சத்திய யுகத்தில் எவ்வித துன்பமும் இருக்க முடியாது. இந்நேரத்தில் அனைத்துச் சீதைகளும் இராவணனின் துன்பக் குடிலில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் முழுவதும் கடலின் மத்தியிலுள்ள ஒரு தீவாகும். அனைவரும் இப்பொழுது இராவணனின் சிறையில் உள்ளனர். தந்தை அனைவருக்கும் சற்கதியருள வந்துள்ளார். அனைவரும் துன்பக் குடிலில் உள்ளனர். சுவர்க்கத்தில் சந்தோஷமும், நரகத்தில் துன்பமும் உள்ளது. இது துன்பக் குடில் எனப்படுகின்றது. அதுவோ துன்பமற்ற பூமியான சுவர்க்கம் ஆகும். இதில் அத்தகைய பெரும் வேறுபாடு உள்ளது! குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்ய முயற்சிக்க வேண்டும், அப்பொழுது உங்களின் சந்தோஷப் பாதரசம் உயரும். நீங்கள் தந்தையின் ஆலோசனையைப் பின்பற்றாவிட்டால், நீங்கள் மாற்றாந்தாய்க் குழந்தைகள். நீங்கள் பிரஜைகளாகவே ஆகுவீர்கள். உண்மையான குழந்தைகள் இராச்சியத்திற்குள் செல்வார்கள். நீங்கள் இராச்சியத்திற்குள் செல்ல விரும்பினால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் கிருஷ்ணரிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுவதில்லை. இரு வழிகாட்டல்கள் மாத்திரமே உள்ளன. நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள், அதற்கான வெகுமதியை நீங்கள் சத்திய யுகத்தில் பெறுவீர்கள். பின்னர், துவாபர யுகத்தில், நீங்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். அனைவரும் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் அசுரர்கள் ஆகுகின்றனர். நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். தந்தையொருவர் மாத்திரமே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவரே கடவுள் ஆவார். நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் மிகவும் தூய்மையாகின்றீர்கள். நச்சுக் கடலில் தத்தளிப்பதே முதலாவது பாவம் ஆகும். தேவர்கள் நச்சுக்கடலில் தத்தளிப்பதில்லை. மக்கள் கேட்கின்றனர்: அங்கு குழந்தைகள் பிறப்பதில்லையா? அங்கு குழந்தைகள் ஏன் இருக்கக்கூடாது? எவ்வாறாயினும், அது விகாரமற்ற உலகமாகும், அது முற்றிலும் விகாரமற்றது. இவ்விகாரங்கள் அங்கு இருப்பதில்லை. தேவர்கள் இறை உணர்விலன்றி, ஆத்ம உணர்வில் மாத்திரமே இருப்பார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் ஆத்ம உணர்விலும், அத்துடன் இறை உணர்விலும் இருக்கின்றீர்கள். முதலில், அவ்விரு உணர்வுகளில் எதுவும் உங்களிடம் இருக்கவில்லை. சத்திய யுகத்தில், நீங்கள் கடவுளை அறியமாட்டீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் பழைய சரீரங்களை நீக்கி, புதியதை எடுப்பீர்கள் என்பதையும் மாத்திரமே நீங்கள் அறிவீர்கள். நீங்கள் உங்களின் பழைய சரீரத்தை நீக்கி, புதியதை எடுக்கவுள்ளபோது, முற்கூட்டியே அதைப் புரிந்துகொள்வீர்கள். உங்களுக்குக் குழந்தை பிறக்கவுள்ளபோதுகூட, அதன் காட்சியை முற்கூட்டியே பெறுவீர்கள். நீங்கள் யோக சக்தி மூலம் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். எனவே, யோக சக்தி மூலம் குழந்தைகள் பிறக்க முடியாதா? நீங்கள் யோக சக்தியால் எதையும் தூய்மையாக்கலாம். எவ்வாறாயினும், நீங்கள் நினைவில் இருப்பதற்கு மறக்கின்றீர்கள். சிலர் இப்பயிற்சியை விருத்தி செய்கின்றார்கள். பல சந்நியாசிகள் தங்களுக்குக் கிடைக்கும் உணவு மீது பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அந்நேரத்தில், தாங்கள் அவ்வுணவை உண்பதற்கு முன்னர் பல மந்திரங்களை உச்சரிக்கின்றனர். உங்களுக்கும்கூட முன்னெச்சரிக்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இறைச்சி உண்ணவோ, மதுவருந்தவோ கூடாது. நீங்கள் தேவர்களாகின்றீர்கள். தேவர்கள் ஒருபோதும் அசுத்தமானவற்றை உண்பதில்லை. நீங்கள் அவர்களைப் போன்று தூய்மையாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: என் மூலமாக என்னை அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். பின்னர் அறிவதற்கென எதுவுமே எஞ்சியிராது. சத்திய யுகத்தில் வேறுவிதமான கல்வி இருக்கும். இப்பொழுது இது இந்த மரண பூமியின் கல்வியின் இறுதியாகும். மரண பூமியின் வியாபாரம் முழுவதும் முடிவுக்கு வரும். பின்னர் அமரத்துவ பூமியின் வியாபாரம் ஆரம்பிக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் அமரத்துவ பூமியின் அதிபதிகளாக இருந்தோம். குழந்தைகளாகிய நீங்கள் அதீந்திரிய சுகத்தில் இருக்கவேண்டும். நீங்கள் அதி சந்தோஷத்தைப் பேணவேண்டும். நாங்கள் பரமதந்தை, பரமாத்மாவின் குழந்தைகளும், மாணவர்களும் ஆவோம். பரம தந்தை, பரமாத்மா இப்பொழுது எங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வார். இது பரமானந்தம் என அழைக்கப்படுகின்றது. இவ்விடயங்கள் சத்திய யுகத்தில் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுதே இதைச் செவிமடுக்கின்றீர்கள். இந்நேரத்தில் நீங்கள் இறை குடும்பத்தினர். கோப கோபியர்கள் அனுபவிக்கின்ற அதீந்திரிய சுகம் இந்நேரத்தின் ஞாபகார்த்தமே ஆகும். பரந்தாம வாசியான பாபா வந்து, எங்களின் தந்தையாகவும், ஆசிரியராகவும், குருவாகவும் ஆகுகின்றார். மூவரும் சேவகர்கள். அவர் இதையிட்டு எவ்வித அகந்தையும் கொண்டிருப்பதில்லை. அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்குச் சேவை செய்து, உங்களுக்கு அனைத்தையும் கொடுத்த பின்னர், நிர்வாணதாமத்திற்குச் சென்று அமர்ந்துகொள்கின்றேன். எனவே, அவர் எங்களின் சேவகர், இல்லையா? ராஜ பிரதிநிதிகள் எப்பொழுதும் தமது கடிதங்களில் ‘உங்கள் கீழ்ப்படிவான சேவகர்’ என்றே கையொப்பமிடுகின்றனர். பாபாவும் அசரீரியானவரும், அகங்காரமற்றவரும் ஆவார். அவர் எவ்வாறு இங்கிருந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் எனப் பாருங்கள்! வேறு எவராலுமே அத்தகைய மேன்மையான கல்வியை எங்களுக்குக் கற்பிக்க முடியாது. வேறு எவராலுமே அத்தகைய மேன்மையான கருத்துக்களை எங்களுக்கு வழங்க முடியாது. இவருக்குக் கற்பித்தவர் ஒரு குருவல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவருக்கு ஒரு குரு இருந்திருந்தால், அவர் ஏனைய பலருக்கும் ஒரு குருவாக இருந்திருக்க வேண்டும். அவர் ஒருவருக்கு மாத்திரம் குருவாக இருந்திருப்பாரா? தந்தை மாத்திரமே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். அவர் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். பாபா கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்தில் வருகின்றேன். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் முன்னைய கல்பத்திலும் சந்தித்தோம். தந்தை மாத்திரமே வந்து உங்களைத் தூய்மையாக்குகின்றார். நான் குழந்தைகளாகிய உங்களை 21 பிறவிகளுக்குத் தூய்மையாக்குகின்றேன். எனவே, நீங்கள் இவையனைத்தையும் கிரகித்து, பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துவதையெல்லாம் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நாங்கள் தந்தையிடமிருந்து எதிர்கால 21 பிறவிகளுக்கான எங்களின் ஆஸ்தியைக் கோருகின்றோம். இதை நினைவு செய்வதால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். இது பரமானந்தம் ஆகும். இப்பொழுது மாத்திரமே நீங்கள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகவும், பேரானந்தம் நிறைந்தவராகவும் ஆகுவதற்கான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் புத்துக்களாக (விவேகமற்றவர்கள்) இருப்பீர்கள். இலக்ஷ்மி, நாராயணனிடம் ஞானம் இருக்காது. அவர்களிடம் அது இருந்திருந்தால் அது தொன்றுதொட்டுத் தொடர்ந்திருக்க வேண்டும். தேவர்கள்கூட நீங்கள் அனுபவிக்கின்ற பரமானந்தத்தை அனுபவிக்க முடியாது. அச்சா. இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். தாரணைக்கான சாராம்சம்: - தேவர்கள் ஆகுவதற்கு, உங்களின் உணவிலும், பானத்திலும் அதிக சுத்தத்தைப் பேணவேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடித்தவாறு முன்னேறிச் செல்லுங்கள். யோக சக்தியினால் உங்கள் உணவை தூய்மையாக்குங்கள்.
- நாங்கள் பரமதந்தை, பரமாத்மாவின் குழந்தைகளும், மாணவர்களும் ஆவோம். அவர் இப்பொழுது எங்களைத் தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்லவுள்ளார். இந்த போதையைப் பேணி, அதி சந்தோஷத்தையும், பரமானந்தத்தையும் அனுபவம் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்: உங்கள் சொந்த பதற்றத்தில் கவனம் செலுத்தி, ஓர் உலக உபகாரியாக, உலக பதற்றத்தை முடிப்பீர்களாக. நீங்கள் பிறரையிட்டு அதிகளவு கவனம் செலுத்தினால், நீங்கள் உங்களுக்குள் அதிகளவு பதற்றத்தை உருவாக்குவீர்கள். எனவே, விரிவாக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக, சாராம்ச வடிவத்தில் ஸ்திரமாக இருந்து, எண்ணங்களின் எண்ணிக்கையை அமிழ்த்தி தரமான எண்ணங்களை கொண்டிருங்கள். முதன் முதலில் உங்கள் சொந்த பதற்றத்தில் கவனம் செலுத்தினால், உங்களால் உலகத்தில் உள்ள பல்வேறு பதற்றங்களை முடித்து, ஓர் உலக உபகாரி ஆக முடியும். முதன்முதலில், உங்களை பாருங்கள்: முதலில் சுய சேவையாகும். உங்களுக்கு நீங்கள் சேவை செய்யும் போது, பிறருக்கான சேவை தானாகவே இடம்பெறுகின்றது. சுலோகம்: யோகத்தை அனுபவம் செய்வதற்கு, திடசங்கற்ப சக்தியினால் உங்கள் மனதை கட்;டுப்படுத்துங்கள்.
---ஓம் சாந்தி---
|
|