19.04.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.12.85     Om Shanti     Madhuban


பரந்த, எல்லையற்ற புத்தியின் அடையாளம்.


இன்று, அன்புக்கடலும், சகல பொக்கிஷங்களை அருள்பவரும், ஆசீர்வாதங்களை அருள்பவருமான ஆன்மீகத் தந்தை, தனது ஒத்துழைக்கும், அன்பான, இலகு யோகிக் குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். ஆன்மீக அன்புடைய இந்தச் சந்திப்பானது, அதாவது, ஆத்மாக்களின் இந்தச் சந்திப்பானது ஒரு தனித்துவமான சந்திப்பாகும். கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் இத்தகைய ஆன்மீக ஒன்றுகூடல்கள் இடம்பெற முடியாது. சங்கமயுகமே ஆன்மீக சந்திப்புக்களுக்கான இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆசீர்வாதத்திற்குரிய நேரத்தில், ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள் ஆசீர்வாதங்களை அருள்பவரான தந்தையிடமிருந்து இந்த அழியாத ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார்கள். பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமாக இருக்கும் தந்தையின் அழியாத பாகம் இந்த வேளையிலேயே நிகழ்கிறது. இத்தகைய வேளையில், ஆசீர்வாதங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ஆத்மாக்கள் எல்லா வேளைக்குமான தமது உரிமையைக் கோருகிறார்கள். இத்தகைய ஆன்மீக ஒன்றுகூடலைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். இத்தகைய மேன்மையான பேறுகளைப் பெறும் கள்ளங்கபடமற்ற, சாதாரணமான ஆத்மாக்கள் எவ்வாறு உலகின் முன்னால் கருவிகள் ஆகியுள்ளார்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். இன்றைய உலகில், அரசியல் அறிவு, விஞ்ஞான அறிவிற்கான உரிமை, தற்காலிக இராச்சியத்திற்கான உரிமை அல்லது மதத் தலைவராக இருப்பதன் உரிமையைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை அனைவரும் விசேடமான ஆத்மாக்களாகக் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா என்ன சிறப்பியல்பைக் காண்கிறார்? அனைத்திற்கும் முதலில், எந்தவொரு பிரபல்யமான ஆத்மாக்களிடமும் பிராமண ஆத்மாக்களான உங்களிடம் உள்ள, உங்களையும் தந்தையையும் அறியும் சிறப்பியல்பு இல்லை. இதனாலேயே, கள்ளங்கபடமற்றவராகவும் சாதாரணமானவராகவும் இருக்கும் வேளையில், நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்று, பிறவி பிறவியாக விசேடமான பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். இன்றுள்ள பிரபல்யமான ஆத்மாக்களும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்குத் தலைவணங்குவதுடன் வணக்கம் தெரிவிக்கிறார்கள். நீங்கள் இத்தகைய விசேடமான ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். இத்தகைய ஆன்மீக போதையை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? விரக்தி அடைந்த, நம்பிக்கை இழந்துள்ள ஆத்மாக்களை நம்பிக்கை நிறைந்த ஆத்மாக்கள் ஆக்குவதே தந்தையின் சிறப்பியல்பு ஆகும். குழந்தைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா சூட்சும வதனத்தில் இருந்து புன்னகைத்தார். ஞானம் அற்ற எந்தவோர் ஆத்மாவிற்கும், இந்த முழு ஒன்றுகூடலும் உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் என்று சொன்னால், அவர் உங்களை நம்புவாரா? அவர் வியப்படைவார். எவ்வாறாயினும், தமது இதயங்களில் அன்பும் மேன்மையான உணர்வுகளையும் கொண்டுள்ள ஆத்மாக்களைத் தந்தை நேசிக்கிறார் என்பதை பாப்தாதா அறிவார். உங்களின் இதயத்திலுள்ள அன்பே, மேன்மையான பேறுகளைப் பெறுவதற்கான பிரதானமான அடிப்படை ஆகும். உங்களின் இதயபூர்வமான அன்பே, உங்களைத் தொலைதூரங்களில் இருந்து இங்கே வந்து, மதுவனவாசிகள் ஆக்குகிறது. இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தை, உங்களின் இதயபூர்வமான அன்பை விரும்புகிறார். ஆகவே, நீங்கள் என்ன செய்பவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், நீங்கள் இறைவனால் நேசிக்கப்படுகிறீர்கள். இதனாலேயே, அவர் உங்களைத் தனக்குச் சொந்தமானவர் ஆக்கியுள்ளார். உலகிலுள்ள மக்கள் இன்னமும் காத்திருக்கிறார்கள். தந்தை வரும்போது, இவ்வாறிருக்குமா அல்லது அவ்வாறு இருக்குமா? எனச் சிந்திக்கிறார்கள். எவ்வாறாயினும், உங்கள் அனைவரினதும் வாய்களில் இருந்தும் இதயங்களில் இருந்தும் என்ன வெளிப்படுகின்றன? ‘நான் இதைப் பெற்றுள்ளேன்.’ நீங்கள் நிரம்பியவர்கள் ஆகியுள்ளீர்கள். ஆனால், அந்தப் புத்திசாலிகளோ இப்போதும் தமது நேரத்தைத் தந்தையை இனங்கண்டு கொள்வதில் செலவிடுகிறார்கள். இதனாலேயே, தந்தை கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கப்படுகிறார். இனங்கண்டு கொள்ளும் உங்களின் சிறப்பியல்பானது உங்களை விசேடமான ஆத்மாக்கள் ஆக்கியுள்ளது. நீங்கள் இனங்கண்டு, பெற்றுள்ளீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சகல ஆத்மாக்களின் மீதும் உங்களுக்குக் கருணை பிறக்கிறதா? அனைவரும் ஆத்மாக்களே. அனைவரும் ஒரேயொரு எல்லையற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உங்களின் குடும்பத்தில் எந்தவோர் ஆத்மாவும் ஆசீர்வாதங்களைப் பெறாமல் விடுபடக்கூடாது. உங்களின் இதயங்களில் இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் உள்ளதா? அல்லது, உங்களின் சொந்த இல்லறங்களில் நீங்கள் மும்முரமாக இருக்கிறீர்களா? எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, எல்லையற்ற ஆத்மாக்களுக்குச் சேவை செய்யும் மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருத்தலே, வெற்றி அடைவதற்கான இலகுவான வழிமுறை ஆகும்.

நீங்கள் இப்போது சேவை செய்வதன் பொன் விழாவைக் கொண்டாடுகிறீர்கள், அல்லவா? நீங்கள் அதற்காக பெரியதொரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டுள்ளீர்கள், அல்லவா? நீங்கள் பெரியதொரு நிகழ்ச்சியைத் திட்டம் இட்டதைப் போல், நீங்கள் ஒவ்வொருவரும் பெரிய இதயத்துடனும் எல்லையற்ற முறையில் எல்லையற்ற ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஆயத்தங்களைச் செய்துள்ளீர்களா? அல்லது, எனக்குச் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால், நான் அதைச் செய்வேன், துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் வாய்ப்புக் கிடைத்தால், நான் அதைச் செய்வேன் என நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த ஆயத்தங்களை மட்டும் நீங்கள் செய்துள்ளீர்களா? அதை எல்லையற்ற ஆயத்தங்கள் என்று சொல்ல முடியுமா? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதை எல்லையற்ற உற்சாகத்தைக் கொண்டிருத்தல் என்று சொல்ல முடியாது. உங்களின் கடமையை நிறைவேற்றுவது, கீழ்ப்படிவாக இருப்பதன் அடையாளம் ஆகும். எவ்வாறாயினும், அதை மட்டும் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டிருத்தல் அல்லது எல்லையற்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருத்தல் என்று அழைக்க முடியாது. எல்லையற்றதாக இருப்பதன் அடையாளம், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையிலும் சேவையிலும் புதுமையை ஏற்படுத்துவதே ஆகும். உணவு பரிமாறுவதோ அல்லது சொற்பொழிவுகள் ஆற்றுவதோ, ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு வகையான சேவையிலும் புதுமையை ஏற்படுத்துவதே எல்லையற்றவராக இருத்தல் எனப்படுகிறது. சென்ற வருடம் நீங்கள் எதைச் செய்திருந்தாலும், நிச்சயமாக அதற்கு ஏதாவது ஆன்மீகச் சேர்க்கையை சேருங்கள். உங்களின் இதயத்தில் இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் உள்ளதா? அல்லது, இது முன்னர் இருந்தவாறே இப்போதும் தொடரும் என்று நினைக்கிறீர்களா? வழிமுறையும் வளர்ச்சியும் தொடர்ந்து ஒவ்வொரு கணமும் மாறுகின்றன. காலம் நெருங்கி வருவதைப் போல், நீங்களும் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் தந்தையினதும் குடும்பத்தின் நெருக்கத்தினதும் விசேடமான அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் என்ன புதுமையை ஏற்படுத்தலாம் என நினைத்துப் பாருங்கள். நீங்கள் இப்போது பெரியதொரு கருத்தரங்கை நடத்தப் போகிறீர்கள், இல்லையா? அதை எல்லோரும் செய்கிறார்களா? அல்லது மூத்தவர்கள் மட்டுமே செய்கிறார்களா? இது அனைவரினதும் பணியல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்: சேவையில் புதுமையை ஏற்படுத்துவதற்கு, முன்னணியில் இருப்பதற்குச் சிலர் மட்டுமே கருவிகள் ஆக்கப்பட்டிருந்தாலும், நான் முன்னேற வேண்டும். உதாரணமாக, சிலரே சொற்பொழிவுகள் ஆற்றுவார்கள். அப்போது, ஒன்றுகூடல் முழுவதும் என்ன செய்வார்கள்? அனைவருக்கும் கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு பணி பூர்த்தியாகும். எவ்வாறாயினும், ஒவ்வொருவரும் ஒரு கருவி ஆகவேண்டும். எதில்? நீங்கள் எங்கே இருந்தாலும், நீங்கள் எதற்குக் கருவியாக இருந்தாலும், எங்கு பெரியதொரு நிகழ்ச்சி இடம்பெற்றாலும், அந்த வேளையில், தொலைவில் இருந்தாலும், உங்கள் ஒவ்வொருவரின் மனங்களிலும் சதா மேன்மையான நல்லாசிகளும் மேன்மையான உணர்வுகளும் உலக நன்மைக்காக இருக்க வேண்டும். உதாரணமாக, விஐபி களால் ஒரு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும்போது, அவர்கள் தமது நல்லாசிகளைத் தெரிவிப்பார்கள். எனவே, நீங்கள் அவர்களை விடக் குறைந்தவர்களா? உங்கள் அனைவரினதும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் நிச்சயமாக அந்தப் பணியை வெற்றி அடையச் செய்யும்.

இந்த விசேடமான தினத்தில், ஒரு கைக்காப்பைக் கட்டிக் கொள்ளுங்கள்(சத்தியத்தைச் செய்யுங்கள்). உங்களின் எண்ணத்தின் சக்தியை அல்லது காலத்தின் சக்தியை எதற்கும் வீணாக்காதீர்கள். ஆனால் எல்iலையற்ற சேவைக்குக் கருவி ஆகுங்கள். அத்துடன் ஒவ்வொரு கணமும் உங்களின் மனதின் சக்தியால் ஒத்துழையுங்கள். கருத்தரங்கு அபுவில் நடக்கிறது என்றும், நீங்கள் இன்ன நாட்டில் இருக்கிறீர்கள் என்றும் நினைக்காதீர்கள். இல்லை. நீங்கள் அனைவரும் எல்லையற்ற பணியில் ஒத்துழைப்பவர்கள். எனவே, அதற்கான சூழலையும் சுற்றாடலையும் உருவாக்குங்கள். அவர்களால் விஞ்ஞான சக்தியால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஓர் ஏவுகணையை அனுப்ப முடியுமாக இருந்தால், மௌன சக்தியைப் பயன்படுத்தி, உங்களால் உங்களின் மனதின் சக்தியால், உங்களின் நல்லாசிகளாலும் நன்மை செய்யும் உணர்வுகளாலும் இங்கு அபுவுடன் ஒத்துழைக்க முடியாதா? சிலர் தமது வார்த்தைகளால் அல்லது செயல்களால் பௌதீக ரூபத்தில் கருவிகள் ஆகுகிறார்கள். சிலர் மனதினால் சேவை செய்வதன் மூலம் கருவிகள் ஆகுகிறார்கள். ஆனால், எத்தனை நாட்களுக்கு நிகழ்ச்சி நடந்தாலும், அது ஐந்து அல்லது ஆறு நாட்கள் ஆனாலும், அந்தக் காலப்பகுதியில், ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் இந்தச் சேவைக்கான கைக்காப்பைக் கட்டிக் கொள்ள வேண்டும்: ஆத்மாவான நான், வெற்றியை ஏற்படுத்துவதற்குக் கருவி ஆகவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பொறுப்பானவராகக் கருத வேண்டும். அனைவரும் பொறுப்பானவர் என்பதனால், அனைவருக்கும் சொற்பொழிவு ஆற்றுவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அல்லது, உங்களுக்கு ஒரு விசேடமான கடமை கொடுக்கப்பட்டால் மட்டுமே நீங்கள் பொறுப்பானவர் ஆகுகிறீர்கள் என்றும் அர்த்தமல்ல. இதைப் பொறுப்பானவர் என்று அழைக்க முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும், எத்தகைய கடமையைப் பெற்றாலும், அது தொலைவில் அமர்ந்திருப்பதாகவோ அல்லது மேடையில் செல்வதாகவோ இருந்தாலும், நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இது உலகம் முழுவதும் ஆன்மீகச் சேவையின் அலைகளைப் பரப்புதல் எனப்படுகிறது. சந்தோஷம், ஊக்கம், உற்சாகத்தின் அலைகளைப் பரப்புங்கள். இந்த முறையில் நீங்கள் ஒத்துழைக்கிறீர்களா? இந்தக் கருத்தரங்கில் நீங்கள் ஏதாவது புதுமையைக் காட்டுவீர்கள், அல்லவா? இது பொன்விழா. எனவே, பொன்னான யுகம் வரப் போகிறது என்ற சந்தோஷ அலையை எங்கும் பரப்புங்கள். பயப்படுகின்ற, நம்பிக்கை இல்லாத ஆத்மாக்களிடையே மேன்மையான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்குங்கள். பயப்படும் ஆத்மாக்களில் சந்தோஷ அலை உருவாக்கப்பட வேண்டும். இதுவே பொன்விழாவின் பொன்னான சேவை ஆகும். இந்த இலக்கை வைத்திருங்கள். நீங்கள் நிஜத்தங்கமாகி, ஒவ்வொரு பணியிலும் உங்களை வளைத்து, பொன்விழாவைக் கொண்டாடுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இதுவரை எதைச் செய்யவில்லையோ, அதைச் செய்வதன் மூலம் இதை நடைமுறையில் காட்ட வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவும் ஏனைய பல ஆத்மாக்களுக்குச் சேவை செய்வதற்குக் கருவி ஆகும்படி அந்த ஆத்மாக்களைக் கருவிகள் ஆக்குங்கள். ஏதாவதொரு நேரத்தில் நீங்கள் அதைச் செய்வீர்கள் எனத் தொடர்ந்து சிந்திப்பதனால், கூறுவதனால், காலம் கடந்து செல்கிறது. அதன்பின்னர், இறுதியில், உங்களால் யாரைப் பிடிக்க முடியுமோ, அவர்களை அழைத்து வருவீர்கள். ஆத்மாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பலருக்குக் கருவி ஆகக்கூடிய ஓர் ஆத்மாவை அழைத்து வருவதற்காகவே நீங்கள் பெரிய எல்லையற்ற நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். சேவை எங்கும் நிகழ்கிறதல்லவா? உங்களின் சொந்த இடங்களிலும் நீங்கள் தொடர்ந்து அத்தகைய ஆத்மாக்களுக்காக நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். ஆகவே, பொன்விழாவில், உங்களுக்குச் சேவை செய்யும் அலையைப் பரப்புங்கள். உங்களுடன் கூடவே, இந்தக் கணத்தில் இருந்து ஏனைய பல விசேடமான ஆத்மாக்களுக்கும் சேவை செய்யுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புரிகிறதா?

அன்புடன் முயற்சி செய்யுங்கள். அன்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஓர் ஆத்மா, ‘இல்லை’ எனக் கூறவிருந்தாலும், அதை மாற்றி ‘ஆமாம்’ எனச் சொல்லுவார். இதுவே அன்பாகும். அவர்களுக்கு நேரம் இல்லாவிட்டாலும், அவர்கள் நேரத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஏனெனில் இது ஆன்மீக அன்பாகும். எனவே, அத்தகைய நிலத்தைத் தயார் செய்யுங்கள். அந்த நிலம் இவ்வாறுள்ளது என்று நினைக்காதீர்கள். அந்த மக்கள் அவ்வாறுள்ளார்கள் என்று நினைக்காதீர்கள்! நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? நீங்கள் மாறினீர்கள், இல்லையா? தூய ஆசிகள் எப்போதும் மேன்மையான பலனைக் கொடுக்கும். அச்சா.

உங்களின் சொந்த வீட்டிற்கு நீங்கள் வந்திருப்பதை இட்டுத் தந்தை களிப்படைகிறார். ஆனால் காலமும் எல்லைக்குட்பட்டதாகவே உள்ளது. எவ்வளவு பேர் வந்தாலும், ஒரே நேரமே அவர்களுக்கு இடையே பகிரப்படுகிறது. ஏதாவதொன்றில் நான்கு மட்டுமே இருந்து, அதை எட்டுப் பேர் பெறவேண்டியிருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதற்கேற்ப அவற்றைப் பகிர்ந்தளிப்பீர்கள், இல்லையா? பாப்தாதாவும் சரியான வழிமுறைக்கேற்பவே செயற்பட வேண்டியுள்ளது. ஏன் உங்களில் பலர் வந்துள்ளீர்கள்? என பாப்தாதாவால் கேட்க முடியாது. நீங்கள் வரலாம். உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஆனால் காலத்திற்கேற்ப ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். ஆமாம், சூட்சும வதனத்தில், காலத்திற்கு வரையறையே கிடையாது.

மகாராஷ்டிரா அற்புதங்களைச் செய்வார்கள். இத்தகைய ஒரு மகாத்மாவைக் கருவி ஆக்கினால் மட்டுமே நீங்கள் மகாராஷ்டிரா (மகத்தான இடம்) என்று சொல்ல முடியும். டெல்லி எவ்வாறாயினும் ஒரு கருவியே. நீங்கள் பல கருத்தரங்குகளை நடத்தியுள்ளீர்கள். எனவே, இப்போது உங்களால் முடிந்தவற்றை நீங்கள் செய்வீர்கள் என நினைக்காதீர்கள். இல்லை. ஒவ்வொரு வருடமும் நீங்கள் முன்னேற வேண்டும். ஆத்மாக்கள் பலரை உங்களால் கருவிகள் ஆக்க முடியும். டெல்லியைச் சேர்ந்தவர்களும் விசேடமான கருவிகள் ஆகவேண்டும். இராஜஸ்தான் என்ன செய்வீர்கள்? இராஜஸ்தான் எப்போதும் ஒவ்வொரு பணியிலும் முதலாம் இலக்கத்தைக் கோர வேண்டும். ஏனெனில், முதலாம் தரத் தலைமையகம் இராஜஸ்தானிலேயே உள்ளது. நீங்கள் தரம், எண்ணிக்கை என்ற இரண்டிலும் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும்.

இரட்டை வெளிநாட்டவர்களான நீங்களும் புதுமையைச் செய்து காட்டுவீர்கள், அல்லவா? ஒவ்வொரு நாட்டிலும் நல்ல செய்திகளின் அலையைப் பரப்புங்கள். அப்போது அனைவரும் தமது இதயபூர்வமான ஆசீர்வாதங்களை உங்களுக்கு வழங்குவார்கள். மக்கள் அதிகளவில் பயப்படுகிறார்கள். இத்தகைய ஆத்மாக்களை தற்காலிகமான சந்தோஷத்தில் இல்லாமல், ஆன்மீக சந்தோஷத்தின் அலைக்குள் கொண்டுவாருங்கள். ஆத்மாக்களான நீங்கள் தமக்கு ஒரு தூய செய்தியை வழங்குவதற்காக வந்திருக்கும் தேவதைகள் என அவர்கள் உணரும் வகையில் ஆன்மீக சந்தோஷத்தின் அலையைப் பரப்புங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இப்போது, எந்தப் பிராந்தியம் புதுமையை ஏற்படுத்துகிறது என்பதையும் நீங்கள் எண்ணிக்கையையா அல்லது தரத்தையா கொண்டுவருகிறீர்கள் என்றும் பார்ப்போம். அதன்பின்னர் பாப்தாதா உங்களுக்குப் பெறுபேற்றைக் கூறுவார். அத்துடன் புதுமையையும் ஏற்படுத்துங்கள். புதுமையின் அடிப்படையில் நீங்கள் ஓர் இலக்கத்தைப் பெறுவீர்கள். அச்சா.

சுயஇராச்சியத்திற்கும் உலக இராச்சியத்திற்கும் உரிமையுள்ள சகல ஆத்மாக்களுக்கும், சதா எல்லையற்ற மனோபாவத்துடன் எல்லையற்ற சேவையில் ஈடுபட்டுள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், சதா எல்லையற்ற இதயங்களையும், எல்லையற்ற புத்திகளையும், எல்லையற்ற ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், சதா ஒவ்வொரு வகையான சேவைக்குத் தங்களைக் கருவிகளாகக் கருதியவண்ணம் ஆக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சதா தந்தையைப் போல் மேன்மையானவர்களாக இருந்து சேவையில் வெற்றி பெறுபவர்களுக்கும், இத்தகைய ஆன்மீக ஆத்மாக்களுக்கு, ஆன்மீகத் தந்தையிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குமாரிகளைச் சந்திக்கிறார்:

குமாரி வாழ்க்கை என்பது எப்போதும் குறைகூறுவதில் இருந்த விடுபட்ட வாழ்க்கை என நினைவுகூரப்படுகிறது. குமாரி வாழ்க்கை எப்போதும் ஒரு மேன்மையான வாழ்க்கையாக நினைவு செய்யப்படுவதுடன், பூஜிக்கப்படுகிறது. நீங்கள் உங்களை இத்தகைய மேன்மையான பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? குமாரிகளான நீங்கள் அனைவரும் விசேடமான அற்புதங்களைச் செய்து காட்டுபவர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் படிப்பவர்கள் மட்டுமா? நீங்கள் உலகச் சேவையாளர்கள் ஆகுவீர்களா அல்லது எல்லைக்குட்பட்ட சேவையாளர்கள் ஆகுவீர்களா? நீங்கள் குஜராத்திற்கு மட்டும், அல்லது மத்தியப் பிரதேசத்திற்கு மட்டும் அல்லது இன்ன இடத்திற்கு மட்டும் சேவை செய்யப் போகிறீர்களா? நீங்கள் அத்தகையவர்கள் இல்லையல்லவா? என்றும் தயாராக இருக்கும் ஆத்மாக்கள் மற்றவர்களையும் என்றும் தயார் ஆக்குகிறார்கள். எனவே, குமாரிகளான உங்களால் நீங்கள் விரும்பிய எதையும் செய்ய முடியும். இன்றைய அரசாங்கத்தால் அது கூறுவதைச் செய்ய முடியாமல் இருக்கிறது. இத்தகைய அரசாங்கத்தில் இருந்தவண்ணம் நீங்கள் சேவை செய்ய விரும்பினால், இத்தகைய சக்திவாய்ந்த சேவை இடம்பெறும்போது வெற்றி ஏற்படும். இந்த ஞானத்தைக் கற்கும்போது நீங்கள் ஓர் இலக்கத்தைக் கோரினீர்களா? முதலாம் இலக்கத்தை நிச்சயமாகக் கோரும் இலக்கைக் கொண்டிருங்கள். எப்போதும் குறைவாகப் பேசும் சிறப்பியல்பைக் காட்டுங்கள். ஆனால், நீங்கள் யாருக்கு முன்னால் சென்றாலும் அவர்கள் உங்களின் வாழ்க்கையில் இருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேச்சினுடாக ஒரு பாடத்தைக் கற்பிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உங்களின் வாழ்க்கையினூடாக ஒரு பாடத்தைக் கற்பிப்பது ஒரு சிறப்பியல்பே ஆகும். உங்களின் வாழ்க்கையால் ஓர் ஆசிரியர் ஆகுங்கள். வார்த்தைகளால் கற்பிக்கும் ஆசிரியர் அல்ல. நீங்கள் அவர்களுக்கு வார்த்தைகளால் கூற வேண்டும். அவர்களுக்கு வார்த்தைகளால் கூறிய பின்னரும், அது உங்களின் வாழ்க்கையில் இல்லாவிட்டால், அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். இவ்வாறு சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என அவர்கள் கூறுவார்கள். ஆகவே, உங்களின் வாழ்க்கையினூடாக மற்றவர்களைத் தந்தைக்குச் சொந்தமாக்கும் இலக்கை வைத்திருங்கள். தற்காலத்தில், எவரும் கூறுவதைக் கேட்கும் ஆர்வம் மக்களிடம் இல்லை. அவர்கள் அதைக் காணவே விரும்புகிறார்கள். வானொலி கேட்பதற்காகவே. தொலைக்காட்சி பார்ப்பதற்காக. அவர்கள் எதை விரும்புகிறார்கள்? (தொலைக்காட்சி) அவர்கள் கேட்பதை விடப் பார்ப்பதையே விரும்புவார்கள். எனவே, அவர்கள் உங்களின் வாழ்க்கையிலும் எவ்வாறு எனப் பார்க்க விரும்புகிறார்கள். நீங்கள் எவ்வாறு செயற்படுகிறீர்கள், நீங்கள் அனைத்தையும் எவ்வாறு செய்கிறீர்கள், எவ்வாறு உங்களின் பார்வை ஆன்மீகமாக உள்ளது… இந்த இலக்கைக் கொண்டிருங்கள். உங்களுக்குப் புரிகிறதா? சங்கமயுகத்தில் குமாரிகளின் முக்கியத்துவம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா? சங்கமயுகத்தில், அனைவரிலும் மகத்தானவர்கள் குமாரிகளே. எனவே, உங்களை மகத்தானவர்களாகக் கருதியவண்ணம் சேவையில் ஒத்துழைப்பவர்கள் ஆகியுள்ளீர்களா? அல்லது, நீங்கள் அவ்வாறு ஆகவேண்டியுள்ளதா? உங்களின் இலட்சியம் என்ன? இரட்டைப் பாகத்தை நடிக்கும் இலட்சியம் உங்களுக்கு உள்ளதா? நீங்கள் தொழில் என்ற கூடையையும் சுமப்பீர்களா? அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சமமாக ஒரு குழந்தையாகவும் ஒரு அதிபதியாகவும் ஆகுவதன் மூலம், சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவர் ஆகுவீர்களாக.

அனைவருக்கும் ஒரு குழந்தையாக இருப்பதன் போதை இருப்பதைப் போல், ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருங்கள். அதாவது, தந்தைக்குச் சமமான சம்பூரணமான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிபதியாக இருக்கிறீர்களோ, அதற்கேற்ப உலக சேவையாளரின் சம்;ஸ்காரங்கள் சதா வெளிப்படச் செய்வதே அதிபதியின் சிறப்பியல்பு ஆகும். அதேயளவிற்கு அதிபதியாக இருப்பதன் போதையும் உலகச் சேவையாளராக இருக்கும் போதையும் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் தந்தைக்குச் சமமானவர் என்று அழைக்கப்படுவீர்கள். குழந்தை மற்றும் அதிபதி என்ற இரண்டு ரூபங்களையும் சதா பயிற்சி செய்யுங்கள். அப்போது உங்களால் தந்தைக்குச் சமமான ஸ்திதியையும் சகல பொக்கிஷங்களால் நிறைந்திருப்பதையும் அனுபவம் செய்ய முடியும்.

சுலோகம்:
எல்லையற்ற ஞானப் பொக்கிஷங்களுக்கான உரிமையைக் கோருங்கள். தங்கியிருத்தல் முடிவிற்கு வந்துவிடும்.


அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச யோகாதினம். சகோதர,சகோதரிகள் அனைவரும் ஒன்றாகக் கூடி மாலை 6.30 இலிருந்து 7.30வரை பாபாவுடன் ஒன்றிணைந்த விதைசொரூப நிலையை அனுபவம் செய்வோம். நான் மாஸ்ரர் ஞானசூரியன், சகல சக்திகளும் நிறைந்தவன். சகல சக்திகளின் கதிர்களும் என்னிடமிருந்து வெளிப்பட்டு எங்கும் பரவுகின்றன.