15.11.2018 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஸ்ரீமத்தை மிகச்சரியான முறையில் கிரகிப்பதன் மூலம் தந்தையின் பெயர் போற்றப்படுமாறு செய்வதற்கு, உங்கள் புத்தியையும், எண்ணங்களையும் மிகவும் தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் எத்தகைய ஸ்திதி தந்தையை வெளிப்படுத்தும்?
பதில்:
உங்களது முகம் சதா மலர்ச்சியானதாகவும், நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவராகவும், ஸ்திரமாகவும் போதையுடையவராகவும் இருக்கின்ற ஸ்திதியைக் கொண்டிருக்கும் பொழுது உங்களால் தந்தையை வெளிப்படுத்த முடியும். ஒரு நிலையான ஸ்திதியைக் கொண்ட, அத்தகைய திறமைசாலிக் குழந்தைகளாலேயே அனைவருக்கும் தந்தையின் மிகச்சரியான அறிமுகத்தைக் கொடுக்க முடியும்.
பாடல்:
உங்கள் பாதையிலேயே வாழ்ந்து, உங்கள் பாதையிலேயே மடிவேன்….
ஓம் சாந்தி:
“நாங்கள் மரணித்து வாழ்வதற்காக உங்கள் வாயிலுக்கு வந்திருக்கின்றோம்” எனக் கூறுகின்ற பாடலைக் குழந்தைகளாகிய நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் யாருடைய வாயிலுக்கு வந்துள்ளீர்கள்? அதே விடயமே வெளிப்படுகிறது: கீதையின் கடவுள் கிருஷ்ணராயின், இவ்விடயங்கள் எதுவுமே சாத்தியமாக இருந்திருக்கவும் மாட்டாது, கிருஷ்ணர் இங்கே இருந்திருக்கவும் மாட்டார். அவர் சத்தியயுக இளவரசராவார். கிருஷ்ணர் கீதையைப் பேசவில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையே கீதையைப் பேசினார். அனைத்தும் இந்த ஒரு விடயத்திலேயே தங்கியுள்ளது. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு முயற்சி செய்தீர்கள்; ஆனால் அதற்கு அவசியமே இல்லை. இங்கே, இ;து ஒரு விநாடிக்கான கேள்வியாகும். இந்த ஒரு விடயத்தை நிரூபிப்பதற்குத் தந்தை பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். அவர் அதிகளவு ஞானத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் கொடுக்கின்ற புராதன ஞானமே ஞானம் என அழைக்கப்படுகின்றது. அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. இப்பொழுது மறைந்துவிட்ட, தேவதர்மத்தை ஸ்தாபிப்பதற்கு, பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து, இலகு இராஜயோகத்தையும், ஞானத்தையும் கற்பித்தார். கிருஷ்ணர் ஒரு கால கட்டத்தில் மீண்டும் வந்து, கீதையை உரைப்பார் என மக்கள் எண்ணுகின்றனர். எவ்வாறாயினும், ஞானக்கடலாகிய பரலோகத்து பரமாத்மாவாகிய பரமதந்தையே கீதையைப் பேசினார் என்பதனைச் சக்கரத்தின் படத்தைப் பயன்படுத்தி, நீங்கள் தெளிவாக நிரூபிக்க வேண்டும். கிருஷ்ணரின் புகழானது, பரமாத்மாவாகிய பரமதந்தையின் புகழிலிருந்து வேறுபட்டது. இலகு இராஜயோகத்தைக் கற்றதனால், கிருஷ்ணர் தனது இராச்சிய பாக்கியத்தைப் பெற்று சத்தியயுக இளவரசர் ஆகுகின்றார். அவர் கற்கும்பொழுது இருக்கின்ற பெயரும் ரூபமும் அவர் இராச்சியத்தைப் பெற்ற பொழுது இருந்த பெயரிலும் ரூபத்திலும் இருந்து வேறுபட்டவையாகும். கிருஷ்ணரை ஒருபொழுதுமே தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மா இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையாக்குபவரிடமிருந்து இராஜயோகத்தைக் கற்று, எதிர்கால தூய உலகின் இளவரசராக ஆகுகின்றார். இவ்விளக்கம் சரியானதென்பதனை நிரூபிப்பதற்கு நீங்கள் திறமையான வழிமுறைகளைக் கண்டறிவது அவசியமாகும். நீங்கள் வெளிநாட்டவர்களுக்கும் இதனை நிரூபிக்க வேண்டும். கீதையே முதலாம் இலக்கச் சமயநூலாகும். கீதை மாதாவாகிய, ஸ்ரீமத் பகவத் கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். இப்பொழுது, தாய்க்குப் பிறப்புக் கொடுத்தவர் யார்? தந்தையே தாயைத் தத்தெடுக்கின்றார். கீதையைப் பேசியவர் யார்? கிறிஸ்து பைபிளை உருவாக்கியதாகக்; கூற முடியாது. அவர்கள் கற்கின்ற பைபிள், கிறிஸ்துவால் பேசப்பட்ட கற்பித்தல்களிலிருந்து உருவாக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கற்கக்கூடிய புத்தகமாக உருவாக்கப்படும் வகையில், கீதையின் கற்பித்தல்களைக் கொடுத்தவர் யார்? எவருமே இதனை அறியார்கள். அனைவரும் ஏனைய சமயநூல்களைப் பற்றி அறிவார்கள். இராஜயோகத்தின் இந்த இலகுவான கற்பித்தல்களைக் கொடுத்தவர் யார் என்பதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். நாளுக்கு நாள், உலகம் தொடர்ந்தும் மேலும் மேலும் தூய்மையற்றதாக ஆகுகின்றது. இவ்விடயங்கள் யாவும் ஒரு சுத்தமான புத்தியில் மாத்திரமே இருக்கும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாது. அத்தகைய ஆத்மாக்களுக்கு ஸ்ரீமத் கூறுகின்றது: உங்களால் முற்றாகவே விளங்கப்படுத்த முடியாது. உங்களை ஞானம் நிறைந்தவராகக் கருதாதீர்கள். முதலில், பரமாத்மாவாகிய பரமதந்தையே கீதையின் கடவுள் என்ற பிரதான விடயத்தை நிரூபிக்க வேண்டும். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவரைச் சர்வவியாபகர் என மக்கள் கூறுகின்றனர். அவர்கள் அவரை ஒளித் தத்துவம் அல்லது கடல் எனவும் அழைக்கின்றனர். அவர்கள் தங்கள் புத்தியில் பிரவேசிப்பவை அனைத்தையும் கூறுகின்றார்கள்; அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணரே கீதையின் கடவுள் எனக் கூறுகின்ற பெரிய தவறே கீதையில் வெளிப்படுகின்றது. ஆகவே, விளங்கப்படுத்துவதற்கு, நீங்கள் கீதையைக் குறிப்பிட வேண்டும். கீதையின் கடவுள் கிருஷ்ணரல்லர் என்பதனை பெனாரஸில் நிரூபித்துக் காட்டுமாறு, பெனாரஸைச் சேர்ந்த குப்தாஜிக்குக் கூறப்பட்டது. இப்பொழுது இடம்பெறும் கருத்தரங்குகளில் சமயப் பற்றுள்ளவர்கள் அனைவரும் அமைதியை உருவாக்குவதற்குத் தாங்கள் என்ன செய்யலாம் எனத் தொடர்ந்தும் கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். அமைதியை உருவாக்குவது தூய்மையற்ற மனிதர்களின் கரங்களில் இல்லை. ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனக் கூறப்படுகின்றது. தூய்மையற்ற மக்கள் தாங்களே அமைதிக்காகக் கூவியழைக்கும் பொழுது, எவ்வாறு அவர்;களால் அமைதியை உருவாக்க முடியும்? எவ்வாறாயினும், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கின்ற தந்தையை அவர்கள் அறியர்கள். தூய்மையாக இருந்த பாரதம் இப்பொழுது தூய்மையற்றதாகிவிட்டது. இப்பொழுது, தூய்மையாக்குபவர் யார்? இது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. அவர்கள் அரசர் இராமரின் புகழைப் பாடுகின்றனர், எனினும் அவர் கடவுளல்லர். அவர்கள் தவறான முறையில் கூவியழைக்கின்றார்கள். எனினும், எவரும் எதனையும் அறியார். இப்பொழுது, யாரால் அவர்களிடம் சென்று, இதனை விளங்கப்படுத்த முடியும்? மிகச்சிறந்த குழந்தைகள் தேவைப்படுகின்றனர். இதனை விளங்கப்படுத்துவதற்கு, உங்களுக்கு மிகவும் சாதுரியம் அவசியமாகும். பெரிய உலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதன்மூலம், கடவுளே கீதையை உருவாக்கினார் என்பதனை நிரூபிக்க முடியும். யாராக இருந்தாலும், அனைவரும் கடவுளே என அவர்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: நீங்கள் விவேகமற்றவர்கள்! நான் வந்து, தூய இராச்சியத்தை ஸ்தாபித்தேன், ஆனால் அவர்களோ எனக்குப் பதிலாக ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் புகுத்திவிட்டார்கள். நான் இவரைத் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்கி, முதலாவது இளவரசர் ஆக்குகின்றேன். கடவுள் பேசுகின்றார்: நான் கிருஷ்ணரின் ஆத்மாவைத் தத்தெடுத்து, அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டு, அவர் மூலம் ஞானத்தைக் கொடுக்கின்றேன். இந்த இலகு இராஜயோகத்தின் மூலமாக அவர் பின்னர் சத்தியயுகத்தின் முதலாவது இளவரசர் ஆகுகின்றார். இந்த விளக்கம் வேறு எவரது புத்தியிலும் இல்லை. முதலில், நீங்கள் அத்தவறைத் திருத்தி, அனைத்துச் சமயநூல்களினதும் தாயும் தந்தையுமாக விளங்குகின்ற, ஸ்ரீமத்தாகிய கீதை கடவுளால் பேசப்பட்டதென்பதனை நிரூபிக்க வேண்டும். அதனை உருவாக்கியவர் யார்? கிறிஸ்தவ சமயநூலாகிய பைபிளுக்கு கிறிஸ்து பிறப்புக் கொடுத்தார். நல்லது, பைபிளின் தந்தை யார்? கிறிஸ்துவே ஆவார். அவர் தாய் என்றோ, தந்தை என்றோ அழைக்கப்படுவதில்லை. தாய் என்ற கருத்தை அவர்கள் அங்கே கொண்டிருப்பதில்லை. இங்கே, இவரே (சிவபாபா) தாயும், தந்தையுமாவார். கிறிஸ்தவ சமயம் கிருஷ்ண தர்மத்துடன் ஒப்பிடப்படுகின்றது. உண்மையில், அவர்கள் கிறிஸ்துவை நம்புகின்றார்கள். அதேபோன்று, புத்தர் பௌத்த சமயத்தை ஸ்தாபித்தார். எனவே, பௌத்தர்களும் தங்களுக்கென ஒரு சமயநூலை வைத்திருக்கின்றார்கள். எவ்வாறாயினும், கீதையைப் பேசியவர் யார் என்பதனையோ, அதன்மூலம் எச்சமயம் உருவாக்கப்பட்டது என்பதனையோ எவருமே அறியார்கள தூய்மையாக்குபவராகிய பரமாத்மாவாகிய பரமதந்தையே ஞானத்தைக் கொடுத்தவர் என்பதனை எவருமே ஒருபொழுதும் கூறுவதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையே இந்த ஞானத்தைக் கொடுத்தார் என்பதனை அவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே சக்கரத்தின் படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இராதையும், கிருஷ்ணரும் சத்தியயுகத்தில் இருந்தனர். அவர்கள் தாங்களே தங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஞானத்தைக் கொடுப்பதற்கு, வேறு ஒருவர் தேவைப்படுகின்றார். யாரோ ஒருவர் அவர்களைச் சித்தியடையச் செய்திருக்க வேண்டும். அவர்கள் தங்களது இராச்சியத்தைப் பெறுவம் வகையில் இந்த ஞானத்தை அவர்களுக்குக் கொடுத்தவர் யார்? பாக்கியம் என்பது தானாக உருவாக்கப்படுவதில்லை. நீங்கள், உங்களது பாக்கியத்தை உருவாக்குவதற்கு, ஒரு தந்தையோ, ஆசிரியரோ தேவைப்படுகின்றார். குருவே ஜீவன்முக்தியை அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர், எனினும் முக்தி அல்லது ஜீவன்முக்தியின் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள் முக்தியைப் பெறமுடியும். முக்தி என்றால், அனைவரும் தந்தையிடம் செல்வதாகும். எவருமே இதனைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் பெரிய கடைகள் பலவற்றைத் திறக்கின்றார்கள். இது மாத்திரமே உண்மையான ஞான மார்க்கத்தின் கடையாகும். ஏனைய அனைத்துக் கடைகளும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. தந்தை கூறுகின்றார்: வேதங்கள், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை ஆகும். நோன்பு, தபஸ்யா போன்றவற்றின் மூலமாகவோ வேதங்கள், சமயநூல்கள் போன்றவற்றின் மூலமாகவோ என்னைக் கண்டறிய முடியாது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, உங்களைத் தூய்மையாக்குகின்றேன். நானே முழு உலகிற்கும் ஜீவன்முக்தியை அருள்பவர். நீங்கள் முக்தியினூடாகவே ஜீவன்முக்திக்குச் செல்ல வேண்டும். அனைவரும் சத்தியயுகத்திற்குச் செல்லமாட்டார்கள். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். முன்னைய கல்பத்தில் உங்களுக்கு என்ன கற்பிக்கப்பட்டதோ, அந்நேரத்தில் எந்தெந்தப் படங்கள் உருவாக்கப்பட்டனவோ அவை இப்பொழுது மீண்டும் ஒருமுறை உருவாக்கப்படுகின்றன. உலகம் மூன்று சமயங்களின் கால்களிலேயே நிற்பதாகவும், அதில் தேவதர்மத்தின் கால் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், அதனாலேயே உலகம் தொடர்ந்தும் ஆட்டம் காண்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். முன்னர், ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. அது பிரிவினையற்ற இராச்சியம் என அழைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தர்மத்தின் கால் மறைந்து, மூன்று கால்கள் வெளிப்பட்டன. இதன் காரணமாக எந்தச் சக்தியுமே எஞ்சவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் பிரபுவையோ, அதிபதியையோ அறியாததால், அநாதைகளாகிவிட்டனர். இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு, உங்களுக்குப் பெருமளவு சாதுரியம் தேவையாகும். கீதையின் கடவுள் கிருஷ்ணரல்லர் என்பதனையும், அது, பாரதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பரமாத்மாவாகிய பரமதந்தையே என்பதனையும் கண்காட்சிகளில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கிருஷ்ணர் சரீரதாரி, அவரோ அசரீரியானவர். அவரது புகழ் கிருஷ்ணருடைய புகழிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். கீதையை உபதேசித்தவர் யார் என்பதனை நிரூபிக்கக்கூடியதாக, புத்திக்கூர்மையான முறையில் நீங்கள் கேலிச் சித்திரங்களை உருவாக்க வேண்டும். இது குருடனுக்கு முன்னால் பெரிய கண்ணாடியை வைப்பது போன்றதாகும். நீங்கள் விடயங்களுக்குள்; அதிகளவு செல்லக்கூடாது. பரமாத்மாவாகிய பரமதந்தையின் புகழைக் கிருஷ்ணருக்கு வழங்கியதே மாபெரும் தவறாகும். கிருஷ்ணரது புகழ் அவருடையதை விடவும் முற்றிலும் வேறானதாகும். இலக்ஷ்மி, நாராயணனின் படத்தின் கீழ் எழுதப்பட்டுள்ளது: இராதையும், கிருஷ்ணரும்: அவர்களே பின்னர் இலக்ஷ்மியாகவும் நாராயணனாகவும் ஆகுகின்றனர். இலக்ஷ்மியும், நாராயணனும் சத்தியயுகத்தில் உள்ளனர். இராமரும், சீதையுமோ திரேதாயுகத்தில் உள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணரே முதலாவது குழந்தையாக உள்ளபோதிலும், அவர்கள் அவரைத் துவாபரயுகத்திற்குக் கொண்டுசென்றுவிட்டனர். பக்தி மார்க்கத்தில், அவையனைத்தும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன. வெளிநாட்டவர்களுக்கு இதுபற்றி என்ன தெரியும்? நாடகத்திற்கேற்ப, எவரிடமும் இந்த ஞானம் இல்லை. ஞானம் பகல் எனவும், பக்தி இரவு எனவும் கூறப்படுகின்றது. பிரம்மாவின் பகலும், இரவும் நினைவுகூரப்படுகின்றது. சத்திய யுகத்தை ஸ்தாபித்தவர் யார்? பிரம்மா எங்கிருந்து வந்தார்? அவர் எவ்வாறு சூட்சும வதனத்திற்குள் வந்தார்? பரமாத்மாவாகிய பரமதந்தையே பிரம்மா காட்டப்பட்டிருக்கின்ற சூட்சுமலோகத்தை உருவாக்கினார். எவ்வாறாயினும், மனித குலத்தின் தந்தையாகிய பிரம்மா அங்கே இருப்பதில்லை. நிச்சயமாக, மனித குலத்தின் தந்தை வேறு ஒருவராகவே இருக்கவேண்டும். அவர் எங்கிருந்து வந்தார்? இவ்விடயங்களை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. உண்மையில், கிருஷ்ணரின் இறுதிப் பிறவியில், கடவுள் அவரைத் தனது இரதமாக்கினார். இதுவும் எவரது புத்தியிலும் இல்லை. இது மிகப்பெரிய வகுப்பு ஆகும். ஓர் ஆசிரியரால் தனது மாணவர் எப்படியிருப்பார் என்பதனைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்பொழுது, தந்தையால் இதனைப் புரிந்துகொள்ள முடியாதா? இது எல்லையற்ற தந்தையின் வகுப்பாகும். இங்கு கற்பிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் தனித்துவமானவை. சமயநூல்களில், பிரளயத்தைக் காண்பித்ததன் மூலம் அவர்கள் பெருமளவு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அவர்கள் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு அமர்ந்திருந்து இராமாயணம், கீதை போன்றவற்றை உபதேசிக்கின்றார்கள் என்பதனைப் பாருங்கள். கிருஷ்ணர் கீதையை உபதேசிக்கவில்லை. அவர் கீதா ஞானத்தைக் கேட்டு, இராஜரீக அந்தஸ்தைப் பெற்றார். இவரே கீதையின் கடவுள் என்பதனை நீங்கள் விளங்கப்படுத்தி நிரூபிக்க வேண்டும். இவை அவரது தெய்வீகக் குணங்கள், இவை கிருஷ்ணரின் தெய்வீகக் குணங்கள். இத்தவறினாலேயே பாரதம் சிப்பியைப் போன்றதாகிவிட்டது. தாய்மாராகிய நீங்கள் அவர்களிடம் கூறலாம்: பெண்கள் நரகத்தின் வாயில்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், பரமாத்மாவோ தாய்மார் மீதே ஞானக் கலசத்தை வைக்கின்றார். தாய்மாரே சுவர்க்கத்தின் வாயில்கள் ஆகுகின்றனர். நீங்கள் எங்களை இகழ்கின்றீர்கள்.” எவ்வாறாயினும், இதனைக் கூறுபவர்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அனைத்துக் கருத்துக்களையும் குறித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு விளங்கப்படுத்தவும் வேண்டும். உண்மையில், பக்தி மார்க்கம் இல்லறத்தவர்களுக்குரியது. இது இல்லறப் பாதைக்குரிய இலகு இராஜயோகமாகும். நாங்கள் இதனை உங்களுக்கு நிரூபிப்பதற்காக வந்திருக்கின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். உங்களது முகத்தைச் சதா மலர்ச்சியாகவும், அசைக்கமுடியாததாகவும், ஸ்திரமாகவும், போதை நிறைந்ததாகவும் வைத்திருங்கள். நீங்கள் மேலும் முன்னேறும்போது, நிச்சயமாகப் புகழப்படுவீர்கள். நீங்கள் அனைவரும் பிரம்மகுமாரர்களும், குமாரிகளுமாவீர்கள். ஒரு குமாரி என்பவர், ஏனையோரைத் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுவதற்குத் தூண்டுபவர் ஆவார். குமாரிகளுக்குப் பெரும் புகழ் உள்ளது. உங்கள் மம்மாவே பிரதான குமாரியாவார். சந்திரனுக்கருகில் மிகச்சிறந்த நட்சத்திரம் ஒன்று தேவைப்படுகின்றது. அவர் ஞான சூரியன் ஆவார். இவரோ, மறைமுகமான தாய் ஆவார். இத்தாய் வேறானவர். குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இந்த இரகசியங்களைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். யாருடைய பெயரில் ஆலயங்கள் கட்டப்பட்டனவோ, அத்தாயானவர் இத்தாயிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். இந்த வயதான, மறைமுகமான தாய்க்கு எந்த ஆலயங்களும் இல்லை. இத்தாயும், தந்தையும் இணைந்திருப்பவர்கள். உலகிலுள்ள எவருமே இதனை அறியார்கள். அது கிருஷ்ணராக இருக்கமுடியாது, ஏனெனில், அவர் சத்தியயுகத்து இளவரசர். கடவுள் கிருஷ்ணரில் பிரவேசிக்க முடியாது. இதனை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. கீதையின் கடவுளின் புகழ் வேறுபட்டது. தூய்மையாக்குபவராகிய அவர் முழு உலகிற்கும் வழிகாட்டியும், விடுதலையளிப்பவரும் ஆவார். கடவுளின் புகழ் நிச்சயமாகக் கிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டது என்பதனையும், அனைவரும் ஒரே புகழைக் கொண்டிருக்க முடியாது என்பதனையும் இப்படங்களிலிருந்து மக்கள் புரிந்துகொள்வார்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாகவும், பெரும் போதை நிறைந்ததாகவும் ஆக்குங்கள். உங்களது முகத்தைச் சதா மலர்ச்சியாக வைத்திருங்கள்.
2. இந்த ஞானத்தின் தூய பெருமையைக் கொண்டிருந்து, தந்தையை வெளிப்படுத்துங்கள். கீதையின் கடவுள் யார் என்பதனை நிரூபித்து, அனைவருக்கும் தந்தையின் உண்மையான அறிமுகத்தைக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
அனைத்து பேறுகளை அனுபவம் செய்வன் மூலம் மாயைக்கு விடை கொடுத்து பாரட்டுக்களைப் பெறுகின்ற சந்தோஷ பாக்கியத்தைக் கொண்டுள்ள ஓர் ஆத்மா ஆகுவீர்களாக.
எவரொருவர் சர்வசக்திவான் தந்தையை தமது சகபாடி ஆக்கியுள்ளார்களோ அவர்கள் எக்காலமும் சகல பேறுகளையும் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் முன்னிலையில் எவ்வகையான மாயையும் வர முடியாது. பேறுகளின் அனுபவங்களில் நிலைத்திருப்பவர்கள் மாயைக்கு விடைகொடுப்பதால், ஒவ்வொரு அடியிலும் பாப்தாதாவிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுகின்றார்கள். எனவே, ஆத்மாக்களாகிய நீங்கள் கடவுளினாலேயே பாராட்டப்படுபவர்கள்; என்பதால் நீங்கள் என்றுமே நினைத்துப் பார்க்காதளவில் பேறுகளைப் பெற்றிருக்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வை பேணுங்கள். நீங்கள் தந்தையை கண்டதும் அனைத்தையும் கண்டு கொண்டீர்கள். நீங்கள் அத்தளவிற்கு பாக்கியசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள்.
சுலோகம்:
ஆதி சுயத்தையும் கடவுளையும் பற்றிய எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு வீணான எண்ணங்கள் இயல்பாகவே முடிவடைகின்றது.