07.03.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    14.11.87     Om Shanti     Madhuban


பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவாத்மா ஆகுவதற்கான வழிமுறை, தூய்மை சக்தியைக் கிரகிப்பதேயாகும்.


இன்று, ஆன்மீகத் தீச்சுடர் தனது ஆன்மீக விட்டில்பூச்சிகளைப் பார்க்கிறார். ஒவ்வோர் ஆன்மீக விட்டில்பூச்சியும் தனது ஊக்கம், உற்சாகம் என்ற இறக்கைகளினால் இந்த ஆன்மீக ஒன்றுகூடலுக்குப் பறந்து வந்துள்ளார். இந்த ஆன்மீக, சந்தோஷமான ஒன்றுகூடல், ஒரு தனித்துவமான, ஆன்மீக ஒன்றுகூடலாகும். இதை ஆன்மீகத் தந்தையும் ஆன்மீகக் குழந்தைகளும் மட்டுமே அறிவார்கள். இந்த ஆன்மீகக் கவர்ச்சியின் முன்னால், மாயையின் பல வகையான கவர்ச்சிகள் அனைத்தும் பெறுமதியற்றதாகவே இருக்கும். எந்தவிதமான சாரமும் இல்லை என்றே அவை அனுபவம் செய்யப்படும். இந்த ஆன்மீகக் கவர்ச்சி எப்போதும் - தற்போதும், உங்களின் எதிர்காலப் பல பிறவிகளிலும் - உங்களை மலர்ச்சிநிறைந்தவர்கள் ஆக்குகிறது. இந்தக் கவர்ச்சி, உங்களைப் பல வகையான துன்பம் மற்றும் அமைதியின்மையின் அலைகளில் இருந்து அப்பால் விலகச் செய்கிறது. இதனாலேயே, ஆன்மீக விட்டில் பூச்சிகளான நீங்கள் அனைவரும் இந்த ஒன்றுகூடலுக்கு வந்துள்ளீர்கள்.

பாப்தாதா விட்டில் பூச்சிகள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். ஒவ்வொருவரின் நெற்றியிலும், தூய அன்பின் அடையாளங்களும், தூய அன்பான உறவுமுறைகளும், தூய வாழ்க்கையின் தூய பார்வையும் மனோபாவமும் பிரகாசிக்கின்றன. இந்தத் தூய விடயங்களின் அடையாளமான, ஒளிக்கிரீடம் ஒவ்வொருவரிலும் பிரகாசிக்கிறது. சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பே, இந்தத் தூய்மையின் அடையாளமான ஒளிக்கிரீடமாகும். இதை ஒவ்வொரு பிராமணரும் தந்தையிடமிருந்து பெறுகிறார். இந்தக் கிரீடமே, மகாத்மாக்களின், பாக்கியசாலி இறை ஆத்மாக்களின், அதிமேலான ஆத்மாக்களின் அடையாளமாகும். எனவே, நீங்கள் அனைவரும் இத்தகைய கிரீடத்தை அணிந்தவர்களாக ஆகிவிட்டீர்களா? தாயும் தந்தையுமான பாப்தாதா, அவர்கள் பிறப்பு எடுத்த கணத்தில் இருந்து, ஒவ்வொரு குழந்தைக்கும், ‘நீங்கள் தூய்மை ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். தூய்மை இல்லாவிட்டால், பிராமண வாழ்க்கையே இல்லை. ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, தூய்மையாலேயே தடைகள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், தூய்மை என்ற அத்திவாரம், 21 பிறவிகளுக்கான அத்திவாரமாகும். தூய்மையை அடைதலே, பிராமண ஆத்மாக்களான நீங்கள் இலகுவாகப் பறக்கும் ஸ்திதியில் செல்வதற்கான அடிப்படையாகும்.

கர்ம தத்துவம் ஆழமானது எனக் கூறப்படுவதைப் போல், தூய்மையின் வரைவிலக்கணமும் மிகவும் ஆழமானது. தூய்மை என்பது ஒரு பாதுகாப்புக் குடை. இதன் மூலம் உங்களை மாயையின் தடைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். தூய்மை என்பது அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாய் எனப்படுகிறது. எந்த வகையான தூய்மையின்மையும் நீங்கள் துன்பத்தையும் அமைதியின்மையையும் அனுபவம் பெறச் செய்கிறது. எனவே, நாள் முழுவதும், சோதித்துப் பாருங்கள்: எந்தவொரு வேளையிலும் நான் துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் ஏதாவது அலையை அனுபவம் செய்கிறேனா? அதன் விதை தூய்மையின்மையே. அது பிரதான விகாரங்களால் அல்லது விகாரங்களின் சூட்சுமமான ரூபத்தால் ஏற்பட்டிருக்கலாம். ஒரு தூய வாழ்க்கை என்றால், துன்பம் அல்லது அமைதியின்மையின் பெயரோ அல்லது சுவடோ இல்லாதிருத்தல் என்று அர்த்தம். ஏதாவதொரு காரணத்தால், சிறிதளவு துன்பத்தின் அனுபவம் ஏற்பட்டாலும், அது சம்பூரணமான தூய்மை இன்மையாலேயே ஏற்படுகிறது. ஒரு தூய வாழ்க்கை என்றால், பாப்தாதாவிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களுக்கான வாழ்க்கை என்று அர்த்தம். ‘இந்தச் சூழ்நிலையால் அல்லது இந்த நபரின் நடத்தையால் எனக்குத் துன்பம் ஏற்பட்டது’ என்ற எண்ணங்களோ அல்லது வார்த்தைகளோ பிராமணர்களின் வாயில் இருந்து வரவே கூடாது. சிலவேளைகளில், சாதாரணமான முறையில், நீங்கள் இத்தகைய வார்த்தைகளைக் கூறுகிறீர்கள். அல்லது அவற்றை அனுபவம் செய்கிறீர்கள். அவை ஒரு தூய பிராமண வாழ்க்கையின் வார்த்தைகள் இல்லை. ஒரு பிராமண வாழ்க்கை என்றால், ஒவ்வொரு வினாடியிலும் சந்தோஷமான வாழ்க்கை என்று அர்த்தம். துன்பத்தின் காட்சி ஒன்று ஏற்பட்டாலும், உங்களிடம் தூய்மை சக்தி இருக்கும்போது, எந்தவொரு துன்பமான காட்சியிலும் நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்யமாட்டீர்கள். ஏனென்றால், தந்தை துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவராக இருப்பதைப் போல், நீங்களும் துன்பச் சூழலிலும் அமைதி மற்றும் சந்தோஷத்திற்கான ஆசீர்வாதங்களை அருள்பவர்கள் ஆகி, அந்தத் துயரப்படுகின்ற ஆத்மாக்களுக்கு ஒரு துளி அமைதி மற்றும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் மாஸ்ரர் சந்தோஷத்தை அருள்பவராகி, அந்தத் துன்பத்தை ஆன்மீகச் சந்தோஷமான சூழலாக மாற்ற வேண்டும். இதுவே துன்பத்தை நீக்குபவராகவும் சந்தோஷத்தை அருள்பவராகவும் இருத்தல் எனப்படுகிறது.

விஞ்ஞானத்தால் ஒருவரின் வலியையும் வேதனையையும் குறுகிய நேரத்திற்கு முடிக்கக்கூடியதாக இருக்கும்போது, தூய்மை சக்தியால், அதாவது, மௌன சக்தியால் வலியையும் வேதனையையும் முடிக்க முடியாதா? விஞ்ஞானத்தின் மருந்துகளுக்குத் தற்காலிகமான சக்தி உள்ளது. ஆனால், தூய்மை சக்திக்கும் தூய்மையின் ஆசீர்வாதங்களுக்கும் எவ்வளவு சக்தி உள்ளது? காலத்திற்கேற்ப, ஏதாவதொரு காரணத்தால் இன்று மக்கள் மருந்துகளால் களைப்படையும்போது, அவர்களின் நோய்கள் தீவிரமடையும்போது, இத்தகைய வேளையில், அவர்கள் தூய தேவாத்மாக்களான உங்களிடம் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வருவார்கள்: எங்களை என்றென்றும் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுவியுங்கள். தூய்மையின் பார்வையும் மனோபாவமும் சாதாரணமானதொரு சக்தி இல்லை. குறுகிய காலத்திற்கு இருக்கும் இந்தச் சக்திவாய்ந்த திருஷ்டியும் இந்த மனோபாவமும் நீங்கள் எல்லா வேளைக்கும் எதையாவது பெறச் செய்யும். இந்த வேளையில் பௌதீகமான மருத்துவர்களும் பௌதீகமான வைத்தியசாலைகளும் அதிகரித்து வருகின்றன. அவ்வாறிருந்தும், மருத்துவர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. வைத்தியசாலைகளிலும் இடம் இருப்பதில்லை. நோயாளிகளின் வரிசையும் எப்போதும் காணப்படும். நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, அவர்கள் விரும்பினாலும் மருந்துக்காக வைத்தியசாலைகளுக்கோ அல்லது மருத்துவர்களிடமோ போக முடியாத நிலை ஏற்படும். பெரும்பாலானோர் மனந்தளர்ந்து விடுவார்கள். அப்போது, அவர்கள் என்ன செய்வார்கள்? மருந்துகளில் நம்பிக்கை இழந்த நிலையில் அவர்கள் எங்கே செல்வார்கள்? உங்களுக்கு முன்னால் வரிசைகள் காணப்படும். இப்போது அவர்கள் உங்களினதும் தந்தையினதும் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, ‘ஓ கருணை நிறைந்தவரே, கருணை காட்டுங்கள்!’ என கருணையை அல்லது ஆசிகளைக் கேட்பதைப் போல், உயிர்வாழும், தூய, பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களான உங்களின் முன்னால் வந்து, ‘ஓ தூய தேவதேவியரே, தூய தேவிகளே, எங்களிடம் கருணை காட்டுங்கள்!’ எனக் கேட்பார்கள். தற்காலத்தில், தற்காலிகமான மாயாஜால சக்தி உடையவர்களை நோக்கிப் பல மக்கள் குணமடைவதற்காக அல்லது சந்தோஷம் அல்லது அமைதியின் கருணைக்காக அiலைந்து திரிகிறார்கள். அவரின் திருஷ்டி தொலைவில் இருந்தாவது தம்மீது படவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் கடவுளால் காட்டப்பட்டுள்ள வழிமுறையின் மூலம் வெற்றி சொரூபங்கள் ஆகவேண்டும். அவர்களின் தற்காலிகமான ஆதாரங்கள் இல்லாமல் போனவுடன் அவர்கள் எங்கேதான் செல்வார்கள்?

தற்காலிகமான சக்திகளைக் கொண்டிருப்பவர்கள், தற்காலிகமான தூய்மை அல்லது ஏதாவதொரு வழிமுறையால் தொடர்ந்து தற்காலிகமான வெற்றியைப் பெறுவார்கள். அது எல்லா வேளைக்கும் தொடராது. அதுவும் தற்போதைய சத்தியயுக ஆத்மாக்களின் தூய்மையின் பெறுபேற்றினால் கிடைத்த தற்காலிகமான வெற்றியேயாகும். அதாவது, அவர்கள் இறுதியில் கீழிறங்கி வந்த ஆத்மாக்கள். தூய்மையான முக்தி தாமத்தில் இருந்து வந்திருப்பதனால், நாடகத்தின் நியதிக்கேற்ப, அவர்களுடைய சதோபிரதான் நிலையில் அவர்கள் இருப்பார்கள். எவ்வாறாயினும், அவர்கள் குறுகிய காலத்தில் தமது சதோ, ரஜோ, தமோ என்ற மூன்று நிலைகளுக்கூடாகவும் செல்வார்கள். இதனாலேயே, அவர்கள் நிரந்தர வெற்றியைப் பெறுவதில்லை. அவர்களின் வெற்றி, கடவுளால் காட்டப்பட்ட வழிமுறையால் பெறப்படுவதல்ல. இதனாலேயே, அவர்களின் சுயநலமான நோக்கங்களும் அகங்காரமும் ஏதோவொரு இடத்தில் அவர்களின் வெற்றியை முடித்துவிடுகிறது. எவ்வாறாயினும், தூய ஆத்மாக்களான நீங்கள், சதா வெற்றி சொரூபம் ஆவீர்கள். நீங்கள் எல்லா வேளைக்கும் ஆத்மாக்கள் ஏதாவது பேறுகளைப் பெறச் செய்பவர்கள். நீங்கள் ஓர் அதிசயத்தை ஏற்படுத்திக் காட்டுபவர்கள் மட்டும் அல்ல. ஆனால், மற்றவர்களைப் பிரகாசிக்கும் ஒளி ரூபங்களாகவும் ஆக்குபவர்கள். நீங்கள் மற்றவர்களை அழியாத பாக்கியத்தின் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக மாற்றுபவர்கள். இதனாலேயே, அந்த ஆதாரங்கள் எல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டுமே. இறுதியில், அவர்கள் தூய ஆத்மாக்களான உங்களிடம் ஒரு துளியைப் பெறுவதற்காக வருவார்கள். எனவே, நீங்கள் அமைதியினதும் சந்தோஷத்தினதும் அன்னைகளான தூய ஆத்மாக்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் இத்தகைய ஆசீர்வாதங்களின் களஞ்சியத்தைச் சேமித்துவிட்டீர்களா? அல்லது, இப்போதும் நீங்கள் உங்களுக்காக ஆசீர்வாதங்களைக் கேட்கிறீர்களா?

இப்போதும், சில குழந்தைகள் அவ்வப்போது தந்தையிடம் தொடர்ந்து கேட்கிறார்கள்: இதற்காக எனக்கு ஆசீர்வாதங்களைக் கொடுங்கள்! எனக்கு நல்லாசிகளைக் கொடுங்கள்! எதையாவது கேட்கின்ற ஒருவரால் எப்படி ஓர் அருள்பவர் ஆகமுடியும்? ஆகவே, இப்பொழுதில் இருந்தே தூய்மையின் சக்தியின் மகத்துவத்தை அறிந்து, ஒரு தூய்மையான, அதாவது, ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த தேவாத்மா ஆகுங்கள். நீங்கள் இறுதியில்தான் அவ்வாறு ஆகுவீர்கள் என நினைக்காதீர்கள். நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்ட இந்தச் சக்தியானது, இறுதியில் பயன்படும். எனவே, தூய்மையின் ஆழமான தத்துவம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சதா அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாயாக விளங்கும் ஓர் ஆத்மா. அதுவே தூய்மையின் ஆழமாகும். இது சாதாரணமானதொரு விடயம் இல்லை. நீங்கள் தூய்மை ஆகியுள்ளீர்கள். நீங்கள் பிரம்மச்சாரியாக இருக்கிறீர்கள். ஆனால், தூய்மையே தாயாகும். ஆகவே, உங்களின் எண்ணங்களிலும் மனோபாவத்திலும் அதிர்வலைகளிலும் தொடர்புகளிலும் அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாயாக ஆக வேண்டும். அதுவே ஒரு தூய ஆத்மாவாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, நீங்கள் எந்தளவிற்கு இவ்வாறு ஆகியுள்ளீர்கள் என உங்களையே சோதித்துப் பாருங்கள். அச்சா.

இன்று, பலர் வந்துள்ளனர். தண்ணீர் ஓர் அணைக்கட்டையும் உடைப்பதைப் போல், நீங்களும் சட்டங்கள் என்ற அணையை உடைத்து இங்கே வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், சட்டங்களில் நன்மை உள்ளது. இங்கு வரையறைகளுக்கேற்ப வந்திருப்பவர்கள், மகத்தான நன்மையைப் பெறுவார்கள். ஆனால், கூட்டத்துடன் வந்தவர்கள், நேரத்திற்கேற்ப அந்தளவை மட்டுமே பெறுவார்கள். எப்படியிருந்தாலும், பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள பாப்தாதா, எப்படி பந்தனத்திற்குள் வருகிறார் என்று பாருங்கள். அவருக்கு அன்பின் பந்தனமே உள்ளது. அன்புடன் கூடவே, நேரத்தின் பந்தனமும் உள்ளது. சரீரத்தின் பந்தனமும் உள்ளது. எவ்வாறாயினும், இது ஓர் அற்புதமான பந்தனம். இதனாலேயே, அவர் பந்தனத்தில் இருந்தாலும், அவர் சுதந்திரமாக இருக்கிறார். ‘வாருங்கள், நீங்கள் உங்களின் வீட்டுக்கு வந்துள்ளீர்கள்’ என பாப்தாதா கூறுகிறார். அச்சா.

எங்கும் உள்ள பரம தூய்மையான ஆத்மாக்களுக்கும், சதா அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாயாக விளங்கும் தூய ஆத்மாக்களுக்கும், சதா தூய்மையால், பல ஆத்மாக்களின் வலியையும் வேதனையையும் நீக்கும் தேவாத்மாக்களுக்கும், கடவுளால் காட்டப்பட்டுள்ள வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி சொரூபங்கள் ஆகும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

இந்தோர் விடுதியைச் சேர்ந்த குமாரிகளிடம்:
நீங்கள் அனைவரும் தூய, மகாத்மாக்கள், இல்லையா? இன்று தங்களை மகாத்மாக்கள் என்று அழைக்கும் ஆத்மாக்களை விட நீங்கள் பல மடங்கு அதிமேன்மையானவர்கள். தூய குமாரிகள் எப்போதும் பூஜிக்கப்படுகிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் எப்போதும் தூய்மையாகவும் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மாக்களாகவும் இருக்கிறீர்களா? எந்த வகையான தூய்மையின்மையும் இல்லையல்லவா? ஆத்மாக்களான நீங்கள் ஒரேயொரு வழிகாட்டலைப் பின்பற்றும் அன்பான, ஒத்துழைக்கும் ஆத்மாக்களாக சதா ஒன்றாக வாழ்கிறீர்களா? உங்களின் சம்ஸ்காரங்களை எவ்வாறு ஒத்திசைப்பது என உங்களுக்குத் தெரியுமல்லவா? ஏனென்றால், சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பது மகத்துவமாகும். சம்ஸ்காரங்களின் முரண்பாடு எதுவும் இருக்கக்கூடாது. ஆனால், எப்போதும் சம்ஸ்காரங்களை ஒத்திசைக்கும் நடனத்தைத் தொடர்ந்து ஆடுங்கள். நீங்கள் இளம் வயதிலேயே மகத்தானவர்கள் ஆகியிருப்பதனால், மிக நல்ல பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்கள், இ;ல்லையா? உங்களில் எவரும் உங்களின் மனதில் அழுவதில்லை, அல்லவா? நீங்கள் பற்றில் இருந்து விடுபட்டிருக்கிறீர்களா? நீங்கள் உங்களின் லௌகீகக் குடும்பத்தை நினைக்கிறீர்களா? இரண்டு படிப்பிலும் நீங்கள் கெட்டிக்காரர்களா? எப்போதும் இரண்டு படிப்புகளிலும் முதலாம் இலக்கத்தவராக இருங்கள். தந்தை எவ்வாறு ஒரேயொருவரோ, அதேபோல் குழந்தைகளான நீங்களும் முதலாம் இலக்கத்தவர்கள். நீங்களே அனைவரிலும் முதலாம் இலக்கத்தவர்கள் ஆவீர்கள். தந்தை எப்போதும் இத்தகைய குழந்தைகளை நேசிக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
நீங்கள் எப்போதும் உங்களை மேன்மையானவர்களாகவும் பாக்கியசாலிகளாகவும் கருதுகிறீர்களா? வீட்டில் இருந்தவண்ணம், நீங்கள் பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து மேன்மையான பாக்கியத்தைப் பெற்றீர்கள். வீட்டில் இருந்தவாறே பாக்கியத்தைப் பெறுதல் என்பது மகத்தான சந்தோஷத்திற்குரிய விடயமாகும். அநாதியான தந்தையே நீங்கள் அழியாத பேறுகளைப் பெறச் செய்கிறார். எனவே, அழியாதது என்றால் சிலவேளைகளுக்கு மட்டுமன்றி, எல்லா வேளைக்கும் உரியதாகும். ஆகவே, நீங்கள் உங்களின் பாக்கியத்தைப் பார்த்து சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு கணமும், உங்களின் பாக்கியத்தையும் பாக்கியத்தை அருள்பவரையும் நினைவு செய்யுங்கள். எப்போதும், ‘ஆஹா, எனது மேன்மையான பாக்கியமே!’ என்ற பாடலைத் தொடர்ந்து பாடுங்கள். இது மனதின் பாடலாகும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் இதைப் பாடுகிறீர்களோ, அந்தளவிற்கு சதா பறக்கும் ஸ்திதியைத் தொடர்ந்து அனுபவம் செய்வீர்கள். முழுக் கல்பத்திலும் இத்தகைய பாக்கியத்தை நீங்கள் அனுபவிப்பது, இந்த நேரத்தில் மட்டுமே. இதனாலேயே, ‘இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை!’ என்ற சுலோகம் உள்ளது. நீங்கள் எத்தகைய மேன்மையான செயலைச் செய்ய வேண்டியிருந்தாலும், அதை இப்போதே செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு கணமும், ‘இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை!’ என்பதை நினைவு செய்யுங்கள். இதை எப்போதும் உணர்ந்திருப்பவர்கள், ஒருபோதும் தமது நேரம், எண்ணங்கள் அல்லது செயல்களை வீணாகுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தொடர்ந்து சேமிப்பார்கள். பாவச் செயல்களைச் செய்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், வீணான செயல்களாலும் உங்களை ஏமாற்ற முடியும். ஒவ்வொரு வினாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள், இல்லையா? எப்போதும் உங்களின் சேமிப்புக் கணக்கில் தொடர்ந்து சேமியுங்கள். உங்களின் கணக்கில் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் நீங்கள் மேன்மையான அனைத்தையும் சேமித்தால், எதையும் வீணாக்காவிட்டால், உங்களால் உங்களின் கணக்கை 21 பிறவிகளுக்கு மேன்மையானது ஆக்க முடியும். எனவே, உங்களுக்குத் தேவையான அளவிற்கு நீங்கள் சேமிக்கிறீர்களா? ஒரு விநாடியேனும் அல்லது ஓர் எண்ணமேனும் வீணாகக்கூடாது என்ற விடயத்தை மேலும் கீழ்க்கோடிடுங்கள். வீணாக்குதல் முடிந்துவிட்டால், நீங்கள் எப்போதும் சக்திசாலியாக இருப்பீர்கள். அச்சா.

ஆந்திரப்பிரதேசத்தில் அதிகளவு ஏழ்மை இருக்கிறதல்லவா? ஆனால், அதே அளவிற்கு நீங்கள் செல்வந்தர்களாக இருக்கிறீர்கள். எங்கும் ஏழ்மை அதிகரிக்கிறது. ஆனால் உங்களின் செல்வமோ அதிகரிக்கிறது. ஏனென்றால், ஞானச் செல்வத்தைப் பெறுவதன் மூலம், இயல்பாகவே குறைந்தபட்சம் பருப்பும் ரொட்டியும் உண்ணும் அளவிற்குப் போதுமான பணத்தை நீங்கள் பெறுவீர்கள். யாராவது பிராமணர்கள் பசியுடன் இருக்கிறார்களா? எனவே, பௌதீகமான ஏழ்மையும் முடிந்துவிடுகிறது. ஏனென்றால் நீங்கள் விவேகிகள் ஆகியுள்ளீர்கள். வேலை செய்வதன் மூலம், உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் உணவூட்டும் அளவிற்குப் போதுமானதைச் சம்பாதிக்கும் புரிந்துணர்வு உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு இரட்டைச் செல்வம் கிடைக்கிறது. இது சரீரத்திற்கும் நல்லது. மனதிற்கும் நல்லது. நீங்கள் சௌகரியமாக பருப்பையும் ரொட்டியையும் பெறுகிறீர்கள், இல்லையா? பிரம்மாகுமார்களாகவும் பிரம்மாகுமாரிகளாகவும் ஆகுவதன் மூலம், நீங்கள் இராஜரீகம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் செல்வந்தர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பல பிறவிகளுக்குச் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் முன்னர் செயல்பட்ட விதம், வாழ்ந்த விதம், உடுத்த விதம் என்பவற்றுடன் ஒப்பிடும்போது, நீங்கள் இப்போது மிகவும் இராஜரீகம் ஆகியுள்ளீர்கள்! இப்போது, நீங்கள் எப்போதும் சுத்தமாக இருக்கிறீர்கள். முன்னர், நீங்கள் அழுக்கான ஆடைகளை அணிந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது நீங்கள் உள்ளும் புறமும் சுத்தமாக ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்கள் பிரம்மாகுமார்கள் ஆகியதன் நன்மையைப் பெற்றுள்ளீர்கள், இல்லையா? அனைத்தும் மாறுகிறது. அனைத்தும் மாற்றப்படுகிறது. உங்களின் முகத்தையும் உங்களின் விவேகத்தையும் முன்பும் இப்போதும் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் அந்த வேறுபாடுகளைக் காண்பீர்கள். இப்போது, உங்களிடம் ஆன்மீகப் பிரகாசம் உள்ளது. இதனாலேயே, உங்களின் முகம் மாறியுள்ளது. எனவே, எப்போதும் இத்தகைய சந்தோஷத்துடன் தொடர்ந்து நடனமாடுங்கள். அச்சா.

இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளுடன் பேசுகிறார்:
நீங்கள் இரட்டை வெளிநாட்டவர்களா? உண்மையில், பிராமண ஆத்மாக்கள் எல்லோரும் இந்த பாரத தேசத்தைச் சேர்ந்தவர்களே. நீங்கள் பல பிறவிகளாக பாரதவாசிகளாகவே இருந்தீர்கள். சேவைக்காக மட்டுமே நீங்கள் பல இடங்களுக்குச் சென்றீர்கள். இதனாலேயே, நீங்கள் பாரதத்திற்கு, அதாவது, மதுவனத்திற்கும் பிராமணக் குடும்பத்திடமும் வரும்போதெல்லாம், சொந்தமாக இருக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. பொதுவாக, வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டு ஆத்மாக்கள் எத்தகையதோர் நெருக்கமான தொடர்பை அல்லது உறவுமுறையைக் கொண்டிருந்தாலும், ஆத்மாக்களான நீங்கள் இங்கே அனுபவிக்கும் அந்தச் சொந்தமென்ற உணர்வு அவர்களுக்கு இருக்காது. எந்தளவிற்கு ஓர் ஆத்மா நெருக்கமாக இருக்கிறாரோ, அந்தளவிற்கு சொந்தமென்ற உணர்வும் அவரிடம் அதிகமாக இருக்கும். நீங்கள் இங்கிருந்தவர்களா அல்லது நீங்கள் இங்கே இருந்திருப்பது சாத்தியமா என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பௌதீகமான பொருளையும் உங்களுடையது போன்றே நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்குச் சொந்தமான எதையும் நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள். எனவே, இவையே அந்த அடையாளங்கள். வெகு தொலைவில் வசித்தாலும், நீங்கள் உங்களின் இதயத்தால் நெருக்கமாக இருப்பதை பாப்தாதா பார்க்கிறார். உங்களை இந்த மேன்மையான பாக்கியத்தைக் கொண்டவர்களாகவே முழுக்குடும்பமும் பார்க்கிறது. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் பயந்து, யுத்தத்தில் பின்வாங்குவதற்குப் பதில், தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்வதன் மூலம், சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

இராணுவத்திலுள்ள போர்வீரர்களிடம் ஒரு சுலோகம் இருக்கும்: தோல்வி அடைவது அல்லது பின்வாங்குவது என்பது பலவீனமானவர்களின் செயலே. ஒரு போர்வீரர் என்றால், ‘கொல் அல்லது செத்துமடி’ என்று அர்த்தம். ஆன்மீகப் போர்வீரர்களான நீங்கள் பயப்படுபவர்களோ அல்லது பின்வாங்குபவர்களோ கிடையாது. நீங்கள் சதா முன்னேறி, வெற்றியாளர்கள் ஆகுபவர்கள். ‘எவ்வளவு நாட்களுக்குத்தான் நாம் போராடிக் கொண்டிருப்பது?’ என ஒருபோதும் நினைக்காதீர்கள். இது உங்களின் வாழ்க்கை முழுவதற்கும் உரியது. ஆனால், 5000 வருடங்களுக்கான வெகுமதியுடன் ஒப்பிடும்போது, இது ஒரு விநாடிக்குரிய விடயமாகும். எல்லையற்ற புத்தியைக் கொண்டிருங்கள். அதை எல்லையற்ற முறையில் பாருங்கள். தந்தையின் நினைவினாலும் அவரின் சகவாசத்தாலும் வெற்றியாளர் ஆகுங்கள்.

சுலோகம்:
நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதற்கும் நம்பிக்கையினதும் அடிப்படையில் சதா வெற்றியாளர் ஆகுங்கள்.