31.01.21 Avyakt Bapdada Tamil Lanka Murli 25.10.87 Om Shanti Madhuban
நான்கு விடயங்களில் பற்றற்றவர் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தனது மேன்மையான குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். ஒரு தாமரை ஆசனம் என்பது பிராமண ஆத்மாக்களின் மேன்மையான ஸ்திதியின் அடையாளம் ஆகும். ஓர் ஆசனம் என்றால் ஸ்திரமாக இருத்தல் என்று அர்த்தம். பிராமண ஆத்மாக்கள் தாமரை போன்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறார்கள். இதனாலேயே, அவர்கள் தாமரை ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிராமணர்கள் தேவர்கள் ஆகுவதைப்போல், இந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்களால் பின்னர் ஒரு சிம்மாசனத்தில் அமர முடியும். நீங்கள் ஒரு தாமரை ஆசனத்தில் நீண்ட காலத்திற்கு அமர்ந்திருக்கலாம். அல்லது குறுகிய காலத்திற்கு அமர்ந்திருக்கலாம். அதற்கேற்பவே, நீங்கள் நீண்ட காலத்திற்கு அல்லது குறுகிய காலத்திற்கு ஓர் இராச்சியத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆகுவீர்கள். ஒரு தாமரை ஆசனம் என்பது தந்தை பிரம்மாவைப் போல், அதிகபட்சம் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருக்கும் ஸ்திதியின் அடையாளமாகும். பிராமணக் குழந்தைகளான நீங்கள் தந்தையைப் பின்பற்றுகிறீர்கள். இதனாலேயே, தந்தையினுடையதை ஒத்த ஒரு தாமரை ஆசனம் உங்களிடமும் உள்ளது. அதிகபட்சம் பற்றற்றவராக இருப்பதன் அடையாளம், நீங்கள் அதிகபட்சம் தந்தையாலும் முழுக் குடும்பத்தாலும் நேசிக்கப்படுவீர்கள். பற்றற்றவராக இருத்தல் என்றால், அனைத்தில் இருந்தும் பற்றற்றவராக இருத்தல் என்று அர்த்தம்.
1. ஒருவரின் சரீரத்தின் விழிப்புணர்வில் இருந்து பற்றற்றவராக இருத்தல். உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு நடக்கும்போதும் அசையும்போதும் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும், தமது சரீரங்களின் விழிப்புணர்வானது இயல்பாகவும் எப்போதும் இருக்கும். தாம் சரீரங்கள் என நினைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர்கள் அதைப் பற்றி நினைக்க வேண்டும் என நினைக்காமலேயே, இலகுவாக அந்த விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அதேபோல், தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பிராமண ஆத்மாக்களும், எவ்வாறு ஞானம் இல்லாத ஆத்மாக்கள் ஆத்ம உணர்வில் இருந்து விலகி இருக்கிறார்களோ அதைப்போல், தமது சரீரங்களின் எந்தவிதமான விழிப்புணர்வில் இருந்தும் இலகுவாகப் பற்றற்றவராக இருக்க வேண்டும். நீங்கள் ஆத்ம உணர்வுடன் இருக்கிறீர்கள். உங்களின் சரீரத்தின் எந்தவொரு விழிப்புணர்வும் தன்னை நோக்கி உங்களை இழுக்கக்கூடாது. நடக்கும்போதும் அசையும்போதும் பிரம்மாபாபாவை நீங்கள் கண்டீர்கள். அவர் இயல்பாகவே தனது விழிப்புணர்வில் தேவதை மற்றும் தேவ ரூபங்களை வைத்திருந்தார். இயல்பாகவே சதா இத்தகைய ஆத்ம உணர்வு ஸ்திதியை வைத்திருத்தல், ஒருவரின் சரீரத்தின் விழிப்புணர்வில் இருந்து பற்றற்றிருத்தல் எனப்படுகிறது. உங்களின் சரீரத்தின் எந்தவொரு விழிப்புணர்வில் இருந்தும் பற்றற்று இருந்தால் மட்டுமே, உங்களால் கடவுளால் நேசிக்கப்படுபவர் ஆக முடியும்.
2. உங்களின் சரீர உறவுகள் அனைத்தில் இருந்தும் உங்களின் திருஷ்டி, மனோபாவம், செயல்களால் பற்றற்றவராக இருத்தல்.
சரீர உறவுகளைப் பார்க்கும்போது, இயல்பாகவே உங்களின் விழிப்புணர்வில் ஆத்ம உணர்வு உறவுகள் இருக்க வேண்டும். இதனாலேயே, பய்யா டூஜ் (ஒரு சகோதரனை அவரின் சகோதரியின் இடத்திற்கு அழைக்கும் ஒரு வைபவம்) என்பது தீபாவளியின் பின்னர் வருகிறது. நீங்கள் ஒரு பிரகாசிக்கும் நட்சத்திரமாக அல்லது ஒரு பிரகாசிக்கும், அநாதியான தீபம் ஆகும்போது, உங்களிடம் சகோதரத்துவத்தின் உறவுமுறையே காணப்படும். ஆத்மாக்களாக, உங்களிடம் சகோதரத்துவ உறவுமுறை காணப்படும். பிரம்மாவின் குலத்தைச் சேர்ந்த பௌதீகமான பிராமணர்களாக, உங்களிடம் இயல்பாகவே தூய, மேன்மையான சகோதரன் மற்றும் சகோதரி என்ற உறவுமுறை உங்களின் விழிப்புணர்வில் காணப்படும். எனவே, பற்றற்று இருத்தல் என்றால், உங்களின் சரீரம் மற்றும் சரீர உறவுகளில் இருந்து பற்றற்று இருத்தல் என்று அர்த்தம்.
3. உங்களின் சரீரத்தின் அழியக்கூடிய உடமைகளில் இருந்து பற்றற்று இருத்தல். ஒரு பௌதீகமான உடமை உங்களின் எந்தவொரு பௌதீகப் புலன்களுக்கும் விஷமத்தனத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதாவது, அதற்கான கவர்ச்சி ஏதாவது இருந்தால், அங்கு பற்றற்ற தன்மை இல்லை. உறவுகளில் இருந்து பற்றற்றவராக இருப்பது இலகுவானது. ஆனால், நீங்கள் பற்றற்று இருக்க வேண்டிய பௌதீக விடயங்களில் இன்னமும் இராஜரீகமான முறையில் கவர்ச்சி காணப்படுகிறது. கவர்ச்சியின் தெளிவான ரூபம் ஆசையே என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஓர் ஆசையின் சூட்சுமமான, ஆழமான ரூபம் எதையாவது விரும்புவதாகும். ‘எனக்கு அதில் ஆசை கிடையாது, ஆனால் நான் அதை விரும்புகிறேன்’ என நீங்கள் கூறுகிறீர்கள். இந்தச் சூட்சும ரூபத்திலான விருப்பமும் ஓர் ஆசையின் வடிவத்தை எடுக்க முடியும். எனவே, இதை மிக நன்றாகச் சோதித்துப் பாருங்கள்: இந்த பௌதீகமான விடயம், அதாவது, தற்காலிக சந்தோஷத்திற்கான இந்த விடயம் என்னை இழுக்கிறதா? உங்களுக்கு வேண்டிய நேரத்தில் ஒரு வசதி கிடைக்காவிட்டால், உங்களின் ஆன்மீக முயற்சி இலகுவாக உள்ளதா? அதாவது, இலகு யோகத்திற்கான உங்களின் ஸ்திதி தளம்பல் அடையவில்லை, அல்லவா? நீங்கள் எந்தவொரு வசதியின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை அல்லது உங்களின் பழக்கவழக்கங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்படவில்லை, அல்லவா? அந்த பௌதீக வசதிகள் அனைத்தும் சடப்பொருளின் வசதிகளே. நீங்கள் சடப்பொருளை வென்றவர்கள். அதாவது, நீங்கள் சடப்பொருளின் ஆதாரத்திற்கு அப்பாற்பட்ட, தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பிராமணர்கள். மாiயை வென்றவர்கள் ஆகுவதுடன், நீங்கள் சடப்பொருளை வென்றவர்களாகவும் ஆகுகிறீர்கள். நீங்கள் மாயையை வென்றவர்கள் ஆகியவுடன், மாயை உங்களைப் பல்வேறு வழிமுறைகளில் மீண்டும் மீண்டும் பரீட்சிக்கிறாள். தனது சகபாடிகள் மாயையை வென்றவர்கள் ஆகுகிறார்கள் என்பதை அவள் பார்ப்பதனால், பல பரீட்சைத்தாள்களை அவள் கொடுக்கிறாள். சடப்பொருளிற்கான பரீட்சைத்தாள், உங்கள் அனைவரையும் வசதிகளினூடாகக் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது. உதாரணத்திற்குத் தண்ணீர்த்தட்டுப்பாடு. அது பெரியதொரு பரீட்சைத்தாள் கிடையாது. என்றாலும், வசதிகள் நீரினாலும் நெருப்பினாலும் உருவாக்கப்படுவதைப் போல், சடப்பொருளின் ஒவ்வொரு கூறினாலும் செய்யப்படும் வசதிகளே, மனித ஆத்மாக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் தற்காலிகமான சந்தோஷத்திற்குக் காரணம் ஆகுகின்றன. எனவே, இந்தப் பஞ்சபூதங்கள் அனைத்தும் உங்களைப் பரீட்சிக்க வரும். அப்போது, தண்ணீர்த்தட்டுப்பாடு மட்டுமே இருக்கும். ஆனால், நீரால் செய்யப்பட்ட வசதிகள் கிடைக்காதபோது, அது உண்மையான பரீட்சைத்தாளாக இருக்கும். பஞ்சபூதங்களால் வருகின்ற இந்தப் பரீட்சைத்தாள்கள் நிச்சயமாக அவற்றுக்கே உரிய நேரத்தில் வரும். இதனாலேயே, உங்களின் சரீரத்தின் எந்தவொரு உடமைகளின் கவர்ச்சியில் இருந்தும் நீங்கள் விடுபட வேண்டும். அத்துடன் உங்களின் சரீரத்தின் எந்தவொரு ஆதாரத்தில் இருந்தும் விடுபட வேண்டும். தற்சமயம், சகல வசதிகளும் இலகுவாக உங்களுக்குக் கிடைக்கின்றன. எதிலும் குறைவில்லை. எவ்வாறாயினும், சகல வசதிகளும் கிடைக்கும்போது, சகல வசதிகளுடன் பரிசோதனை செய்யும்போது, உங்களின் யோகா ஸ்திதி தளம்பல் அடையக்கூடாது. ஒரு யோகியாகப் பரிசோதனை செய்தல் என்றால் பற்றற்றவர் ஆகுதல் என்று அர்த்தம். உங்களிடம் எதுவும் இல்லாவிட்டால், அதைப் பற்றற்றவர் என்று அழைக்க முடியாது. எவ்வாறாயினும், அனைத்தும் இருந்தாலும், அதைப் பெயரளவில் பயன்படுத்துங்கள். அவற்றால் கவரப்படாமல் அவற்றுடன் பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு வேண்டும் என்பதனால் அல்லது நீங்கள் அவற்றை விரும்புவதனால் அவற்றைப் பயன்படாதீர்கள். இந்த முறையில் நிச்சயமாக உங்களைச் சோதியுங்கள். எங்கு ஏதாவது ஆசை உள்ளதோ, அப்போது, நீங்கள் எந்தளவு முயற்சி செய்தாலும், அந்த ஆசை (இச்சா) உங்களை நல்லவர் (அச்சா) ஆக்க அனுமதிக்காது. இல்லாவிட்டால், ஒரு பரீட்சைத்தாளை எடுக்கும் வேளையில், உங்களின் நேரம் முயற்சி செய்வதிலேயே கழியும். நீங்கள் ஆன்மீக முயற்சி (சாதனா) செய்வதில் மூழ்கியிருப்பதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால், வசதிகள் (சாதன்) தம்மை நோக்கி உங்களைக் கவரும். நீங்கள் தொடர்ந்து போராடுவதுடன், வசதிகளுக்கான கவர்ச்சியை முடிப்பதற்கு முயற்சி செய்வீர்கள். எனவே, உங்களின் இந்தக் கயிறுழுத்தல் போட்டியால், பரீட்சைத்தாளுக்கான உங்களின் நேரம் கடந்து செல்லும். அப்போது பெறுபேறு என்னவாக இருக்கும்? நீங்கள் பரிசோதனை செய்யும் வசதிகளால் இலகு யோகியாக இருக்கும் உங்களின் ஸ்திதி தளம்பல் அடையும். பஞ்சபூதங்களால் வரும் பரீட்சைத்தாள்கள், இப்போது துரித வேகத்தில் வரப் போகின்றன. ஆகவே, பௌகீக விடயங்களின் ஆதாரங்கள் - உணவு, பானம், ஆடைகள், மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பாடும், வாழும், தொடர்புகளை உருவாக்கும் வழிமுறை - இவை எவையும் சூட்சுமமான முறையில்கூட ஒரு தடை ஆகக்கூடாது என்பதை முன்கூட்டியே சோதித்துப் பாருங்கள். இதை இப்போது முயற்சி செய்து பாருங்கள். பரீட்சைத்தாள் வரும்போது அதை முயற்சி செய்ய ஆரம்பிக்காதீர்கள். அப்போது தோல்வி அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
யோகா ஸ்திதி என்றால், பரிசோதனை செய்யும்போது பற்றற்ற ஸ்திதியைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஒரு யோகியின் ஆன்மீக முயற்சியானது, வசதிகளின் மீது, அதாவது, சடப்பொருளின் மீது வெற்றியாளர் ஆக்க வேண்டும். உங்களால் ஒன்றில்லாமல் இருக்க முடியும், ஆனால் இன்னொன்று இல்லாமல் இருக்க முடியாது, இதனாலேயே உங்களின் ஸ்திதி தளம்புகிறது என்று இருக்கக்கூடாது. அதைப் பற்றற்ற வாழ்க்கை என்று அழைக்க முடியாது. உங்களின் வெற்றியினூடாக, நீங்கள் அடையாத விடயங்களும் உங்களுக்குப் பேறுகளின் உணர்வைக் கொடுக்கும் வகையில் வெற்றி பெறுங்கள். ஸ்தாபனையின் ஆரம்பத்தில், அவர்கள் ஏதாவது விடயங்களால் கவரப்படுகிறார்களா என்பதைச் சோதிப்பதற்காக, வேண்டும் என்றே நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன. உதாரணமாக, 15 நாட்களுக்கு அவர்கள் உண்பதற்குத் தானியத்தால் ஆன சப்பாத்திகளும் மோரும் மட்டுமே வழங்கப்பட்டன. கோதுமை கிடைத்தபோதும் அவர்கள் இதை உண்ண வேண்டியிருந்தது. ஒருவர் எந்தளவிற்கு நோயுற்றிருந்தாலும், அவர்களும் இதையே பதினைந்து நாட்களுக்கு உண்ண வேண்டியிருந்தது. இதனால் எவருக்குமே நோய் ஏற்படவில்லை. ஆஸ்த்மா நோயாளிகளும் குணம் அடைந்தார்கள். பாப்தாதா அந்தத் திட்டத்தைக் கொடுத்துள்ளார் என அவர்களுக்குப் போதை இருந்தது. பக்தி மார்க்கத்தில், நஞ்சும் அமிர்தம் ஆகியது என்று கூறப்படுகிறது. ஆனால் இது மோர் மட்டுமே. நம்பிக்கையும் போதையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களை வெற்றியாளர் ஆக்கும். இத்தகைய பரீட்சைத்தாள்கள் வரும். உங்களுக்கு உண்பதற்குக் காய்ந்த சப்பாத்தி மட்டுமே இருக்கும். தற்சமயம், உங்களிடம் சகல வசதிகளும் உள்ளன. உங்களின் பற்கள் பலமானவை இல்லை, உங்களால் அதை ஜீரணிக்க முடியாது என்றெல்லாம் நீங்கள் கூறக்கூடும். அந்த வேளையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிடம் நம்பிக்கையும் போதையும் யோகத்தின் வெற்றியால் சக்தியும் இருக்கும்போது, காய்ந்த சப்பாத்திகளும் மென்மையான சப்பாத்திகள் போன்று செயல்படும். நீங்கள் குழம்பிப் போக மாட்டீர்கள். வெற்றி சொரூபமாக இருக்கும் பெருமையை நீங்கள் பேணினால், எவராலும் உங்களின் மீது குழப்பம் அடைய முடியாது. ஹத்த யோகிகளின் முன்னால், சிங்கங்கள் பூனைகள் போலவும், பாம்புகள் பொம்மைகள் போலவும் ஆகும்போது, வெற்றி சொரூபங்களான, இலகு இராஜயோகி ஆத்மாக்களான உங்களின் முன்னால் இவை அனைத்தும் பெரிய விடயங்களே கிடையாது. உங்களிடம் வசதி இருந்தால், அதைச் சௌகரியமாகப் பயன்படுத்துங்கள். ஆனால், நேரம் வரும்போது நீங்கள் ஏமாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சூழ்நிலையானது உங்களின் ஸ்திதியைக் கீழே கொண்டு வர அனுமதிக்காதீர்கள். உங்களின் சரீர உறவுகளிடமிருந்து பற்றற்றவராக இருப்பது இலகுவானது. ஆனால், உங்களின் சரீரத்தின் விடயங்களில் இருந்து பற்றற்றவர் ஆகுவதில் நீங்கள் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.
4. உங்களின் பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களில் இருந்து பற்றற்றிருத்தல்
பழைய சரீரங்களின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் மிகவும் பலம்வாய்ந்தவை. மாயையை வென்றவர் ஆகுவதற்கு இவையும் பெரியதொரு தடை ஆகுகின்றன. பல தடவைகளில், பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்கள் என்ற பாம்பு இல்லாமல் போவதையும், ஆனால் அந்தக் கோடு இன்னமும் நிலைத்திருப்பதையும் பாப்தாதா கண்டார். இது அந்த நேரம் வரும்போது, உங்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறது. உங்களின் கடுமையான சுபாவமும் சம்ஸ்காரங்களும் உங்களை மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாக்குகின்றன. அதனால் நீங்கள் பிழையான ஒன்றையும் பிழையெனக் கருதுவதில்லை. உணர்ந்து கொள்ளும் சக்தி முடிந்துவிடுகிறது. இதிலிருந்து விடுபட்டிருப்பதற்கு, நீங்கள் மிக நல்ல முறையில் சோதித்துப் பார்க்கவேண்டும். உணர்ந்து கொள்ளும் சக்தி முடிவடையும்போது, உங்களின் ஒரு பொய்யை உண்மையென நிரூபிக்க நீங்கள் ஆயிரம் பொய்களைக் கூறுவீர்கள். நீங்கள் மிகவும் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவீர்கள். உங்களைச் சரியென நிரூபிக்க முயற்சி செய்வதும், உங்களின் பழைய சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதன் அடையாளமாகும். ஒன்று, எதையாவது சரியெனத் தெளிவுபடுத்துதல். மற்றையது, பிடிவாதமாக உங்களைச் சரியென நிரூபித்தல். பிடிவாதத்தினால் தங்களைச் சரியென நிரூபிக்க முயற்சி செய்பவர்களால் வெற்றி சொரூபம் ஆகமுடியாது. உங்களின் பழைய சுபாவத்தின் அல்லது சம்ஸ்காரத்தின் சிறிதளவான சுவடேனும் எங்கேயாவது மறைந்திருக்கிறதா என நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?
இந்த நான்கு விடயங்களிலும் பற்றற்றவர்களாக இருப்பவர்கள், தந்தையாலும் குடும்பத்தாலும் நேசிக்கப்படுபவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த முறையில் நீங்கள் ஒரு தாமரை மலர் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆகிவிட்டீர்களா? இது, ‘தந்தையைப் பின்பற்றுதல்’ என்று அழைக்கப்படுகிறது. தந்தை பிரம்மா தாமரை ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் ஆகியபோதே, அவர் பௌதீக ரூபத்திலோ அல்லது இப்போது அவ்யக்த ரூபத்திலோ, தந்தையாலும் பிராமணர்களாலும் நேசிக்கப்படுவதில் முதலாம் இலக்கத்தவர் ஆகினார். இப்போதும், ஒவ்வொரு பிராமணரின் இதயத்தில் இருந்தும் என்ன வெளிப்படுகிறது? எமது பிரம்மாபாபா. நீங்கள் அவரைப் பௌதீக ரூபத்தில் பார்க்கவில்லை என நீங்கள் உணர்வதில்லை. உங்களின் கண்களால் நீங்கள் அவரைக் காணவில்லை. ஆனால், நீங்கள் அவரை உங்களின் இதயத்தால் கண்டீர்கள். உங்களின் புத்தியெனும் தெய்வீகக் கண்ணால் அவரைக் கண்டீர்கள். நீங்கள் அவரை அனுபவம் செய்தீர்கள். இதனாலேயே, ஒவ்வொரு பிராமணரும் தனது இதயபூர்வமாக, எனது பிரம்மாபாபா எனக் கூறுகிறார். இது நேசிக்கப்படுபவராக இருப்பதன் அடையாளமாகும். அனைத்தில் இருந்தும் பற்றற்றிருப்பது, அவரை உலகினால் நேசிக்கப்படுபவர் ஆக்கியது. எனவே, அதேபோல், அனைத்தில் இருந்தும் பற்றற்றவராகவும் அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?
குஜராத்தில் இருப்பவர்கள் அண்மையில் வசிக்கிறார்கள். எனவே, அவர்கள் பின்பற்றுவதிலும் நெருக்கமாக இருக்கிறார்கள். புவியியலின் அடிப்படையிலும் உங்களின் ஸ்திதியிலும் இரண்டிலும் நீங்கள் நெருக்கமாக இருப்பதே உங்களின் சிறப்பியல்பாகும். பாப்தாதா எப்போதும் குழந்தைகளைப் பார்த்துக் களிப்படைகிறார்;. அச்சா.
தந்தையால் நேசிக்கப்படுவதுடன் தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் எங்கும் உள்ள பற்றற்ற குழந்தைகள் அனைவருக்கும், சதா மாயையை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், எப்போதும் தந்தையைப் பின்பற்றும் நம்பிக்கை நிறைந்த குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1)மதுவனத்தில் வந்துள்ள சேவாதாரி சகோதர, சகோதரிகளுக்கு: நீங்கள் மதுவனத்தில் சேவை செய்யும் காலப்பகுதியில், நீங்கள் அந்த வேளையில் சதா யோகத்தையும் அனுபவம் செய்கிறீர்களா? உங்களின் யோகம் துண்டிக்கவில்லை, அல்லவா? மதுவனத்தில் ஒரு சேவாதாரி ஆகுதல் என்றால், நிலையான, இலகு யோகியாக இருப்பதை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். நீங்கள் எப்போதும் இந்தக் குறுகிய காலத்திற்கான அனுபவத்தை நினைப்பீர்கள், இல்லையா? எந்தவொரு இக்கட்டான சூழ்நிலை எப்போது வந்தாலும், உங்களின் மனதால் மதுவனத்திற்கு வாருங்கள். மதுவனவாசி ஆகுவதன் மூலம், நீங்கள் ஓர் இலகுயோகி ஆகுவீர்கள். அப்போது அந்தச் சூழ்நிலை அல்லது பிரச்சனை முடிந்துவிடும். எப்போதும் உங்களின் இந்த அனுபவத்தை உங்களுடன் வைத்திருங்கள். இந்த அனுபவத்தை நினைப்பதன் மூலம், நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். சேவையின் பலன் அழியாதது. அச்சா. இந்த வாய்ப்பைப் பெறுவது சிறியதொரு விடயமல்ல. நீங்கள் மிகப் பெரியதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள்.
ஒரு சேவாதாரி என்றால், தந்தையைப் போல் எப்போதும் ஒரு கருவியாக இருப்பவர், பணிவாக இருப்பவர் என்று அர்த்தம். பணிவே வெற்றிக்கான அதிமேன்மையான வழிமுறை ஆகும். எந்தவொரு சேவையைச் செய்யும்போதும், பணிவும் கருவியாக இருப்பதுமே வெற்றிக்கான வழிமுறை ஆகுகின்றன. எனவே, நீங்கள் இந்தச் சிறப்பியல்புகளால் சேவை செய்தீர்களா? இத்தகைய சேவை செய்யும்போது, எப்போதும் வெற்றி ஏற்படும். அத்துடன் மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் சங்கமயுகத்தின் களிப்பை இரசிக்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் சேவையைச் சேவையாக உணர்வதில்லை. உதாரணமாக, ஒருவர் மல்யுத்தம் செய்யும்போது, அதை ஒரு விளையாட்டு எனக் கருதி இரசித்து விளையாடுவார். அதில் எந்தவிதமான களைப்போ அல்லது வலியோ இருக்காது. ஏனென்றால், அதை அவர் ஒரு களியாட்டமாகவும் தனக்கு இரசனையுடையதென்றும் கருதியே செய்கிறார். அதேபோல். உண்மையான சேவையாளர் என்ற சிறப்பியல்புடன் நீங்கள் சேவை செய்யும்போது, ஒருபோதும் களைப்பு இருக்காது. உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் எப்போதும், சேவை செய்யவில்லை, ஆனால் நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்றே உணர்வீர்கள். எனவே, உங்களை எந்தச் சேவை செய்யும்படி கேட்டாலும், தொடர்ந்து இந்த இரண்டு சிறப்பியல்புகளுடன் வெற்றி பெறுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். அச்சா.
2)உண்மையான தபஸ்யா என்றால், எல்லா வேளைக்கும் எந்தவிதக் கலப்படமும் இல்லாத நிஜத்தங்கமாக உங்களை ஆக்கும் என்று அர்த்தம். தபஸ்யா எப்போதும் உங்கள் ஒவ்வொருவரையும் உங்களின் இல்லறத்தில் வெற்றி நிறைந்தவர் ஆக்குவதற்கும், உங்களின் வெகுமதியைப் பெற்றுக் கொள்வதற்கும் உங்களைத் தகுதிவாய்ந்தவர் ஆக்கும். நீங்கள் இத்தகைய தபஸ்விகள் ஆகிவிட்டீர்களா? தபஸ்யா செய்பவர்கள் இராஜயோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் இராஜயோகிகள். நீங்கள் எந்தவொரு சூழ்நிலையாலும் குழப்பம் அடையாதவர்கள், இல்லையா? எனவே, இந்த முறையில் உங்களை எப்போதும் சோதித்துப் பாருங்கள். இவ்வாறு சோதித்தபின்னர், உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களைச் சோதிப்பதன் மூலம், உங்களுக்குள் மனச்சோர்வு ஏற்படலாம். ‘எனக்குள் இந்தப் பலவீனம் உள்ளது, எனக்கு இது உள்ளது, என்னால் அதைச் சரிப்படுத்த முடியுமா இல்லையா என எனக்குத் தெரியவில்லை’ என நீங்கள் நினைக்கக்கூடும். எனவே, உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களைச் சோதிப்பதுடன் கூடவே, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் பலவீனமானவர் ஆகுவீர்கள். காலமும் கடந்து செல்லும். ஆனால், காலத்திற்கேற்ப அனைத்தையும் செய்பவர்கள், எப்போதும் வெற்றியாளர்கள் ஆகுவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் எப்போதும் வெற்றிகரமான, மேன்மையான ஆத்மாக்களா? நீங்கள் அனைவரும் மேன்மையானவர்களா அல்லது வரிசைக்கிரமமானவர்களா? நீங்கள் எந்த இலக்கத்தைச் சேர்ந்தவர் என உங்களைக் கேட்டால், நீங்கள் அனைவரும் ‘முதலாம் இலக்கம்’ என்றே கூறுவீர்கள். எவ்வாறாயினும், எத்தனைபேர் அந்த இலக்கத்தவர் ஆகுவீர்கள்? ஒருவரா அல்லது பலரா? அனைவராலும் முதலாம் இலக்கத்தவர் ஆகமுடியாது. ஆனால், உங்களால் முதல் பிரிவில் வரமுடியும். முதலாம் இலக்கத்தில் வருபவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். ஆனால், பலர் முதல் பிரிவில் வருவார்கள். அதனால் உங்களால் முதல் இலக்கத்தவர் ஆகமுடியும். ஒருவர் மட்டுமே இராச்சிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். ஆனால், அவருக்குப் பல சகபாடிகள் இருப்பார்கள், அல்லவா? எனவே, இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகுதல் என்றால் இராச்சிய உரிமையைக் கோருதல் என்று அர்த்தம். எனவே, முதல் பிரிவு என்றால், முதலாம் இலக்கத்தைக் கோருவதற்கு முயற்சி செய்தல் என்று அர்த்தம். இதுவரை, இரண்டு அல்லது மூன்று ஆசனங்களைத் தவிர, வேறு எந்த ஆசனங்களும் நிச்சயிக்கப்படவில்லை. உங்களால் இப்போது நீங்கள் விரும்பிய எந்தவொரு முயற்சியையும், விரும்பிய அளவு முயற்சியையும் செய்ய முடியும். தாமதம் ஆகிவிட்டது என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். ஆனால், மிகவும் தாமதம் ஆகிவிடவில்லை. இதனாலேயே, அனைவருக்கும் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அனைவருக்கும் வெற்றி பெற்று, ஒன்றைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் இருக்க வேண்டும். ‘எவராவது முதலாம் இலக்கத்தவர் ஆகட்டும், இரண்டாம் இலக்கம் எனக்குப் போதும்’ என்பதாக இருக்கக்கூடாது. இது பலவீனமான முயற்சி எனப்படுகிறது. நீங்கள் அனைவரும் தீவிர முயற்சியாளர்கள், இல்லையா? அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் விவேகியாகி, ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகளையும் செய்து, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.தற்சமயம், காலத்திற்கேற்ப, மூன்று வகையான சேவைகள் - எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினூடாக - ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். உங்களின் வார்த்தைகளினூடாகவும் செயல்களினூடாகவும் சேவை செய்வதுடன், உங்களின் தூய எண்ணங்களாலும் மேன்மையான மனோபாவத்தாலும் உங்களின் மனதால் தொடர்ந்து சேவை செய்யுங்கள். அப்போது அதன் பலனை நீங்கள் பெறுவீர்கள். ஏனென்றால், உங்களின் மனம் சக்திநிறைந்ததாக இருக்கும்போது, உங்களின் வார்த்தைகள் சக்தியால் நிரம்பியிருக்கும். இல்லாவிட்டால், நீங்கள் அதைப் பற்றி மட்டும் பேசுகின்ற பண்டிதர்கள் போல் இருப்பீரகள். ஏனென்றால், அவர்கள் வெறுமனே அனைத்தையும் வாசித்து, அதைக் கிளிகளைப் போல் மீண்டும் சொல்வார்கள். ஒரு ஞானி ஆத்மா, அதாவது, ஒரு விவேகி மூன்று வகையான சேவைகளையும் ஒரே நேரத்தில் செய்வார். அதனால், வெற்றியின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்.
சுலோகம்:
ஒருவரின் வார்த்தைகளாலும் செயல்களாலும் திருஷ்டியாலும் அமைதியினதும் சக்தியினதும் சந்தோஷத்தினதும் அனுபவத்தைக் கொடுப்பதே, மகாத்மாக்களின் மகத்துவமாகும்.