13.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் அனைவரும் நினைவைக் கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையாகிய என்னை நினைவு செய்தால், நான் சகல பாவங்களிலிருந்தும் உங்களை விடுதலை செய்வேன்.
கேள்வி:
அனைவரது சற்கதிக்கான இடமாகத் திகழ்கின்றதும், முழு உலகமுமே அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள போவதுமான இடம் எது?
பதில்:
அபு பூமியே அனைவரதும் சற்கதிக்கான இடமாகும். பெயர்ப்பலகையில் ‘பிரம்ம குமாரிகள்’ என்ற வார்த்தைகளுக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (‘இதுவே அதிமேன்மையான யாத்திரை ஸ்தலம்.’) என நீங்கள் எழுதலாம். இங்கேயே முழு உலகிலுள்ளவர்களும் சற்கதியை பெறுவார்கள். அனைவருக்கும் சற்கதி அருளும் தந்தையும், ஆதாமும் (பிரம்மாவும்) இங்கிருந்தே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார்கள். ஆதாம் என்றால் ஒரு மனிதன். அவர் ஒரு தேவன் அல்ல, கடவுள் என்றும் அவரைக் கூற முடியாது.ஓம் சாந்தி.
இரட்டை ஓம் சாந்தி. ஒன்று தந்தையிடமிருந்தும் மற்றையது தாதாவிடமிருந்துமாகும். இரு ஆத்மாக்களும் இருக்கிறார்கள். அவர் பரமாத்மாவும் இவர் ஓர் ஆத்மாவும் ஆவார். அவர் உங்களுக்குக் கொடுக்கும் இலக்கு: நான் பரந்தாமவாசி. இவரும் அதையே கூறுகிறார். தந்தை ‘ஓம் சாந்தி’ எனக் கூறுகிறார். இவரும் ‘ஓம் சாந்தி’ எனக் கூறுகிறார். குழந்தைகளும் ‘ஓம் சாந்தி’ எனக் கூறுகிறார்கள். அதாவது, நாங்கள் ஆத்மாக்கள், சாந்திதாமவாசிகள். இங்கே, நீங்கள் ஒருவரையொருவர் தொடாது, விலகி அமர்ந்திருக்க வேண்டும். உங்களையடுத்து அமர்ந்திருப்பவரை நீங்கள் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில், ஒவ்வொருவரது ஸ்திதிக்கும், யோகத்திற்கும் இடையில், இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. சிலர் நன்றாகத் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் சிலரோ சற்றேனும் தந்தையை நினைவு செய்வதில்லை. எனவே, தந்தையை சற்றேனும் நினைவு செய்யாதவர்கள், தமோபிரதான், பாவாத்மாக்களும் தந்தையின் நினைவில் நிலைத்திருப்பவர்கள் சதோபிரதான், புண்ணியாத்மாக்களும் ஆவார்கள். அதிகளவு வேறுபாடுள்ளது. வீட்டில் நீங்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், வேறுபாடு இருக்கிறது. இதனாலேயே பாகவதத்தில் நினைவுகூரப்படுகின்ற அசுரர்களின் பெயர்கள் உள்ளன. அது இக் காலத்தையே குறிக்கிறது. தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இவையே பக்தி மார்க்கத்தில் நினைவுகூரப்பட்டிருக்கின்ற தெய்வீகச் செயற்பாடுகளாகும். சத்தியயுகத்தில் உங்களுக்கு எதுவும் ஞாபகத்தில் இருக்க மாட்டாது. நீங்கள் அனைத்தையும் மறந்திருப்பீர்கள். இந்த நேரத்திலேயே தந்தை உங்களுக்கு இந்தக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில் இதனை நீங்கள் முற்றிலும் மறந்திருப்பீர்;கள். அதன் பின்னர், துவாபர யுகத்தில் சமய நூல்களை எழுதி, இராஜயோகத்தைக் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தை இங்கே வரும் போதே அதை அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தை உங்களுக்கு எவ்வாறு இராஜயோகம் கற்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். 5000 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் அதையே கூறுவார்: இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே. இதனை மனிதர்கள் மனிதர்களுக்குக் கூறவோ, அல்லது தேவர்கள் தேவர்களுக்குக் கூறவோ முடியாது. ஆன்மீகத் தந்தையே ஆன்மீகக் குழந்தைகளுக்கு இதைக் கூறுகிறார். ஒரு தடவை உங்கள் பாகத்தை நீங்கள் நடித்ததும், மீண்டும் 5000 வருடங்களின் பின்பே உங்கள் பாகத்தை நீங்கள் நடிப்பீர்கள். ஏனெனில், அப்போது நீங்கள் ஏணியில் மீண்டும் கீழிறங்கி வந்திருப்பீர்கள். இப்போது உங்கள் புத்தியில் ஆரம்பம், நடுப்பகுதி, இறுதியின் இரகசியங்கள் இருக்கின்றன. அது சாந்தி தாமம், அதாவது பரந்தாமம் என்பது உங்களுக்குத் தெரியும். வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்களாகிய நாங்கள் வரிசைக்கிரமமாக அசரீரி உலகத்தில் வாழ்கிறோம். நட்சத்திரங்கள் மேலே எவ்வாறு உள்ளன என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். உங்களால் அங்கே வேறு எதனையுமே பார்க்க முடியாது. மேலே எதுவுமே இல்லை. பிரம்ம தத்துவம் மட்டுமே உள்ளது. இங்கே, நீங்கள் பூமியில் இருக்கிறீர்கள். இது கர்மஷேத்திரம். நீங்கள் இங்கே வந்து, ஒரு சரீரத்தை எடுத்து, செயல்களைச் செய்கிறீர்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: என்னிடமிருந்து நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளும் போது, உங்கள் செயல்கள் 21 பிறவிகளுக்கு நடுநிலை ஆகுகின்றன. ஏனெனில் அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. அது இப்போது இறைவானால் ஸ்தாபிக்கின்ற இறை இராச்சியமாகும். அவர் தொடர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: சிவபாபாவை நினைவு செய்தால், உங்களால் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக முடியும். சிவபாபாவே சுவர்க்கத்தை ஸ்தாபித்தார். எனவே, சிவபாபாவையும் சந்தோஷ பூமியையும் நினைவு செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், சாந்தி தாமத்தை நினைவு செய்யுங்கள். அப்போது, நீங்கள் சக்கரத்தையும் நினைவு செய்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதை மறக்கின்றீர்கள் என்பதால், மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. ஓ இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி உங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழியும். அவர் வாக்குறுதி அளிக்கின்றார்: நீங்கள் நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் பாவங்களிலிருந்து உங்களை நான் விடுவிப்பேன். தந்தை ஒருவரே தூய்மையாக்குபவரும் சர்வசக்திவானும் ஆவார். அவர் உலக சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைத் தெரியும். அவர் சகல வேதங்கள், சமயபுராணங்கள் போன்றவற்றை அறிந்திருப்பதாலேயே அவர் கூறுகிறார்: அவற்றில் எவ்விதமான சாராம்சமும் இல்லை. கீதை சமய நூல்கள் அனைத்தின் இரத்தினமாகவும், தாயாகவும் தந்தையாகவும் இருந்த போதிலும், அதிலும் எந்தச் சாராம்சமும் இல்லை. ஏனையவை அனைத்தும் அதன் குழந்தைகளே. அவ்வாறே, முதன்முதலில் பிரஜாபிதா பிரம்மாவும் ஏனைய அனைவரும்; குழந்தைகளாகவும் உள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மா முதல் மனிதனான ஆதாம் என்று அழைக்கப்படுகிறார். ஆதாம் என்றால் ஒரு மனிதன் என்று அர்த்தமாகும். அவர் ஒரு மனிதன் என்பதால் அவரைத் தேவன் என்று அழைக்க முடியாது. ஆதாமே முதல் மனிதன் ஆவார். பக்தர்கள் ஆதாமாகிய பிரம்மாவைத் தேவன் என்று அழைக்கிறார்கள். ஆதாம் என்றால் மனிதன் என்று தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் தேவனும் அல்ல, கடவுளும் அல்ல. இலக்ஷ்மியும் நாராயணரும் தேவர்கள். வைகுந்தத்தில் தேவதர்மம் இருந்தது. அது புதிய உலகமாகும். அதுவே உலக அதிசயமாகும். ஏனையவை அனைத்தும் மாயையின் அதிசயங்களே. மாயையின் அதிசயங்கள் துவாபரயுகம் ஆரம்பித்த பின்னரே தோன்றின. சுவர்க்கமே இறை அதிசயமாகும். தந்தை ஒருவரே அதனை ஸ்தாபிக்கின்றார். இப்பொழுதே அது ஸ்தாபிக்கப்படுகிறது. தில்வாலா ஆலயத்தின் பெறுமதியை எவரும் உணரவில்லை. மக்கள் யாத்திரை செல்கிறார்கள். ஆனால், அதுவே மிகச்சிறந்த யாத்திரைத் ஸ்தலமாகும். பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம், அபு மலை என்று நீங்கள் எழுதுகிறீர்கள். எனவே, அடைப்புக்குறிக்குள் ‘(அதிமேலான யாத்திரைத் தலம்)’ என்றும் நீங்கள் எழுத வேண்டும். ஏனெனில், இங்கேயே அனைவரும் சற்கதியை பெறுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வேறு எவருக்குமே இது தெரியாது. எனவே, கீதை சமயநூல்களின் இரத்தினமாக இருப்பதைப் போன்றே, யாத்திரைத் ஸ்தலங்களுக்குள் அபுவே அதி மகிமை வாய்ந்ததாகும். எனவே இதனை வாசித்ததும், மக்களின் கவனம் ஈர்க்கப்படும். உலகிலுள்ள எல்லா யாத்திரைத் தலங்களிலும், தந்தையே வந்திருந்து அனைவருக்கும் சற்கதி அளிக்கும் அதி மகிமை வாய்ந்த யாத்திரைத் தலம் இதுவேயாகும். யாத்திரைத் தலங்கள் பல இருக்கின்றன. காந்தியின் ஞாபகார்த்த இடத்தையும் யாத்திரைத் தலமாகவே கருதுகிறார்கள். அனைவரும் அங்கே சென்று மலர்கள் போன்றவற்றினால் அர்ச்சனை செய்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. குழந்தைகளாகிய உங்களுக்கு இது தெரியும் என்பதால், நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, உங்கள் இதயத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றோம். தந்தை இப்போது கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். கல்வி மிகவும் இலகுவாகும். இதற்கு உங்களுக்கு எந்தச் செலவும் இல்லை. உங்கள் மம்மா இதற்கென ஒரு சதத்தையேனும் செலவு செய்தாரா? ஒரு சதமேனும் செலவழிக்காது, அவர் கற்று, மிகவும் திறமைசாலியாகி, முதல் இலக்கத்தைப் பெற்றார். அவர் ஒரு இராஜயோகினி ஆகினார். மம்மாவைப் போல் வேறு எவருமே உருவாகவில்லை. பாருங்கள், தந்தை இங்கிருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு மட்டுமே கற்பிக்கின்றார். ஆத்மாக்களே இராச்சியத்தைப் பெறுகின்றார்கள். ஆத்மாக்களே இராச்சியத்தை இழந்தார்கள். மிகவும் சின்னஞ்சிறிய ஆத்மா அதிகளவு வேலையை செய்கிறார். விகாரத்தில் ஈடுபடுவதே அனைத்திலும் அதி மோசமான வேலையாகும். ஆத்மாக்கள் 84 பிறவிகளுக்கான பாகத்தை நடிக்கிறார்கள். மிகச் சின்னஞ் சிறியதொரு ஆத்மாவிற்கு அதிகளவு சக்தியுள்ளது. அவர் உலகம் முழுவதையும் ஆட்சி புரிகின்றார். அந்தத் தேவ ஆத்மாக்களுக்கு அதிகளவு சக்தியுள்ளது. ஒவ்வொரு சமயத்திற்கும் அதற்கேயுரிய சக்தி உள்ளது. கிறிஸ்தவ சமயம் மிகவும் வலிமைவாய்ந்ததாகும். ஆத்மா ஒருவருக்குப் பலம் இருக்கும் போது அவர் சரீரத்தால் செயல்களைச் செய்கிறார். ஆத்மாவே இங்கே வந்து இந்தச் செயல்களின் களத்தில் செயல்களை ஆற்றுகிறார். அங்கே தீய செயல்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. இராவண இராச்சியமாக இருக்கும் போது, ஆத்மாக்கள் பாவ மார்க்கத்திற்குச் செல்கிறார்கள். விகாரங்கள் எப்போதுமே இருந்திருக்கின்றன என்று மக்கள் கூறுகிறார்கள். அங்கே இராவண இராச்சியம் இல்லாத போது, எவ்வாறு விகாரங்கள் அங்கிருக்க முடியும் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். அங்கே யோக சக்தி மட்டுமே இருக்கிறது. பாரதத்தின் இராஜயோகம் மிகப் பிரபலமானதாகும். பலரும் அதனை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் உங்களால் மட்டுமே அதைக் கற்பி;க்க முடியும். வேறு யாராலும் அதனைக் கற்பிக்க முடியாது. உதாரணமாக, யோகம் கற்றுக் கொடுப்பதற்கென்று மகரிஷி எவ்வளவோ முயற்சி செய்தார். இருப்பினும், ஹத்த யோகிகளுக்கு இராஜயோகம் கற்பிப்பது சாத்தியமில்லை என்பது உலகத்தவருக்குத் தெரியாது. சின்மயானந்தரிடம் பலர் செல்கிறார்கள். அவர் ஒரேயொரு தடவையேனும் பாரதத்தின் புராதன இராஜயோகத்தை பிரம்மகுமாரிகளைத் தவிர வேறு எவராலும் கற்பிக்க முடியாது என்று கூறுவாராயின், அதுவே போதுமானதாகவிருக்கும். ஆனாலும், இப்போது அத்தகைய ஓசை பரவுவது என்பது நியதி அல்ல. அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்றில்லை. அதிகளவு முயற்சி தேவையாகும். அத்துடன் உங்களுக்கான புகழும் இருக்கும். இறுதியில், அவர்கள் ‘ஓ பிரபு! ஓ சிவபாபா! உங்கள் தெய்வீகச் செயற்பாடுகள் அற்புதம்!’ என்று கூறுவார்கள். உங்களைத் தவிர வேறு எவருமே தந்தையைப் பரம தந்தை, பரம ஆசிரியர், பரமசற்குரு என்று கருதுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இங்கேயும் பலர் முன்னேறிச் செல்லும் போது, மாயையால் தொந்தரவு செய்யப்படுவதால், அவர்கள் முற்றிலும் விவேகம் அற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. இது ஒரு யுத்தக் களமாகும். மாயை இதில் பல தடைகளையும் உருவாக்குகிறாள். அவர்கள் அழிவுக்கு ஆயத்தங்கள் செய்கிறார்கள். நீங்கள் ஐந்து விகாரங்களை வெற்றி கொள்வதற்கு முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் வெற்றிக்கு ஆயத்தம் செய்கிறீர்கள். அவர்களோ அழிவுக்கு ஆயத்தம் செய்கிறார்கள். இரு பணிகளும் ஒரே நேரத்திலேயே நிறைவடையும். இன்னும் காலம் இருக்கிறது. எங்கள் இராச்சியம் இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை. இராஜாக்களும் பிரஜைகளும் இன்னமும் உருவாக்கப்பட உள்ளனர். அரைச்சக்கரத்திற்காக நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனாலும், எவருமே இன்னும் முக்தியடையவில்லை. இன்னார் முக்தியடைந்து விட்டார் என்று அவர்கள் கூறினாலும், அவர் மரணித்த பின்னர் எங்கே சென்றார் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொய்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் சரீரத்தை விடுகின்றவர்கள் நிச்சயமாக இன்னொன்றை எடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களால் அநாதியான முக்தி அடைய முடியாது. நீர்க்குமிழி நீருடன் இரண்டறக் கலக்கும் என்பதல்ல. தந்தை கூறுகிறார்: அந்த சமய நூல்கள் போன்றவை அனைத்தும், பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்களாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தை கூறுவதை நேரில் செவிமடுக்கிறீர்கள். நீங்கள் சுடச்சுட அல்வா சாப்பிடுகிறீர்கள். அனைவரிலும் மிகச் சுடசுட அல்வா சாப்பிடுபவர் யார்? (பிரம்மா). அவர் சிவபாபாவின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். அவர் அனைத்தையும் உடனேயே செவிமடுத்து, பின்பு உட்கிரகித்து, உயர்ந்த அந்தஸ்தொன்றையும் பெற்றுக் கொள்கிறார். இவரின் காட்சிகளை வைகுந்தத்திலும் சூட்சுமலோகத்திலும் மக்கள் பெறுகிறார்கள். இங்கேயும் மக்கள் தங்கள் பௌதீகக் கண்களால் அவரைக் காண்கிறார்கள். தந்தை எல்லோருக்கும் கற்பிக்கின்ற போதிலும், தந்தையின் நினைவில் இருப்பதற்கு முயற்சி தேவையாகும். தந்தையின் நினைவில் இருப்பது உங்களுக்குச் சிரமமாக இருப்பது போலவே இவருக்கும் அது சிரமமாகவே இருக்கிறது. இதில் கருணை என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகிறார்: இந்தச் சரீரத்தை நான் கடனாகப் பெற்றிருக்கிறேன். அந்தக் கணக்கை நான் தீர்த்துக் கொள்வேன். ஆனால், இவரும் தந்தையின் நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அவர் (சிவபாபா) என்னையடுத்து அமர்ந்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். தந்தையை நான் நினைவு செய்கிறேன். ஆனால் பின்னர் மறந்து விடுகிறேன். இவரே அதிகபட்ச முயற்சியை செய்ய வேண்டி உள்ளது. மாயை யுத்தகளத்தில் மகாரத்திகளையே அதிகளவு பரீட்சித்தாள். அனுமன் போன்ற மகாவீரர்கள் உதாரணமாக உள்ளனர். நீங்கள் எந்தளவிற்கு பலசாலிகளாகுகின்றீர்களோ அந்தளவிற்கு மாயை உங்களை பரீட்சிக்கின்றாள். அந்தளவிற்கு அதிகளவு புயல்களும் வருகின்றன. குழந்தைகள் எழுதுகிறார்கள்: பாபா, எனக்கு இது நடக்கின்றது, அது நடக்கின்றது. பாபா கூறுகிறார்: அவையெல்லாம் நடக்கும். ஒவ்வொரு நாளும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: எச்சரிக்கையாக இருங்கள். மாயை பல புயல்களையும் கொண்டு வருகிறாள் என்று நீங்கள் எழுதுகிறீர்கள். சிலர் சரீர உணர்வுடையவர்களாக இருப்பதால் அவர்கள் பாபாவுக்கு எதையுமே கூறுவதில்லை. நீங்கள் இப்போது மிகவும் விவேகமானவர் ஆகுகிறீர்கள். ஆத்மா தூய்மையாகும் போது அவர் தூய சரீரத்தைப் பெற்றுக் கொள்கிறார். அதன் பின் ஆத்மா மிகவும் பிரகாசிக்கிறார். முதன்முதலில், இந்த ஞானத்தைப் பெறுபவர்கள் ஏழைகளே ஆவார்கள். தந்தையும் ஏழைகளின் பிரபு என்றே நினைவுகூரப்படுகிறார். ஏனைய அனைவரும் தாமதமாகவே வருகிறார்கள். சகோதர, சகோதரிகள் ஆகாமல், அவர்கள் சகோதரர்களாகுவது சாத்தியமில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகளாவர். தந்தை இப்போது விளங்கப்படுத்துகிறார்: உங்களைச் சகோதரர்களாகக் கருதுங்கள். இதுவே கடைசி உறவுமுறையாகும். அதன் பின் நீங்கள் மேலே சென்று உங்கள் சகோதரர்களைச் சந்திப்பீர்கள். அதன் பின், சத்தியயுகத்தில் புதிய உறவுகள் ஆரம்பமாகும். அங்கே மைத்துனர்கள், மாமனார் போன்ற பல உறவுகள் இருக்க மாட்டாது. அங்கு வெகுசில உறவுகளே இருக்கும். அவை பின்னர் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இப்போது தந்தை கூறுகிறார்: உங்களைச் சகோதரன், சகோதரிகள் என்று கூட கருதாது, சகோதரர்களாக மாத்திரமே கருதுங்கள்;. நீங்கள் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பால் செல்ல வேண்டும். தந்தை சகோதரர்களாகிய (ஆத்மாக்கள்) உங்களுக்கு மட்டுமே கற்பிக்கிறார். பிரஜாபிதா பிரம்மா இங்கிருக்கும் போதே, நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தையாவார். அவரால் எவ்வாறு உங்கள் எல்லோரையும் சகோதரர்கள் ஆக்க முடியும்? இவை அனைத்தும் கீதையிலும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஞானம் முற்றிலும் தனித்துவம் வாய்ந்ததாகும். அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு விநாடியில் இடம்பெறும் பாகம் அடுத்த விநாடியில் இடம்பெறும் பாகத்தைப் போல் இருக்க முடியாது. எத்தனையோ மாதங்கள், நாட்கள், மணித்தியாலங்கள் கடந்து செல்ல இருக்கின்றன. 5000 வருடங்களின் பின், அதே போன்று அவை கடந்து செல்லும். குறுகிய புத்திகளைக் கொண்டவர்களால் அதிகம் உட்கிரகிக்க முடியாது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாவாகக் கருதி எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதென்பது மிக இலகுவானதாகும். பழைய உலகம் அழியவுள்ளது. தந்தை கூறுகிறார்: சங்கமயுகத்தின் போது நான் வருகின்றேன். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். அவர்களது இராச்சியத்தின் போது, அங்கே வேறெந்த சமயமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது அவர்களது இராச்சியம் இல்லை. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்போது இறுதிக்கணங்கள் என்பதால், நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகையால், எவரது பெயரிலும் உருவத்திலும் இருந்து உங்கள் புத்தியை அகற்றுங்கள். ‘ஆத்மாக்களாகிய நாம் சகோதரர்கள்’ என்ற விழிப்புணர்வைப் பயிற்சி செய்யுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகாதீர்கள்.2. ஒவ்வொருவரது ஸ்திதிக்கும் யோகத்திற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அதனால், ஒருவரையொருவர் தொடாத வகையில், விலகி அமர்ந்திருங்கள். புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்குத் நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நினைவிலும் சேவையிலும் சமநிலையை பேணுவதன் மூலம் தந்தையின் உதவியை அனுபவம் செய்து, ஆசீர்வாதங்களைப் பெறுகின்ற தகுதிவாய்ந்ததோர் ஆத்மா ஆகுவீர்களாக.
நினைவிலும் சேவையிலும் சமநிலையை கொண்டிருக்கும் போது, அதாவது, இரண்டும் சமமாக இருக்கும் போது, நீங்கள் குறிப்பாக தந்தையின் உதவியை அனுபவம் செய்வீர்கள். இந்த உதவி ஆசீர்வாதங்கள் ஆகுகின்றன, ஏனெனில், பாப்தாதா, ஏனைய ஆத்மாக்கள் கொடுப்பதைப் போன்று ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை. தந்தை சரீரமற்றவர் என்பதால் அவரிடமிருந்து இலகுவாகவும் இயல்பாகவும் உதவியை பெறுதலே பாப்தாதாவின் ஆசீர்வாதங்கள் ஆகும். அதனூடாக சாத்தியமற்ற விடயங்களும் சாத்தியம் ஆகுகின்றன. இந்த உதவி என்றால் ஆசீர்வாதங்களைப் பெறுதலாகும். நீங்கள் அத்தகைய ஆசீர்வாதங்களுக்கு தகுதியான அத்தகைய ஆத்மாக்கள் என்பதால் நீங்கள் ஒவ்வொரு அடியிலும் பலமில்லியன் வருமானத்தை ஈட்டுகிறீர்கள்.சுலோகம்:
சக்காஷ் கொடுக்க வேண்டுமாயின், அழியாத சந்தோஷத்தினதும், அமைதியினதும், உண்மையான அன்பினதும் கையிருப்பை சேமித்துக் கொள்ளுங்கள்.